தனது வார்டில் வசிக்கும் அனைவருக்கும் இன்சூரன்ஸ்: திரும்பி பார்க்க வைத்த கவுன்சிலரின் சூப்பர் திட்டம்


ஜெயப்பிரகாஷ்

கேரள மாநிலம் புனலூர் நகர மன்ற உறுப்பினர் ஒருவர், தனது வார்டில் வசிக்கும் அனைத்து பொது மக்களுக்கும் தலா ஒரு லட்ச ரூபாய் காப்பீடு செய்துள்ளது கேரள மாநில மக்களை ஆச்சரியப்பட வைத்துள்ளது.

கேரள மாநிலம் புனலூர் யூடிஎப் நாடாளுமன்ற கட்சியினுடைய பொறுப்பாளரும், புனலூர் நகர மன்ற உறுப்பினருமாக இருப்பவர் ஜி.ஜெயப்பிரகாஷ். இவர் தனது வார்டிலுள்ள 485 குடும்பங்களைச் சார்ந்த ஐந்து வயது முதல் 70 வயது வரை உள்ள 1,382 நபர்களுக்கு இன்சூரன்ஸ் திட்டத்தை செயல்படுத்தி உள்ளார்.

யுனைடெட் இந்தியா இன்சூரன்ஸ் நிறுவனம் மூலம் இந்த காப்பீடு செயல்படுத்தப்பட்டுள்ளது. இத்திட்டத்தின் படி அந்த வார்டில் உள்ளவர்கள் விபத்தில் மரணம் அடைந்தால் அவர்களைச் சார்ந்தவர்களுக்கு தலா ஒரு லட்ச ரூபாய் இழப்பீடு வழங்கப்படும் என்றும், விபத்தில் காயம் அடைந்தவர்களுக்கு ஊனத்தின் தன்மையை பொறுத்து அதிகபட்சமாக ஒரு லட்சம் ரூபாய் வரை கிடைக்கும் வகையில் இந்த காப்பீடு செய்யப்பட்டுள்ளது.

இதற்கான பிரிமியத் தொகை பொதுநலம் மிக்க சிலரிடமிருந்தும், சில பள்ளிகளிடமிருந்தும் பெறப்பட்டுள்ளது. அதன் மூலம் 13 கோடியே 82 லட்ச ரூபாய் பிரிமியம் செலுத்தப்பட்டு வார்டு முழுவதும் காப்பீடு செய்யப்பட்டுள்ளது.

இந்தியாவிலேயே முதல் முறையாக ஒரு நகர்மன்ற உறுப்பினர் தனது வார்டிலுள்ள வாக்காளர்கள் அனைவருக்கும் பாரபட்சமின்றி தலா ஒரு லட்ச ரூபாய் காப்பீடு செய்திருக்கும் செயல் கேரள மாநிலத்தில் அனைவரிடமும் அமோக வரவேற்பை பெற்றுள்ளது, ஒட்டுமொத்த கேரள மாநிலத்தையும் புனலூரை நோக்கி திரும்பி பார்க்கவைத்துள்ளார் நகர்மன்ற உறுப்பினர் ஜெயபிரகாஷ்.

x