‘எந்த குற்றமும் செய்யவில்லை; நான் நிரபராதி’ - குற்றச்சாட்டுகளுக்கு செந்தில் பாலாஜி மறுப்பு: விசாரணை தள்ளிவைப்பு


செந்தில் பாலாஜி | கோப்புப்படம்

சென்னை: சட்டவிரோதப் பண பரிவர்த்தனை தொடர்பான வழக்கில், நேற்றுஆஜர்படுத்தப்பட்ட முன்னாள் அமைச்சர் செந்தில் பாலாஜியிடம் நீதிபதி எஸ்.அல்லி குற்றச்சாட்டுகளைப் பதிவு செய்தபோது, ‘எந்தக் குற்றமும் செய்யவில்லை; நான் நிரபராதி’ என செந்தில் பாலாஜி மறுத்தார்.

சட்டவிரோதப் பண பரிமாற்ற தடைச்சட்ட வழக்கில் அமலாக்கத் துறையால் கடந்தாண்டு ஜூன் மாதம் கைது செய்யப்பட்ட முன்னாள் அமைச்சர் செந்தில் பாலாஜி,குற்றச்சாட்டு பதிவுக்காக, சென்னை முதன்மை அமர்வு நீதிமன்றத்தில் நீதிபதி எஸ்.அல்லி முன்பாக நேற்று ஆஜர்படுத்தப்பட்டார்.

அப்போது செந்தில் பாலாஜி தரப்பில் வழக்கறிஞர் என். பரணிக்குமாரும், அமலாக்கத் துறை தரப்பில் சிறப்பு அரசு வழக்கறிஞர் என்,ரமேஷும் ஆஜராகியிருந்தனர்.

உடல்நலக்குறைவு காரணமாக குளுக்கோஸ் ஏற்றுவதற்காக போடப்பட்ட ஊசி பொருத்திய கையுடன் ஆஜரான செந்தில் பாலாஜியிடம், அமலாக்கத் துறைதரப்பு குற்றச்சாட்டுகளை நீதிபதிஅல்லி முதலில் ஆங்கிலத்திலும், பின்னர் தமிழிலும் ஒவ்வொன் றாக படித்துக்காட்டி, குற்றச்சாட்டு களைப் பதிவு செய்தார். அப்போது ‘அந்த குற்றச்சாட்டுகளை நீங்கள் ஒப்புக்கொள்கிறீர்களா?’ என நீதிபதி கேள்வி எழுப்பினார்.

அதற்கு பதிலளித்த செந்தில் பாலாஜி, ‘‘நான் எந்தக் குற்றமும்செய்யவில்லை. நான் நிரபராதி.இந்த வழக்கு அரசியல் காழ்ப்புணர்ச்சியால் எனக்கு எதிராக பொய்யாகப் புனையப்பட் டது’’ என்று தெரிவித்தார்.

மேலும், அமலாக்கத் துறையின் குற்றச்சாட்டுகளை மறுப்பதாக தெரிவித்த செந்தில் பாலாஜி, ‘‘என் மீதான குற்றச்சாட்டுகளுக்கு ஆதாரமில்லை. எனக்கு எதிரான சாட்சிகளை குறுக்கு விசாரணை செய்ய விரும்புகிறேன். நான் குற்றவாளி அல்ல’’ என்று தெரிவித்தார்.

அதையடுத்து, சாட்சிகளின் குறுக்கு விசாரணைக்காக இந்தவழக்கை ஆக.16-க்கு தள்ளி வைத்தநீதிபதி எஸ்.அல்லி, அதுவரை செந்தில் பாலாஜியின் நீதிமன்றக் காவலையும் நீட்டித்து உத்தரவிட்டார்.

குற்றச்சாட்டுப் பதிவு முடிந்ததும் புழல் சிறைக்கு செந்தில் பாலாஜி கொண்டு செல்லப்பட்டார்

x