கட்சி பெயரைக்கூட சொல்லவில்லை...அதிமுக குறித்த கேள்விகளுக்கு அடக்கி வாசித்த அண்ணாமலை!


பாஜக மாநில தலைவர் அண்ணாமலை

2024 நாடாளுமன்ற தேர்தலில் தமிழ்நாட்டில் திமுகவுக்கும், பாஜகவுக்கும் இடையே தான் போட்டியே என பாஜக மாநில தலைவர் அண்ணாமலை தெரிவித்துள்ளார்.

சென்னையில் நடைபெற்ற ஆலோசனை கூட்டத்தில் பங்கேற்ற பின் அவர் செய்தியாளர்களிடம் கூறுகையில், “ 2024 தேர்தலை என்டிஏ கூட்டணியை முன்வைத்து சந்திப்போம். பாஜக மிகப்பெரிய மாற்றத்தை முன்னெடுக்கும். வாக்கு சதவீதம் பார்ப்பீர்கள். ஒவ்வொரு கட்சியும் தங்கள் வளர்ச்சியை தான் பார்ப்பார்கள். கூட்டணி உள்ளதா இல்லையா என்பது குறித்து நான் கவலைப்படவில்லை. பிரதமர் மோடிக்கான தேர்தல் இது. நிச்சயம் அவர் வெல்வார்.

என் மீது அரசியல் கட்சிகள் பல குற்றச்சாட்டுக்களை முன்வைக்கின்றனர். அதை நான் பொருட்ப்படுத்துவது இல்லை. நான் சொன்ன தகவல் குறித்து கருத்து தெரிவிக்க விரும்பவில்லை. 2024-ம் ஆண்டு தேர்தல் எங்களுக்கான தேர்தல். தமிழ்நாட்டில் ஆட்சியில் உள்ள திமுகவிற்கும், பாஜகவுக்குமான தேர்தல் இது. 2024 தேர்தல் முடிவு தான் யார் வளர்ச்சிக்கு யார் தடையாக இருந்தார்கள் என்பது தெரியவரும்.

தேர்தல் முடிந்தால் யாருக்கு மக்களிடம் ஆதரவு என்பது தெரியவரும். திமுகவா, பாஜகவா என்ற சவாலை தான் முன்வைக்கிறோம்.

பாஜக மாநில தலைவர் அண்ணாமலை

1998-ல் பாஜக தலைமையில் தான் தேசிய ஜனநாயக கூட்டணி உருவானது. இதுவரை பாஜக தான் அதற்கு தலைமை ஏற்றுள்ளது. 10 ஆண்டுகளாக பாஜக செய்த ஆட்சியையும், 35 மாதங்களாக ஆட்சியில் உள்ள திமுகவுக்கும் இடையே தான் போட்டியே. கூட்டணி குறித்து நேரம் வரும் போது தெரிவிப்பேன். தேசிய ஜனநாயக கூட்டணியின் தலைவர் ஜே.பி.நட்டா தான். அவர் தான் கூட்டணி விரிவாக்கம் மற்றும் புதிய கட்சிகள் இணைப்பு குறித்து முடிவு செய்வார்.

யாருடன் சண்டை என்பது குறித்து பாஜக தெளிவாக உள்ளது. பாஜக, திமுக கட்சிகள் மக்களிடம் ரிப்போர்ட் கார்டை முன்வைத்து தேர்தலைச் சந்திப்போம். எந்த கட்சி கூட்டணியில் இருக்கிறது என்பதை மாற்றத்தை ஏற்படுத்தாது. மிகுந்த ஆலோசனைக்குப் பிறகே கூட்டணி குறித்து அனைத்து கட்சிகளும் முடிவு செய்யும்” என்றார்.

பாஜக மாநில தலைவர் அண்ணாமலை

இந்த செய்தியாளர் சந்திப்பின் போது, அதிமுக என்ற பெயரை கூறாமல் அண்ணாமலை தவிர்த்தார். மேலும் அதிமுக தலைவர்கள், நத்தம் விசுவநாதன் உள்ளிட்டோர் கூறிய கருத்துக்களுக்கும், அதிமுகவுடனான கூட்டணி குறித்த கேள்விகளுக்கும் அண்ணாமலை பதிலளிக்கவில்லை என்பது குறிப்பிடத்தக்கது.

இதையும் வாசிக்கலாமே...

யூடியூப் சேனலை மூடிவிட்டு, பைக்கை எரிச்சுடுங்க... டிடிஎஃப் வாசனிடம் ஆவேசமான நீதிபதி!

ஆசிய விளையாட்டுப் போட்டி; தங்கம் வென்று திருச்சி டிக்கெட் கலெக்டர் சாதனை!

x