மதுரையின் கனவு திட்டம் நிறைவேறுகிறது: ‘டைடல் பார்க்’ பணிக்கு டெண்டர் அறிவிப்பு


மதுரை: மதுரை ‘டைடல் பார்க்’ திட்டம் அறிவிக்கப்பட்டு 2 ஆண்டுகளுக்கு பின்னர், தற்போது கட்டுமானப் பணிகளுக்கான டெண்டர் அறிவிப்பு வெளியாகியுள்ளது. இந்த திட்டத்தால் தென் மாவட்டங்களைச் சேர்ந்த10 ஆயிரத்துக்கும் மேற்பட்ட படித்த இளைஞர்கள் வேலைவாய்ப்பு பெறுவார்கள்.

மதுரை மாட்டுத்தாவணி பேருந்து நிலையம் அருகே, மாநகராட்சிக்குச் சொந்தமான 5.63 ஏக்கர்நிலத்தில் ‘டைடல் பார்க்’ அமைக்கப்படும் என்று 2022 செப்டம்பர் மாதம் தமிழக அரசு அறிவித்தது. இதற்காக ரூ.600 கோடி ஒதுக்கீடு செய்யப்படும் எனவும் அறிவிக்கப்பட்டது. தொடர்ந்து மண் பரிசோதனை செய்யப்பட்டு, 5.63 ஏக்கர் நிலத்தை ஒப்படைப்பதற்கான பணியை மாநகராட்சி நிர்வாகம் மேற்கொண்டது.

சில வாரங்களுக்கு முன்பு ‘டைடல் பார்க்’ பார்க்கிங் உள்ளிட்டவற்றுக்காக கூடுதலாக 5 ஏக்கர் நிலம் ஒதுக்கப்பட்டது. மொத்தம் 10 ஏக்கர் நிலத்தில் மதுரை ‘டைடல் பார்க்’ அமைய உள்ளது. எனினும், இந்த திட்டத்துக்கான டெண்டர் விடப்படாமல் இருந்தது.

இந்நிலையில், இரண்டு ஆண்டுகளுக்கு பின்னர் தற்போது கட்டுமானப் பணிகளுக்கான டெண்டர் அறிவிப்பு வெளியாகியுள்ளது. மாட்டுத்தாவணி பேருந்து நிலையம் அருகே 12 தளங்களுடன் இந்த கட்டிடம் அமைகிறது.

இ-டெண்டர்: இதற்கான உட்கட்டமைப்புப் பணிகள், மெக்கானிக்கல், எலெக்ட்ரிக்கல், பிளம்பிங்உள்ளிட்ட அனைத்து பணிகளையும் மேற்கொள்வதற்குத் தகுதியான நிறுவனங்களுக்கு அழைப்புவிடுத்து இ-டெண்டர் விடப்பட்டுள்ளது. இ-டெண்டரில் பங்கேற்பதற்கான விண்ணப்பங்களை www.tntenders.gov.in என்றவலைதள முகவரி மூலமாக செப்டம்பர் 7-ம் தேதி பிற்பகல் 3 மணிக்குள் சமர்ப்பிக்க வேண்டும் என்று டைடல் பார்க் நிர்வாக இயக்குநர் அறிவித்துள்ளார்.

10 ஆயிரம் பேருக்கு வேலை: கலாச்சாரம், பண்பாட்டுத் தலைநகரான மதுரை, தொழில் துறையில்பின்தங்கியிருப்பதால் ‘டைடல் பார்க்’ திட்டம் மதுரையின் கனவுத்திட்டமாக பார்க்கப்படுகிறது. இதுதிட்டமிட்டபடி அமைந்தால், தென்மாவட்டங்களைச் சேர்ந்த 10 ஆயிரத்துக்கும் மேற்பட்ட இளைஞர்கள் வேலைவாய்ப்பை பெறுவார்கள் என எதிர்பார்க்கப்படுகிறது.

‘டைடல் பார்க்’ திட்டத்தை தொடர்ந்து, இதை சார்ந்த மற்றதொழில்களும் வர வாய்ப்புள்ளதால், தொழில் துறையிலும் பிறநகரங்களைப் போல மதுரை பெரும் வளர்ச்சி பெற வாய்ப்புள்ளது என்றுதொழில் துறையினர் நம்பிக்கை தெரிவித்துள்ளனர்

x