எடப்பாடியாருக்கு அடுத்த அக்னி பரீட்சை ஆரம்பம்!


எடப்பாடி பழனிசாமி

பாஜகவை கழற்றிவிட்டதில் நிம்மதி பெருமூச்சு விடுவதற்கு பதில், மூர்ச்சையாகும் அளவுக்கு தேர்தலை நோக்கிய நெருக்கடிகள் எடப்பாடி பழனிசாமியை திணறடித்து வருகின்றன. கட்சியை முழுமையாக கைக்கொண்டது எடப்பாடியின் முதல் வெற்றியாக இருக்கலாம். ஆனால், 2026-ல் தமிழகத்தில் மீண்டும் ஆட்சியை பிடித்து தன்னை நிரூபித்தால் மட்டுமே, எடப்பாடி விசுவாசிகள் சொல்வது போல அடுத்த ஜெயலலிதாவாக அவரால் நீடிக்க முடியும். இப்படி கட்சி - ஆட்சி என சகலமும் சித்தியாக, 2024 மக்களவைத் தேர்தலையே எடப்பாடி பழனிசாமி ஏகமாய் நம்பி இருக்கிறார்.

ஆனால், திமுகவுக்கு எதிரான பலமான கூட்டணியை கட்டமைப்பது எடப்பாடி முன்னுள்ள முக்கிய சவாலாக நிற்கிறது. அடுத்த சவாலாக பிரதமர் வேட்பாளர் முகமின்றி மக்களவைத் தேர்தலை எதிர்கொள்ளும் விநோதத்துக்கும் அதிமுகவை ஆளாக்குகிறார். எனவே, தமிழக கூட்டணி கட்சிகளுக்கு கதவையும், டெல்லி பாஜகவுக்கு ஜன்னலையும் திறந்து வைத்துவிட்டு வழிமேல் விழிவைத்துக் காத்திருக்கிறார் எடப்பாடி. அதிமுகவுக்கு இந்த மக்களவைத் தேர்தல் பெரும் பொருட்டில்லை என்றபோதும், எடப்பாடி பழனிசாமிக்கு இதுவே ஓர் அக்னி பரீட்சையாக காத்திருக்கிறது.

அதிமுக கூட்டணி தேறுமா?

டஜன் கட்சிகளுடன் பெருத்திருக்கும் திமுக கூட்டணியில், சீட்டு பேரத்தில் முட்டிக்கொள்ள வாய்ப்பாகும் கட்சிகள் மீது முதற்கண் கண் வைத்திருக்கிறார் எடப்பாடியார். காங்கிரஸ் அங்கிருந்து பிரிந்து வர வாய்ப்பில்லை; விசிக சீட்டு பேரத்துக்கு வேண்டுமானால் போக்குக் காட்டும். இவர்களுக்கு அப்பால் இடதுசாரிகள் மற்றும் சிறுபான்மை கட்சிகள் உள்ளிட்டவை, சீட்டு எண்ணிக்கை அல்லது விரும்பிய தொகுதி படியாது போனால் அதிமுகவையே நிச்சயம் பரிசீலிக்கும் என எடப்பாடியார் நம்புகிறார்.

இந்த கட்சிகளுக்கு அப்பால், மக்களவைத் தேர்தலில் திமுக இதயத்தில் மட்டுமே இடம் வாய்க்கப்பெரும் கட்சிகளை, பசையான ஆசை காட்டி அதிமுக இழுக்கக் காத்திருக்கிறது. அவை உட்பட சகல கட்சிகளுக்கும் அதிமுக கதவுகளை அகலத் திறந்து வைத்திருக்கிறது. முக்கியமாக, மதில் மேல் பூனையாக இருக்கும் பாமக, விசிகவை கைவிடாத திமுக கூட்டணியை புறக்கணித்து, தங்கள் பக்கம் தாவும் என்ற நம்பிக்கையிலும் அதிமுக இருக்கிறது. இது தவிர்த்து உதிரிகளை அள்ளிப்போட்டு கூட்டணியை ஊதிப்பெருக்கிக் காட்டவும் அதிமுக தயாராக இருக்கிறது.

எடப்பாடி பழனிசாமி

திமுக தாக்குப் பிடிக்குமா?

மத்தியில் மீண்டும் பாஜக ஆட்சிக்கு வருவதை தடுப்பதுதான் இந்தியா கூட்டணியின் நோக்கம். அதில் பிரதான அங்கம் வகிக்கும் திமுகவும், தமிழ்நாட்டுக்கு வெளியே அப்படித்தான் முழக்கமிட்டு வருகிறது. ஆனால், தமிழ்நாட்டுக்கு உள்ளாக இந்த மக்களவைத் தேர்தலை முன்வைத்து, பலவகையிலும் திமுக தன்னை நிரூபித்தாக வேண்டிய நெருக்கடியை உணர்ந்துள்ளது. 2 வருட ஆட்சியில் அதிருப்தி அலை வெகுவாய் எழுந்திருப்பதாய் எதிர்க்கட்சிகள் இடித்துரைப்பதை திமுக உடைக்க விரும்புகிறது. அது மட்டுமன்றி, 2026 சட்டப்பேரவைத் தேர்தலுக்கான அரையிறுதிப் போட்டியாகவும் மக்களவை தேர்தலை திமுக பார்க்கிறது.

அதிருப்தி அலையை நாடி பிடித்த பின்னரே, அதனை தடுத்தாண்டு எதிர்கொள்ள முடிவு செய்தது திமுக. மகளிர் உரிமைத் தொகை, பள்ளி மாணவருக்கான காலை உணவுத் திட்டம் உள்ளிட்டவற்றில் மக்களின் நம்பிக்கையை மீண்டும் பெற்றிருப்பதாய் நம்புகிறது திமுக. கெட்ட பெயர் உருவாக்கிய சிறிய, பெரிய தலைகளை கட்சித் தலைமை தட்டி வைத்திருக்கிறது.

டெல்லியில் திமுக குரலை தொடர்ந்து ஒலிக்கச் செய்ய இம்முறையும் கணிசமான எம்பி-க்களை அனுப்ப திமுக திண்ணமாக இருக்கிறது. ஒருவேளை, மீண்டும் பாஜகவே ஆட்சியில் அமரும் சூழல் நேர்ந்தால், திமுக எம்பி-க்களின் மக்களவை பலமும், குரலும் மேலும் தவிர்க்க முடியாததாகி விடும். இத்தனை மும்முரம் காட்டும் திமுகவின் மக்களவைத் தேர்தல் வியூகங்களை எதிர்கொள்வதும் எடப்பாடியார் முன்னே இன்னொரு சவாலாக நிற்கிறது.

பாஜக இறங்கி வருமா?

தமிழக முதல்வர், எதிர்க்கட்சித் தலைவர் என கடந்த 7 வருடங்களில் காணக்கிடைக்காத எடப்பாடி பழனிசாமி, இப்போது அதிமுக தொண்டர்கள் முன்னே வேறாக விஸ்வரூபம் எடுத்திருக்கிறார். பாஜக உறவை அதிமுகவே முன்வந்து முறித்துக்கொண்டதில், எடப்பாடியார் இறங்கி அடித்திருப்பதாக ரத்தத்தின் ரத்தங்கள் தெம்பாகி நிற்கிறார்கள். பாஜக தலைவர் அண்ணாமலையின் ஏகடியம் முதல், டெல்லி தலைமையின் அலட்சியம் வரை அதிமுகவினரின் புண்பட்ட மனங்களுக்கு எடப்பாடியார் புனுகு தடவியிருக்கிறார்.

எடப்பாடி பழனிசாமி

தமிழக பாஜகவுடனான கூட்டணியை முறித்ததன் மூலம் அதன் டெல்லி தலைமைக்கும் அதிர்ச்சி தந்திருக்கிறார் எடப்பாடியார். ’இந்தியா கூட்டணி’ எப்போது உடையும் எனக் காத்திருந்த பாஜக தலைமையை, தங்கள் கூட்டணியின் பிரதான கட்சியான அதிமுக தங்களை கழற்றி விட்டது உள்ளூர அதிரச் செய்திருக்கிறது. மக்களவைத் தேர்தல் நெருக்கத்தில் மத்திய விசாரணை அமைப்புகளை வழக்கமான வேகத்தில் பாய்ச்ச இயலாது என்ற கணிப்பில், அதிமுக துணிச்சலாக எகிறியிருக்கிறது. அப்படியே அமலாக்கத்துறை அதிமுக மீது பாய்ந்தாலும், இதுநாள் வரை அதிமுக சுமந்த களங்கத்தை கழுவவும், மக்கள் மத்தியில் அனுதாப அலையை உருவாக்கவுமே அது வித்திடும். எனவேதான், பாஜக தானாக இறங்கி வரட்டும் என, அதற்கான ஜன்னலை திறந்து வைத்திருக்கிறார் எடப்பாடியார்.

எடப்பாடியார் அகலத் திறந்து வைத்திருக்கும் கதவும், சாளரமும் அதிமுகவுக்கு அனுகூலம் தருமா?

இதையும் வாசிக்கலாமே...

x