சென்னை மாநகரில் பெண்களின் அவசர பயன்பாட்டுக்காக நடமாடும் ஒப்பனை அறை வாகனத்தை சென்னை மாநகராட்சி அறிமுகப்படுத்தியுள்ளதற்கு பெண்கள் பெரும் வரவேற்பு தெரிவித்துள்ளனர்.
ஒட்டு மொத்த தமிழ்நாட்டில் இருந்தும் சென்னையில் பணியாற்றும் மக்கள் அதிகரிக்கத் தொடங்கியுள்ளனர். அதனால் சென்னையில், அரசு தற்போது பல்வேறு வசதிகளை அறிமுகப்படுத்தி வருகிறது. அந்த வகையில் தமிழகத்திலேயே எங்கும் இல்லாத வகையில் சினிமா நடிகைகள் பயன்படுத்தும் கேரவன்களுக்கு இணையாக சாதாரண பெண்களுக்காக நடமாடும் ஒப்பனை அறைகளை அறிமுகப்படுத்தி இருக்கிறது சென்னை மாநகராட்சி.
தமிழகத்தின் பல்வேறு மாவட்டங்களில் இருந்தும், வெளி மாநிலங்களில் இருந்தும் வேலைக்காகவும், கல்விக்காகவும் பெண்கள் சென்னைக்கு வருகின்றனர். இத்தகைய சூழலில் பொது இடங்கள், பேருந்து நிறுத்தங்கள் போன்ற பகுதிகளில் கழிவறைகள் இல்லாமல் பெண்கள் இன்னல்களுக்கு ஆளாகின்றனர்.
அப்படியே பொது கழிவறைகள் இருந்தாலும் அதனைப் பயன்படுத்த முடியாத நிலையிலும், பாதுகாப்பு உள்ளிட்ட பிரச்சினைகள் இருப்பதாலும் பெரும்பாலான பெண்கள் அந்த கழிவறைகளை பயன்படுத்துவதே கிடையாது. மேலும் கை குழந்தையுடன் வரும் தாய்மார்கள் குழந்தைகளுக்கு தாய்ப்பால் ஊட்ட முடியாமல் அவதிப்படுகிறார்கள்.
இதற்கெல்லாம் முற்றுப்புள்ளி வைக்கும் வகையில் பேருந்து நிறுத்தங்கள் மற்றும் அவசரப் பணிக்காக வெளியில் செல்லும் பெண்களுக்காக சென்னை மாநகராட்சி சார்பில் கடந்த மாதம் இறுதியில் 15 மண்டலங்களில் She Toilet என்ற நடமாடும் ஒப்பனை வாகனங்கள் துவங்கப்பட்டுள்ளது.
இந்த வாகனத்தில் கழிவறை, உடைமாற்றும் சிறு அறை, தாய்ப்பால் ஊட்டும் அறை, முகம் பார்க்கும் கண்ணாடி, சானிட்டரி நாப்கின், சானிடைசர் ஆகியவை இடம் பெற்றுள்ளது. இந்த புதிய திட்டம் பெண்கள் மத்தியில் நல்ல வரவேற்பை பெற்றுள்ளது.
இந்நிலையில், SheToilet குறித்து பேசிய முதல்வர் ஸ்டாலின், சென்னை மாநகராட்சியால் அறிமுகப்படுத்தப்பட்டுள்ள SheToilet எனும் இந்தப் பாராட்டத்தக்க முன்னெடுப்பைத் தூய்மையாகப் பராமரிப்பது நம் அனைவரது பொறுப்பு. அதனை உறுதிசெய்யுமாறு அதிகாரிகளுக்கு உத்தரவிட்டுள்ளேன் என கூறினார்.