தமிழக முன்னாள் முதலமைச்சர் கலைஞர் கருணாநிதி குறித்து கவிஞர் வைரமுத்துவின் குரலில் டீப் ஃபேக் முறையில் அவதூறு வீடியோ வெளியிட்ட தனியார் நிறுவன பொறியாளர் போலீஸாரால் கைது செய்யப்பட்டுள்ளார்.
தமிழகத்தின் மறைந்த முன்னாள் முதலமைச்சர் கலைஞர் கருணாநிதி பற்றி கவிஞர் வைரமுத்துவின் குரலில் டீப் ஃபேக் வீடியோ ஒன்று எக்ஸ் வலைத்தளத்தில் drsenthil என்ற பெயரில் பதிவிடப்பட்டிருந்தது. இந்த பதிவு திமுகவினர் மத்தியில் பெரும் கொந்தளிப்பை ஏற்படுத்தியது
அதனைத்தொடர்ந்து திமுக மாநில இளைஞரணி துணைச் செயலாளர் இளையராஜா என்பவர் இது குறித்து திருத்துறைப்பூண்டி காவல் நிலையத்தில் புகார் அளித்தார். இது புகார் தொடர்பாக வழக்குப்பதிவு செய்யப்பட்டு காவல் ஆய்வாளர் கழனியப்பன், தலைமையில் உதவி ஆய்வாளர் சரவணன் மற்றும் சைபர் கிரைம் உதவி ஆய்வாளர் கணபதி ஆகியோர் அடங்கிய தனிப்படை அமைக்கப்பட்டது.
சர்சைக்குரிய பதிவு தொடர்பாக ட்விட்டர் வலைத்தளபக்கம் ஆய்வு செய்யப்பட்டதில் சர்ச்சைக்குரிய வீடியோவை பதிவிட்டவர் தஞ்சாவூர் மாவட்டம், திருக்காட்டுப்பள்ளி, தெற்குவாடியகாடை பகுதியில் வசித்து வரும் கோவிந்தராஜன் மகன் செந்தில்நாதன் என்பது தெரியவந்தது. பொறியியல் கல்வி படித்த இவர் பெங்களூரில் உள்ள தனியார் நிறுவனத்தில் பொறியாளராக பணியாற்றி வருகிறார் என்பதும் விசாரணையில் தெரியவந்தது.
அவருடைய சமூகவலைதள பக்கங்களை ஆய்வு செய்ததில் அவர், சர்ச்சைக்குரிய பதிவுகளை பதிவிடுபவர் என்பது உறுதியானது. அதையடுத்து பெங்களுருவில் இருந்த செந்தில்நாதனை கைது செய்த போலீஸார், தீவிர விசாரணைக்கு பிறகு அவரை நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தி சிறையில் அடைத்தனர். இந்த சம்பவம் தஞ்சை மாவட்டத்தில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.