பகீர் வீடியோ... கிரிக்கெட் போட்டியின் போது பெயர்ந்து விழுந்த விளம்பர போர்டு!


ஆஸ்திரேலியா மற்றும் இலங்கை அணிகளுக்கு இடையேயான உலகக்கோப்பை போட்டியின் போது மேற்கூரையில் இருந்து விளம்பர போர்டு திடீரென பெயர்ந்து விழுந்ததால் பரபரப்பு ஏற்பட்டது.

ஆஸ்திரேலியா – இலங்கை அணிகளுக்கு இடையேயான நேற்றைய போட்டியில் ஆஸ்திரேலியா வெற்றி பெற்றது. தொடர்ந்து தோல்வியை தழுவி வந்த ஆஸ்திரேலியா அணி, நேற்று வெற்றி பெற வேண்டிய கட்டாயத்தில் இருந்தது. இந்நிலையில் இந்த உலகக்கோப்பை தொடரில் முதல் வெற்றியை பதிவு செய்தது.

இந்நிலையில், நேற்றைய போட்டியின் போது மழை குறுக்கிட்டதால் ஆட்டம் சற்று நேரம் நிறுத்தப்பட்டது. அப்போது பலத்த காற்றும் வீசியது. காற்றின் வேகம் காரணமாக மைதானத்தில் மேற்கூரையில் ஸ்டாண்டோடு வைக்கப்பட்டிருந்த விளம்பர போர்டு பெயர்ந்து கீழே விழுந்தது.

யாரும் எதிர்ப்பார்க்காத போது விளம்பர போர்டு திடீரென விழுந்ததால் ரசிகர்கள் பீதி அடைந்தனர். ஆனால், இதனால் யாருக்கும் எந்த பாதிப்பும் ஏற்படவில்லை. அதுமட்டும் இல்லாமல், போட்டியில் பார்வையாளர்கள் கூட்டம் குறைவாக இருந்ததால் யாருக்கும் எந்த பாதிப்பும் இல்லை.

போர்டு பெயர்ந்து விழுந்த வீடியோ தற்போது சமூக வலைதளங்களில் வைரலாகி வருகிறது. மைதானங்களை முறையாக பராமரிக்க வேண்டும் என கிரிக்கெட் ரசிகர்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.

x