சென்னை: சென்னையில் இருந்து லண்டன் செல்லும் பிரிட்டிஷ் ஏர்வேஸ் விமானம் இயந்திரக் கோளாறு காரணமாக திடீரென ரத்து செய்யப்பட்டதால் பயணிகள் அவதியடைந்து வருகின்றனர்.
லண்டனில் இருந்து சென்னை வரும் பிரிட்டிஷ் ஏர்வேஸ் பயணிகள் விமானம், தினமும் அதிகாலை 3.30 மணிக்கு, லண்டனில் இருந்து சென்னைக்கு வந்துசேரும். அதன் பின்பு சென்னையில் இருந்து உடனடியாக அதிகாலை 5.35 மணிக்கு, லண்டன் புறப்பட்டு செல்லும்.
இந்த நிலையில் வழக்கம் போல அந்த விமானம் நேற்று இரவு சுமார் 240 பயணிகளுடன் லண்டனில் இருந்து புறப்பட்டு, சென்னை நோக்கி வந்து கொண்டிருந்தது. அப்போது நடுவானில் திடீரென விமானத்தில் இயந்திரக் கோளாறு ஏற்பட்டது. இதன் காரணமாக, அந்த விமானம் லண்டனுக்கே திரும்பிச் சென்று விட்டதால், சென்னை - லண்டன் விமானம் திடீரென ரத்து செய்யப்பட்டுள்ளது.
விமானம் திடீரென ரத்து செய்யப்பட்டதால், சென்னையில் இருந்து லண்டன் செல்ல தயாராக இருந்த 210 பயணிகள் தவித்துப் போனார்கள். இதனையடுத்து சிலர் துபாய், தோகா, அபுதாபி வழியாக லண்டனுக்கு மாற்று விமானங்களில் புறப்பட்டுச் சென்றனர். மற்ற பயணிகள் தனியார் விடுதிகளில் தங்கவைக்கப்பட்டு நாளை அதிகாலை இதே விமானம் மூலம் லண்டன் அனுப்பப்பட உள்ளனர்.