கூட்டத்தை புறக்கணித்த திமுக, காங். கவுன்சிலர்கள் 43 பேருக்கு கும்பகோணம் மேயர் நோட்டீஸ்!


கும்பகோணம்: கும்பகோணம் மாநகராட்சியில் வளர்ச்சி பணிகள் குறித்த ஆலோசனைக் கூட்டத்தைப் புறக்கணித்த திமுக, காங்., கவுன்சிலர்கள் 43 பேருக்கு விளக்கம் கேட்டு மேயர் க.சரவணன் கடிதம் அனுப்பி உள்ளார்.

கும்பகோணம் மாநகராட்சி கூட்டரங்கில், மாநகராட்சி பகுதிகளில் மேற்கொள்ள வேண்டிய பணிகள் தொடர்பாக ஆய்வுக் கூட்டம் 8-ம் தேதி நடைபெற்றது. இதில், அதிமுக, மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சிகளைச் சேர்ந்த 4 மாமன்ற உறுப்பினர்கள் மட்டுமே பங்கேற்றனர். துணை மேயர் உட்பட திமுக, காங்கிரஸ் கூட்டணி கட்சிகளைச் சேர்ந்த 43 மாமன்ற உறுப்பினர்கள் கூட்டத்தை புறக்கணித்தனர்.

இந்நிலையில், இந்தக் கூட்டத்தைப் புறக்கணித்த 43 கவுன்சிலர்களுக்கு, மாநகராட்சி மேயர் க.சரவணன் விளக்கம் கேட்டு கடிதம் அனுப்பியுள்ளார். இது குறித்து நம்மிடம் பேசிய மேயர் க.சரவணன், “வார்டுகளில் நடைபெறுகின்ற, நிலுவையில் உள்ள பணிகள், புதிய பணிகள் உள்ளிட்டவை தொடர்பான ஆலோசனைக் கூட்டம் என்பது அனைத்து வார்டுகளில் நடைபெறும் பணிகள் குறித்து, அனைவருக்கும் வெளிப்படையாகத் தெரிய வேண்டும் என்பதற்காக நடத்தப்பட்டது.

ஆனால் துணை மேயர், காங்கிரஸ் மற்றும் கூட்டணி கட்சியைச் சேர்ந்த 43 கவுன்சிலர்கள் இந்தக் கூட்டத்தைப் புறக்கணித்தனர். இதற்கான தன்னிலை விளக்கக் கடிதத்தை 2 நாட்களுக்குள் அனுப்பி வைக்க வேண்டும் என அவர்களுக்கு கடிதம் அனுப்பியுள்ளேன். அவர்கள் அனுப்பும் பதில் கடிதத்தையும், நடைபெற்று முடிந்த கூட்டம் குறித்த கடிதத்தையும் இணைத்து, அந்தந்த கட்சித் தலைமைக்குப் புகார் அனுப்பப்படும்” என்றார்.

x