சென்னை கிரீன்வேஸ் சாலை இல்லத்தில் முன்னாள் முதலமைச்சர் ஓ.பன்னீர்செல்வம் தனது ஆதரவாளர்களுடன் நேற்று ஆலோசனை நடத்தினார். இந்த கூட்டத்தில் பண்ருட்டி ராமச்சந்திரன், வைத்திலிங்கம், மனோஜ் பாண்டியன் உள்ளிட்டோர் பங்கேற்றனர். சுமார் 2 மணி நேரம் நடைபெற்ற கூட்டத்தில் பல்வேறு விவகாரங்கள் குறித்து ஆலோசிக்கப்பட்டது.
இதனைத்தொடர்ந்து, செய்தியாளர்களை சந்தித்த பண்ருட்டி ராமச்சந்திரன் கூட்டத்தில் தற்போதைய அரசியல் சூழ்நிலை குறித்து விரிவாக விவாதித்ததாகவும், ஓ.பன்னீர் செல்வம் தலைமையில் அக்டோபர் 11ம் தேதி தலைமை கழக நிர்வாகிகள் மற்றும் மாவட்ட செயலாளர்கள் கூட்டம் நடத்தப்படும் என்று கூறினார். கட்சிக்கான உறுப்பினர் சேர்ப்பு பணியை தீவிரப்படுத்த முடிவு செய்துள்ளதாகவும், மக்களவைத் தேர்தல் பணிகள் குறித்து மாவட்டச் செயலாளர்கள் கூட்டத்தில் ஆலோசிக்கப்படும் என்றும் தெரிவித்தார்.
தொடர்ந்து, கூட்டணி தொடர்பான கேள்விக்கு பதில் அளித்த அவர், பாஜக தலைமையுடன் தற்போது வரை தொடர்பில் இருந்து வருவதாகவும், கூட்டணி குறித்து உரிய நேரத்தில் அறிவிக்கப்படும் என்றும் தெரிவித்தார். அதேநேரம், தமிழகத்தில் மூன்றாவது அணி அமையுமா என்ற கேள்விக்கு, பொறுத்திருந்து பார்ப்போம் என்று பதிலளித்தார்.