மியா கலிஃபா படத்துடன் ஆடி வெள்ளி வளைகாப்பு விழாவுக்கு பதாகை: காஞ்சிபுரத்தில் பரபரப்பு


காஞ்சிபுரம்: காஞ்சிபுரம் அருகே ஆடி வெள்ளிக்கு அம்மன் வளைகாப்பு நிகழ்ச்சிக்கு ஆபாச பட நடிகை மியா காலிஃபா புகைப்படத்தை பயன்படுத்தி விஷமிகள் வைத்த பதாகையால் சர்ச்சை ஏற்பட்டுள்ளது. இதையடுத்து போலீஸார் சர்ச்சைக்குரிய பதாகையை அகற்றினர்.

காஞ்சிபுரம் அருகே உள்ளது குருவிமலை கிராமம். அந்த கிராமத்தில் உள்ள மாப்பிள்ளை விநாயகர் கோயிலில் நாகாத்தம்மன், செல்லியம்மனுக்கு தனிச்சந்நிதிகள் உள்ளன. இங்கு, நாளை (ஆக. 9) ஆடி வெள்ளியை ஒட்டி அம்மனுக்கு வளைகாப்பு விழா நடைபெறுகிறது. இந்த வளைகாப்பு விழாவுக்கு பக்தர்களை வரவேற்று பதாகைகள் வைக்கப்பட்டுள்ளன. அந்தப் பதாகை ஒன்றில், அமெரிக்காவைச் சேர்ந்த ஆபாச பட நடிகை மியா காலிஃபா மஞ்சள் உடையில் பால்குடம் எடுத்து வருவது போன்று ஒரு படத்தையும் விஷமிகள் சிலர் போட்டிருந்தனர். இதனைப் பார்த்து மக்கள் அதிர்ச்சி அடைந்தனர்.

இந்தச் செய்தி கோயில் சுற்றுவட்டாரப் பகுதிகளில் காட்டுத் தீபோல பரவியது. இதையடுத்து சிலர் இதுகுறித்து போலீஸுக்கு தகவல் அளித்தனர். இதனால் குருவிமலை பகுதியில் பிரச்சினை ஏற்படும் சூழல் ஏற்பட்டதால், போலீஸார் உடனடியாக அங்கு வந்து அந்தப் பதாகையை அப்புறப்படுத்தினர்.

சர்ச்சைக்குரிய அந்தப் பதாகையை வைத்தவர்கள் யார் என்பது குறித்து போலீஸார் விசாரித்து வருகின்றனர். அந்த பதாகையை வைத்தவர்களின் பெயர்கள், ஆதார் விவரங்கள் உள்ளிட்டவை பதாகையில் உள்ளன. உண்மையிலேயே அந்தப் பதாகையில் உள்ள படத்தில் இருப்பவர்கள் தான் இதனை வைத்தனரா அல்லது விஷமிகள் யாரேனும் அவர்களின் படத்தை பயன்படுத்தியுள்ளனரா என்ற கோணத்தில் காஞ்சிபுரம் தாலுகா போலீஸார் விசாரித்து வருகின்றனர்.

நடிகை மியா காலிஃபா லெபனான் நாட்டை பூர்விகமாக கொண்டவர். தற்போது அமெரிக்காவில் உள்ளார். இவர் ஹிஜாப் அணிந்து ஆபாசபடத்தில் தோன்றியதால் சர்ச்சை ஏற்பட்டது. ஏற்கெனவே பல இஸ்லாமிய அமைப்புகள் இவருக்கு மிரட்டல் விடுத்திருந்தன. இந்நிலையில் ஆடி வெள்ளி அம்மன் திருவிழாவில் இவரது படத்தை பயன்படுத்தி பதாகை வைத்தது காஞ்சிபுரம் பகுதியில் பெரும் சர்ச்சையை ஏற்படுத்தியுள்ளது.

x