கடலூர் டாக்ரோஸ் தொழிலாளர்கள் ஊதிய உயர்வு பிரச்சினை: முதல்வருக்கு தபால் அனுப்பும் போராட்டம்


கடலூர்: டாக்ரோஸ் தொழிலாளர்கள் வேலை நிறுத்த போராட்டத்தில் தமிழக முதல்வர் தலையிடக் கோரி தபால் அனுப்பும் போராட்டம் நடைபெற்றது.

கடலூர் சிப்காட் வளாகத்தில் உள்ள டாக்ரோஸ் கெமிக்கல்ஸ் இந்தியா நிறுவனத்தில் பணிபுரியும் தொழிலாளர்களின் ஊதிய ஒப்பந்தம் நிறைவு பெற்றுள்ளது. இதனைதொடர்ந்து 29 மாதங்களாக ஊதிய உயர்வு பேச்சுவார்த்தை தொடங்காமல் நிர்வாகம் காலம் கடத்தி வருகிறது,

ஊதிய உயர்வு ஒப்பந்தப் பேச்சுவார்த்தையை உடனே தொடங்க வலியுறுத்தி தொழிலாளர்கள் கடந்த 23ம் தேதி முதல் வேலை நிறுத்த போராட்டத்தில் ஈடுபட்டு வருகின்றனர். அப்படியும் நிர்வாகம் தொழிற்சங்கங்களை பேச்சுவார்த்தைக்கு அழைக்கவில்லை. இந்த நிலையில், போராட்டத்தில் ஒரு பகுதியாக சிஐடியு மற்றும் டிவிஎஸ் தொழிற்சங்கங்கள் சார்பில் கடலூர் மஞ்சக்குப்பம் தலைமை தபால் நிலையத்தில் முதல்வருக்கு தபால் அனுப்பும் போராட்டம் இன்று நடைபெற்றது.

முதல்வருக்கு அனுப்பிய அந்தக் கடிதத்தில், டாக்ரோஸ் கெமிக்கல் இந்தியா நிறுவனம் பல கோடி ரூபாய் லாபத்தில் இயங்கி வருகிறது. இந்த நிறுவனம் தொழிலாளர்களுக்கு ஊதிய உயர்வு வழங்காமல் 29 மாத காலமாக காலம் தாழ்த்தி வருகிறது. ஊதிய உயர்வு வழங்க வலியுறுத்தி வேலை நிறுத்தப் போராட்டம் நடைபெற்று வருகிறது.

ஆபத்தான ரசாயன தொழிற்சாலையில் பயிற்சி இல்லாத ஒப்பந்த தொழிலாளர்களை வைத்து சட்டவிரோதமாக தொழிற்சாலை இயக்குகிறார்கள். சட்டவிரோத நடவடிக்கையில் ஈடுபட்டு வரும் டாக்ரோஸ் நிர்வாகத்தின் மீது நடவடிக்கை எடுத்திடவும், தொழிலாளர்களுக்கு நியாயமான ஊதிய உயர்வு கிடைத்திடவும், தமிழக முதல்வர் தலையிட்டு நடவடிக்கை எடுக்க வேண்டும்" என்று தொழிலாளர்கள் வலியுறுத்தியுள்ளனர்.

x