திரைப்பட நடிகர் ஒருவர் தான் நடித்த படம் ஓடாததால் உருக்கமாக வீடியோ வெளியிட்டு தலைமறைவான சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
கிருஷ்ணகிரி அடுத்த சென்னசந்திரம் கிராமத்தை சேர்ந்த சுரேஷ் என்பவர் “பூ போன்ற காதல்” என்ற படத்தில் கதாநாயகனாக நடித்துள்ளார். இந்த படம் சமீபத்தில் கிருஷ்ணகிரியில் K தியேட்டரில் வெளியானது. ஆனால் படத்திற்கு மக்கள் மத்தியில் வரவேற்பு இல்லை.
இதனால் மன வேதனையில் இருந்து வந்த சுரேஷ், நான்கு நாட்களுக்கு முன்பு வீட்டில் இருந்து வெளியேறி, பின்னர் வீடு திரும்பவில்லை. அவரது செல்போன் செல்போன் சுவிட்ச் ஆப் செய்யப்பட்டிருந்தது. இந்நிலையில் கிருஷ்ணகிரியில் உள்ள லாட்ஜில் அவர் தங்கி இருப்பது குடும்பத்தினருக்கு தெரிய வந்தது.
அங்கு சென்று பார்த்த போது, அவர் வேறு இடத்திற்கு சென்றிருந்தார். இதனையடுத்து அவரது தாய் லட்சுமி காவல் நிலையத்தில் புகார் அளித்தார். அதன் பேரில் போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.
இதனிடையே சுரேஷ் வெளியிட்டுள்ள வீடியோ ஒன்று சமூக வலைத்தளங்களில் வைரலாகி வருகிறது. அதில் எல்லாரும் என்னை மன்னித்து விடுங்கள், இந்த படத்திற்காக 5 லட்ச ரூபாய் கடன் வாங்கினேன். கடன் பிரச்சினை ரொம்ப உள்ளது.
இந்த படத்தை நம்பி இருந்தேன், ஆனால், திரையரங்கிற்கு 20 பேர் கூட வரவில்லை. நாளை நான் கண்டிப்பாக உயிரோடு இருக்க மாட்டேன், நான் உயிரோடு இருக்க வேண்டுமென்றால் தனியார் டிவி சேனல்கள் எனக்கு உதவி செய்ய வேண்டும்.
நான் இறப்பதற்கு முன்பு இந்த செய்தியை போட்டால் படத்தை பார்க்க 100 பேர் வருவார்கள், அப்போதுதான் எனது பிரச்சினை கொஞ்சம் கொஞ்சமாக தீரும், அப்படி இல்லை என்றால் உயிரோடு இருக்க மாட்டேன் என கூறியுள்ளார்.
இந்த வீடியோவை அவர், தான் நடத்தி வரும் யூடியூப் சேனலில் வெளியிட்டுள்ளார். தற்போது, இந்த வீடியோ அடிப்படையில் கிருஷ்ணகிரி நகர போலீசார் தீவிர விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.