ஆவினில் 6,000 லிட்டர் கெட்டுப்போன பால் - மதுரையில் திருப்பி அளிப்பு


மதுரை: மதுரையில் ஆவின் மூலம் நுகர்வோருக்கு வழங்கிய பால் பாக்கெட் சுமார் 6 ஆயிரம் லிட்டருக்கு மேல் கெட்டுப் போனதால் இன்று பால் முகவர்கள் ஆவினில் வந்து மாற்றி சென்றனர்.

மதுரை ஆவினில் தினமும் சுமார் இரண்டரை லட்சம் லிட்டர் பாலை பதப்படுத்தி நுகர்வோருக்கு விநியோகம் செய்யப்படுகிறது. இதில் மொத்த பணியாளர்களில் 20% கூட நிரந்தர பணியாளர்கள் இல்லை. பால் உற்பத்தி உட்பட அனைத்து பிரிவுகளிலும் ஒப்பந்த பணியாளர்களே உள்ளனர். இந்நிலையில் இன்று காலையிலிருந்து மதியம் வரை சுமார் 6 ஆயிரம் லிட்டருக்கு மேல் பால் பாக்கெட்டுகளை நுகர்வோர்கள் திருப்பி கொடுத்தனர். இதனால் முகவர்கள் ஆவின் நிறுவனத்தில் வந்து மாற்றிச் சென்றுள்ளனர்.

இது குறித்து தமிழக கூட்டுறவு சங்க ஊழியர் சங்க பொதுச் செயலாளர் துரைசாமி கூறுகையில், "மதுரை ஆவினில் அதிகாலை பால் நுகர்வோருக்கு விநியோகம் செய்யப்பட்ட டிலைட் எனும் ‘கவ் மில்க்’ 200 மிலி மற்றும் 500 மிலி பால் பாக்கெட்டுகள் கெட்டுப்போனதாக ஆயிரக்கணக்கான நுகர்வோரிடமிருந்து புகார்கள் வந்தது.

அதன்படி முகவர்கள் கெட்டுப்போன பால் பாக்கெட்டுகளை நுகர்வோரிடமிருந்து பெற்று ஆவின் நிறுவனத்திற்கு வந்து மாற்றிச் சென்றனர். ஒப்பந்தப் பணியாளர்களே உற்பத்தி பிரிவில் உள்ளதால் அவர்கள் மீது சட்டப்படி நடவடிக்கை எடுக்க வாய்ப்பில்லை. எனவே நிரந்தர பணியாளர்களை நியமித்து தரமான பால் உற்பத்தி செய்ய நடவடிக்கை எடுக்க வேண்டும்" என்று துரைசாமி கூறினார்.

x