தமிழக காங்கிரஸ் கட்சிக்கு பிரியங்கா காந்தியை பொறுப்பாளராக போட வேண்டும் என்று சோனியா காந்தியிடம் மூத்த நிர்வாகிகள் வலியுறுத்தி கேட்டுக் கொண்டுள்ளனர்.
சென்னை வந்துள்ள அகில இந்திய காங்கிரஸ் கட்சியின் முன்னாள் தலைவர் சோனியா காந்தியும், கட்சியின் பொது செயலாளருமான பிரியங்கா காந்தியும் தமிழக காங்கிரஸ் நிர்வாகிகளுடன் கிண்டி நட்சத்திர ஓட்டலில் இன்று ஆலோசனை நடத்தினர். அப்போது, கட்சியினர் ஒற்றுமையுடன் செயல்பட வேண்டும் என்றும் தமிழகத்தில் காங்கிரஸ் கட்சியை வலுப்படுத்த எல்லோரும் இணைந்து செயல்பட வேண்டும் என்றும் அறிவுறுத்தி கேட்டுக்கொண்டார்.
அப்போது, காங்கிரஸ் கட்சியின் மூத்த நிர்வாகிகள், தமிழக காங்கிரஸ் கட்சிக்கு பிரியங்கா காந்தியை பொறுப்பாளராக அறிவிக்க வேண்டும் என்றும் கட்சியில் இருக்கும் கோஷ்டிப்பூசலை தடுக்க பிரியங்கா காந்தியின் தலையீடு வேண்டும் என்றும் வலியுறுத்திக் கேட்டுக்கொண்டனர். இதற்கு பதில் அளித்த சோனியா காந்தி, தேர்தல் வரை பிரியங்கா காந்தி அடிக்கடி சென்னை வந்து கட்சி பணிகளை கவனிப்பார் என்று உறுதி அளித்தார்.