சட்டப்பேரவையில் இன்று காவிரி விவகாரம் தொடர்பாக முதல்வர் ஸ்டாலின் கொண்டு வந்த தனித் தீர்மானத்தில் ஒரு சில வரிகளை சேர்க்க வேண்டும் என வானதி சீனிவாசன் வலியுறுத்திய நிலையில், அதற்கு சபாநாயகர் முதல்வரின் தனித் தீர்மானத்திற்கு பாஜக எதிர்ப்பு என தெரிவித்தால் பேரவையில் வானதி சீனிவாசன் கூச்சலிட்டார்.
காவிரியில் இருந்து தமிழகத்திற்கு கர்நாடகா அரசு தண்ணீர் திறக்க மத்திய அரசு உத்தரவிட வேண்டுமென வலியுறுத்தி முதல்வர் தனித்தீர்மானம் கொண்டு வந்தார். இந்த தீர்மானத்தின் மீது பேசிய வானதி சீனிவாசன், ‘’முதல்வர் கொண்டு வந்த தீர்மானம் உள்நோக்கம் கொண்டது. மத்திய அரசை மட்டும் வலியுறுத்துவதாக கூறுவது எப்படி ஏற்புடையதாக இருக்கும்’’ என கூறி எதிர்ப்பு தெரிவித்தார்.
உடனடியாக தலையிட்டு பேசிய முதல்வர், அரசியல் உள்நோக்கம் கிடையாது வானதி மற்றும் என்னுடைய பேச்சை அவைக்குறிப்பில் இருந்து நீக்க வேண்டுமென கோரிக்கை வைத்தார். அதன்படி நீக்கப்பட்டது. இதனைத் தொடர்ந்து பேசிய சபாநாயகர், தனித் தீர்மானத்திற்கு ஆதரவு அல்லது இல்லை என கூறுங்கள் என்றார். ஆனால் தொடர்ந்து வானதி பேசியதால், ’வானதி சீனிவாசன் கர்நாடகாவில் இருந்து தண்ணீர் திறந்துவிடக்கூடாது என தனித்தீர்மானத்திற்கு எதிர்ப்பு’ என சபாநாயகர் கூறினார். இதனால் ஆவேசமான வானதி சீனிவாசன் தான் அப்படி கூறவில்லை என கூறி வெளிநடப்பு செய்தார்.