பாஜக தலைவர் அண்ணாமலை இரண்டு வார இடைவெளிக்குப் பிறகு ‘என் மண் என் மக்கள்’ 3-ம் கட்ட யாத்திரையை திருப்பூர் மாவட்டம் அவிநாசி சிந்தாமணியில் கடந்த16-ம் தேதி தொடங்கினார்.
மற்ற இடங்களில் அண்ணாமலைக்கு பூத்தூவி வரவேற்பு கொடுத்த மோடியின் போர்படை தளபதிகள், அவிநாசியில் தீப்பெட்டியும் கையுமாக இருந்தார்கள். அண்ணாமலையை வரவேற்க வந்த பெண்கள் கைகளிலும் தீப்பெட்டியை திணித்தனர். விசேஷமே அந்த தீப்பட்டிகளில் ஒட்டி இருந்த லேபிள் தான்!
’தமிழக வத்திக்குச்சி ஆலைகளை ஊக்குவிக்க சீனா லைட்டர்களை தடை செய்த மத்திய அரசுக்கு நன்றி’ என்ற வாசகங்களுடன் ‘என் மண் என் மக்கள்’ இலச்சினை மற்றும் பிரதமர் மோடி படமும் அந்த லேபிளில் பளிச்சிட்டது. கூடவே, தமிழுக்கும் தமிழகத்துக்கும் பிரதமர் மோடி என்ன செய்தார் என்ற தலைப்பில் 54 பக்கங்கள் கொண்ட மினி புத்தகமும் அண்ணாமலைக்காக காத்திருந்தவர்களுக்கு கொடுத்து மகிழ்ந்தது தாமரை முகாம்.
சாப்பிடக்கூட நேரம் கிடைக்காமல் நள்ளிரவில் ரோட்டோரம் காரை நிறுத்தி காருக்குள் இருந்தபடியே சிற்றுண்டியை பிரிக்கும் அண்ணாமலை, பவானியில் செய்தியாளர்களிடம் பேசுகையில், ‘லியோ’ படத்துக்கு தமிழக அரசு நெருக்கடிகள் கொடுப்பதாகக் குற்றம்சாட்டினார். ‘‘இந்த நடிகரைப் பிடிக்கவில்லையா... நமக்கு பிடிக்காத சித்தாந்தமா... காஷ்மீர் ஃபைல்ஸ் படமா? பிரச்சினை ஏற்படுத்துவோம் என்ற ரீதியில் செயல்படுகின்றனர். இது இன்று நேற்று நடப்பது அல்ல. சினிமாவை சினிமாவாகப் பார்க்க வேண்டும். பிடிக்காத நடிகர்கள், பிடிக்காத படங்களுக்கு கடந்த 20 ஆண்டுகளாகவே திமுகவினர் இப்படித்தான் இடையூறு செய்து வருகிறார்கள்” என்றார்.
அண்ணாமலையின் இந்த பேச்சு குறித்து நம்மிடம் பேசிய திமுக, அதிமுக எதிலும் சாராத அந்தக் காலத்து எம்ஜிஆர் ரசிகர் ஒருவர், பேசிய ‘‘இதுக்கு முன்னாடி ஜெயலலிதா ஆட்சியில ரஜினிகாந்த் நடிச்ச பாட்ஷா படத்துக்கும் பிரச்சினை வந்துச்சு. கமல்ஹாசன் எடுத்த விஸ்வரூபம் படத்துக்கும் இடையூறுகள் ஏற்பட்டுச்சு. ஒரு கட்டத்துல, ‘நாட்டைவிட்டே போயிருவேன்’னு கமல்ஹாசன் வெறுத்துப் போய் சொன்னதையும் நாடே அறியும்.
திராவிட இயக்கத்தைச் சேர்ந்த 5 முதல்வர்கள் சினிமாவோட தொடர்புடையவங்க. சினிமாவின் வலிமையத் தெரிஞ்சவங்க. எத்தனையோ படங்களுக்கு கருணாநிதி கதை வசனம் எழுதிருக்காரு. கதையில எந்த இடத்துல ட்விஸ்ட் வைக்கணும்... வசனங்களை எப்போ எந்தப் பாத்திரத்தை பேச வைக்கணும்... எந்தக் காட்சியில் அடக்கி வாசிக்கணும்கிறதெல்லாம் கருணாநிதிக்கு அத்துபடி.
கதையையே எழுதுறவருக்கு அதை எப்படி எல்லாம் கொண்டுபோகலாம்னு தெரியாதா... அவரு எழுதாத கதை வசனங்களா? சினிமாவோட பலத்தை உணர்ந்தவரு கருணாநிதி. அதனால்தான் சினிமா நடிகர்களை கட்சியில எப்போதுமே கொஞ்சம் தட்டியே வைப்பார்; வளரவிடமாட்டார்.
1973-ல் ‘உலகம் சுற்றும் வாலிபன்’ படம் வந்தப்ப திமுக அரசு கடும் நெருக்கடிகளைக் குடுத்துச்சு. ‘படம் வெளிவந்தாக்க நான் புடவை கட்டிக்கிறேன்’னு திமுகவோட முக்கிய பிரமுகராக இருந்த மதுரை முத்து பகிரங்கமாவே அறிவிச்சாரு. படத்தை ஓட்டாதேன்னு தியேட்டர்காரங்களகூட மிரட்டுனாங்க. மெட்ராஸ்ல போஸ்டர் ஒட்டுறதுக்கு வரியைக் கூட்டுனாங்க. அதனால போஸ்டரே ஒட்டாம மெட்ராஸ்ல ‘உலகம் சுற்றும் வாலிபன்’ ரிலீஸாச்சு.
அதுக்கு அடுத்த வருசம், ‘நேற்று இன்று நாளை’ படத்துக்கும் திமுக அரசாங்கம் நெருக்கடிகளை குடுத்துச்சு. மதுரை சிந்தாமணி மற்றும் மெட்ராஸ் அயனாவரம் சயானி தியேட்டர்கள்ல திரைகள கிழிச்சு கொளுத்துனாங்க. மத்த மத்த ஆளுங்களா இருந்துருந்தா இந்த நெருக்கடிகள பாத்துட்டு சினிமாவை விட்டே ஓடிருப்பாங்க. அரசியல் பக்கமும் தலைவெச்சு படுத்திருக்க மாட்டாங்க. ஆனா, எம்ஜிஆர் எல்லாத்தையும் தாக்குப்பிடிச்சு நின்னாரு.
இந்த வரலாறு எல்லாம் தெரியாம 20 வருசமாத்தான் சினிமா நடிகர்களுக்கு திமுக இடையூறு செய்யுறதா அண்ணாமலை சொல்றாரு. 50 வருசமாவே இதே தொல்லைதான். ஆனா, அந்தப் புத்தகத்தை எல்லாம் அண்ணாமலை வாசிக்கல போலிருக்கு. மொத்தத்துல அண்ணாமலைக்கு இந்த விஷயத்துல வெவரம் பத்தலங்க’’ என்றார்.