ராஜஸ்தானின் 200 சட்டமன்ற தொகுதிகளுக்கும் நவம்பர் 25ம் தேதி வாக்குப்பதிவு நடைபெறவுள்ள நிலையில் காங்கிரஸ் கட்சி, முதல்வர் அசோக் கெலாட், சச்சின் பைலட் உள்ளிட்ட 33 பேர் அடங்கிய முதற்கட்ட வேட்பாளர் பட்டியலை வெளியிட்டுள்ளது.
ராஜஸ்தானில் மொத்தம் 200 சட்டசபை தொகுதிகள் உள்ளன. இதில் ஒரு கட்சி வெற்றி பெற வேண்டும் என்றால் 101 இடங்களில் வெற்றி பெற வேண்டும். தற்போது அங்கு காங்கிரஸ் கட்சியின் ஆட்சி நடக்கிறது. முதல்வராக அசோக் கெலாட் உள்ளார்.
கடந்த 2018ல் தேர்தல் நடந்து முடிந்தது. தற்போது 5 ஆண்டு சட்டசபை காலம் முடிவுக்கு வர உள்ளது. இதனால் ராஜஸ்தானுக்கு தேர்தல் தேதி அறிவிக்கப்பட்டுள்ளது. ராஜஸ்தானில் நவம்பர் 25ம் தேதி ஒரே கட்டமாக சட்டசபை தேர்தல் நடைபெற உள்ளது.
இந்த தேர்தலில் பதிவாகும் ஓட்டுகள் பிற மாநிலங்களை போல் டிசம்பர் 3ம் தேதி எண்ணப்பட்டு முடிவுகள் அறிவிக்கப்பட உள்ளது. ராஜஸ்தானை பொறுத்தவரை காங்கிரஸ்-பாஜக இடையே நேரடி போட்டி நிலவி வருகிறது. ஆட்சியை தக்கவைக்க காங்கிரஸ் கட்சி முயற்சித்து வருகிறது. அதேபோல் பாஜக தலைவர்களும் காங்கிரஸை வீழ்த்தி அரியணை ஏறும் வகையில் தீவிரமாக களப்பணியை தொடங்கி உள்ளது.
இந்த நிலையில் பாஜக மற்றும் ஆம் ஆத்மி கட்சிகள் தங்களது முதற்கட்ட வேட்பாளர் பட்டியலை வெளியிட்ட நிலையில், உட்கட்சி மோதல் காரணமாக காங்கிரஸ் வேட்பாளர் பட்டியல் வெளியிடாமல் காலம் தாழ்த்தியது. இதனை பாஜக விமர்சனத்துக்குள்ளாக்கிய நிலையில், முதல்வர் அசோக் கெலாட், தலைவர் சச்சின் பைலட் உள்ளிட்ட 33 பேர் அடங்கிய முதற்கட்ட வேட்பாளர் பட்டியலை வெளியிட்டுள்ளது.
அதில், முதல்வர் அசோக் கெலாட் சதர்புராவிலும், சச்சின் பைலட் டோங்கிலும், சிபி ஜோஷி நாத்வாராவிலும், திவ்யா மதேர்னா ஓசியனிலும், கோவிந்த் சிங் தோடசரா லாச்மங்கரிலும், கிருஷ்ண பூனியா சதுல்பூரிலும் போட்டியிடுவதாக அறிவிக்கப்பட்டுள்ளது.