முன்னாள் மத்திய இணை அமைச்சர் ஜெகத்ரட்சகன் தொடர்புடைய இடங்களில் நடைபெற்ற சோதனையில் 500 கோடி ரூபாய் போலி கணக்கு காட்டப்பட்டதும், அறக்கட்டளையில் இருந்து 300 கோடி வெவ்வேறு தொழில்களில் முதலீடு செய்யப்பட்டது கண்டுபிடிக்கப்பட்டுள்ளது. சவிதா கல்வி குழுமம் கல்விக் கட்டணத்தில் 400 கோடி ரூபாய் கணக்கு காட்டப்படவில்லை என வருமான வரித்துறை தெரிவித்துள்ளது.
தமிழகம் முழுவதும் இரண்டு கல்விக் குழுமங்கள் தொடர்புடைய 60க்கும் மேற்பட்ட இடங்களில் கடந்த 5ம் தேதி முதல் தொடர்ந்து ஐந்து நாட்கள் வருமானவரித்துறை அதிகாரிகள் சோதனை நடத்தினர். முன்னாள் மத்திய இணை அமைச்சரும், நாடாளுமன்ற உறுப்பினருமான ஜெகத்ரட்சகன் தொடர்பான கல்விக் குழுமம் மற்றும் சவிதா கல்வி குழுமங்களில் இந்த சோதனையானது நடைபெற்றது. அதில் காஞ்சிபுரம் மாவட்டம் தண்டலத்தில் செயல்படும் சவீதா மருத்துவக் கல்லூரி, மற்றும் பல்நோக்கு மருத்துவமனையின் நிறுவனர் வீரய்யனின் ஈரோடு மாவட்டம் கவுந்தர்பாடியில் உள்ள வீடு உட்பட 50 இடங்களில் வருமான வரிசோதனை நடைபெற்றது.
இந்த சோதனையில் 27 கோடி ரூபாய் பணம் மற்றும் 18 கிலோ தங்கக்கட்டிகள் பறிமுதல் செய்யப்பட்டது. கல்வி நிறுவனங்கள் மூலமாக வரும் வருவாயை முறையாக கணக்கு காட்டாமல் வரி ஏய்ப்பு செய்திருப்பது விசாரணையில் கண்டுபிடிக்கப்பட்டுள்ளது. குறிப்பாக பெரிய அளவிலான முக்கிய ஆதாரங்கள், ஆவணங்கள், டிஜிட்டல் டேட்டாக்கள் ஆகியவை கண்டுபிடிக்கப்பட்டு பறிமுதல் செய்யப்பட்டுள்ளதாகவும் சவிதா கல்விக் குழுமம் வரி ஏய்ப்பை எவ்வாறு நிகழ்த்தியுள்ளது என்பது குறித்து விசாரணையில் கண்டுபிடிக்கப்பட்டுள்ளது. கட்டண ரசீதுகளை மறைத்து போலியாக ஸ்காலர்ஷிப் தொடர்பான ஆவணங்களை காட்டி உரிமை கோரி வரி ஏய்ப்பு செய்தது தெரியவந்தது.
பெரிய அளவிலான ஆதாரங்கள் கட்டண ரசீது தொடர்பாகவும் பதிவு செய்யப்படாத கணக்குகள் மற்றும் முறைகேடாக ஸ்காலர்ஷிப் வழங்கிய விவகாரம் தொடர்பாக பல்வேறு ஆவணங்களை ஆய்வு செய்ததில் 400 கோடி ரூபாய்க்கு மேல் கட்டணமாக வசூல் செய்த பணம் கணக்கில் காட்டப்படாதது தெரியவந்துள்ளது.
மேலும் தவறான முறையில் ஸ்காலர்ஷிப் வழங்கியதாக உரிமை கூறி 25 கோடி ரூபாய் அளவிற்கு முறைகேட்டில் ஈடுபட்டதும், 250 கோடி ரூபாய்க்கு மேல் வரி ஏய்ப்பு கணக்கிடப்பட்டிருப்பதாகவும் வருமானவரித்துறை அதிகாரிகள் தரப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது. சவிதா கல்விக் குழுமம் தொடர்பான நிர்வாகிகள் வரி ஏய்ப்பு தொடர்பாகவும், பறிமுதல் செய்யப்பட்ட ஆவணங்களுக்கு பதில் அளிக்கும் வகையில் வருமானவரித்துறை அலுவலகத்தில் விசாரணைக்கு நேரில் ஆஜராக வேண்டும் என அதிகாரிகள் சம்மன் அனுப்பி இருப்பதாக தகவல் வெளியாகியுள்ளது.
இதேபோன்று ஜெகத்ரட்சகன் தொடர்பான கல்வி குழுமங்கள், மருந்து நிறுவனங்கள், மருத்துவமனைகள், ஹோட்டல்கள் தொடர்பான 50க்கும் மேற்பட்ட இடங்களில் நடத்தப்பட்ட வருமானவரி சோதனையில், மாணவர்கள் சேர்க்கைக்காக தரகர்களுக்கு சுமார் 25 கோடி ரூபாய் கமிஷனாக கணக்கில் காட்டப்படாமல் கொடுக்கப்பட்டது கண்டுபிடிக்கப்பட்டது. மேலும் மதுபான ஆலை நிறுவனங்கள் போலியான பாட்டில்கள், ஆல்கஹால் உள்ளிட்ட மதுபானம் தயாரிப்பதற்கு தேவையான பொருட்களை வாங்குவது தொடர்பாக 500 கோடி செலவு கணக்குகளை காட்டியது கண்டுபிடிக்கப்பட்டுள்ளது. இவ்வாறாக பொருட்கள் வாங்கப்பட்டது தொடர்பான கணக்குகள் பதிவு செய்யப்படவில்லை என அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.
பல்வேறு காசோலைகள் இல்லாத பல நிறுவனங்களுக்கு வழங்கப்பட்டது போன்ற ஆதாரங்கள் சிக்கியுள்ளதாகவும் அவ்வாறாக வழங்கப்பட்ட பணத்தை ரொக்கமாக திரும்பப் பெற்று கணக்கில் காட்டாத முதலீடுகள் மேற்கொள்ளப்பட்டதும் கண்டு பிடிக்கப்பட்டுள்ளது. விதிகளை மீறி தொழில் செலவுக்கு என பயன்படுத்தக் கூடாத பல்வேறு விவகாரங்களுக்கு கணக்கு காட்டப்பட்டதும் தெரியவந்துள்ளது.
மேலும் முன்னாள் மத்திய அமைச்சர் ஜெகத்ரட்சகன் நடத்தி வரும் அறக்கட்டளை மூலமாக 300 கோடி ரூபாய்க்கு மேல் பணத்தை முறைகேடாக அறக்கட்டளை நிர்வாகிகளின் தனிப்பட்ட செலவுகளுக்காகவும் வெவ்வேறு தொழில்களுக்கும் பயன்படுத்தியது தெரியவந்துள்ளது. குறிப்பாக ஆந்திராவில் இருக்கும் தொழில் நிறுவனத்திற்கு இந்த பணத்தை செலுத்தியது தெரியவந்தது. ஏற்கெனவே சோதனையின் முடிவில் 4.50 கோடி பணம் 15 கிலோ தங்கமும் பறிமுதல் செய்யப்பட்டதாகவும், மொத்தமாக 1050 கோடி ரூபாய் அளவிற்கு வரி ஏய்ப்பு செய்யப்பட்டதாக தகவல்கள் வெளியாகியுள்ளன. இவ்வாறாக இந்த இரண்டு குடும்பங்களில் இருந்து கணக்கில் காட்டப்படாத 32 கோடி பணம் மற்றும் 28 கோடி ரூபாய் தங்கம் பறிமுதல் செய்யப்பட்டு இருப்பதாக வருமானவரித்துறை தரப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.