சென்னை: தமிழக ரயில்வே திட்டங்களுக்கு நிதி குறைக்கப்பட்டதற்கு கண்டனம் தெரிவித்துள்ள பாமக நிறுவனர் ராமதாஸ், கூடுதல் நிதி ஒதுக்கி 5 ஆண்டுகளில் பணிகளை முடிக்க வேண்டும் என வலியுறுத்திஉள்ளார்.
இது தொடர்பாக பாமக நிறுவனர் ராமதாஸ் தனது சமூக வலைதள பதிவில் கூறியிருப்பதாவது: புதிய ரயில்வே திட்டங்களுக்காக இடைக்கால நிதிநிலை அறிக்கையில் ரூ.875 கோடி ஒதுக்கீடு செய்யப்பட்டிருந்த நிலையில், திருத்தப்பட்ட நிதிநிலை அறிக்கையில் வெறும் ரூ. 246 கோடி மட்டுமே ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளது.
இது 70 சதவீதம் குறைவு ஆகும். திண்டிவனம் - நகரி புதிய பாதை திட்டத்துக்கு ஒதுக்கப்பட்ட நிதி ரூ.350 கோடியில் இருந்து ரூ.153 கோடியாகவும், தருமபுரி - மொரப்பூர் திட்டத்துக்கு ரூ.115 கோடியில் இருந்து ரூ.49 கோடியாகவும் குறைக்கப்பட்டுள்ளது. திண்டிவனம் - திருவண்ணாமலை புதிய பாதை, சென்னை - புதுச்சேரி - கடலூர் கிழக்கு கடற்கரை பாதை உள்ளிட்டவற்றுக்கும் நிதி ஒதுக்கீடு குறைக்கப்பட்டுள்ளது. இதை ஏற்க முடியாது.
மிகவும் பின் தங்கிய நிலையில் உள்ள வட மாவட்டங்களில் அனைத்துத் துறை வளர்ச்சியையும் ஊக்குவிக்க வேண்டும் என்ற நோக்கத்துடன்தான் தமிழகத்தில் நிலுவையில் உள்ள திட்டங்களை பாமக போராடி கொண்டு வந்தது. ஆனால், இந்தத் திட்டங்களுக்கு 15 ஆண்டுகளாக சொல்லிக் கொள்ளும்படி நிதி ஒதுக்கீடு செய்யப்படவில்லை.
தமிழகத்தில் நிலுவையில் உள்ள ரயில்வே திட்டங்கள் அனைத்தையும் அடுத்த 5 ஆண்டுகளில் செயல்படுத்தி முடிக்கும் வகையில் சிறப்புத் திட்டம் வகுத்து, அதன்படி நிதி ஒதுக்கீடு செய்ய மத்திய அரசு நடவடிக்கை எடுக்க வேண்டும். இவ்வாறு சமூக வலைதள பதிவில் ராமதாஸ் தெரிவித்துள்ளார்