முன்னாள் மத்திய அமைச்சரும், திமுக எம்பியுமான ஜெகத்ரட்சகன் தொடர்புடைய இடங்களில் நடத்த சோதனையில் ரூ.400 கோடி மதிப்பிலான கணக்கில் வராத கட்டண ரசீதுகள் கைப்பற்றப்பட்டுள்ளன என்று வருமான வரித்துறை தெரிவித்துள்ளது.
இது தொடர்பாக வருமான வரித் துறை வெளியிட்டுள்ள செய்திக் குறிப்பில், "தமிழகம் மற்றும் புதுச்சேரியில் சுமார் 100 இடங்களில் சோதனை நடத்தப்பட்டது. இந்த சோதனையில் கல்வி நிறுவனங்களில் வரி ஏய்ப்பு புகார்கள் கண்டறியப்பட்டுள்ளன. கல்லூரிகளில் இருந்து ரூ.400 கோடி மதிப்பிலான கணக்கில் வராத கட்டண ரசீதுகள் கைப்பற்றப்பட்டுள்ளன.
இதேபோல், தவறான தகவல்கள் அளித்து ரூ.25 கோடி ஸ்காலர்ஷிப் வழங்கப்பட்டதற்கான ஆதாரங்களும் கைப்பற்றப்பட்டுள்ளன.
இன்னொரு தேடுதலில் கல்வி நிறுவனங்களில் பயில மாணவர்களை ஈர்ப்பதற்காக ஏஜென்ட்டுகள் பயன்படுத்தப்பட்டதும், இதற்காக கணக்கில் காட்டப்படாத கமிஷன் தொகை சுமார் ரூ.25 கோடி வசூல் செய்யப்பட்டதும் கண்டுபிக்கப்பட்டுள்ளது. மதுபான வணிகத்தில் போலி வரவு, செலவு மூலம் ரூ.500 கோடி முறைகேடு செய்யப்பட்டுள்ளது தெரியவந்துள்ளது.
மேலும், கணக்கில் காட்டாத ரூ.300 கோடி, அறக்கட்டளைகளின் வங்கி கணக்கில் இருந்து தனிப்பட்ட கணக்குகளுக்கு மாற்றம் செய்யப்பட்டதற்கான ஆவணங்களும் கைப்பற்றப்பட்டுள்ளன. ஆந்திரப் பிரதேசத்தில் ஒரு தொழில் நிறுவனத்தை கையகப்படுத்துவதற்காக செலுத்தப்பட்ட பணமும் இதில் அடங்கும். இதுவரை நடந்த சோதனையில் கணக்கில் வராத ரூ.32 கோடி ரொக்கமும். ரூ.28 கோடி மதிப்புள்ள தங்கமும் கைப்பற்றப்பட்டுள்ளது.” என தெரிவிக்கப்பட்டுள்ளது.