பிரதமர் மோடி குறித்து அமைச்சர் மனோ தங்கராஜ், மூச்சு இருக்கா? மானம்?? ரோஷம்??? என கேள்வி எழுப்பி இருந்தார். இந்த பதிவிற்கு பாஜக தனது கடும் கண்டனத்தை தெரிவித்துள்ளதோடு அமைச்சரவையில் இருந்து அவரை நீக்க வேண்டுமெனவும் வலியுறுத்தியுள்ளது.
புதிய பாராளுமன்றத்தை பிரதமர் மோடி நேற்று திறந்து வைத்தார். அங்கு சபாநாயகர் இருக்கைக்கு அருகில் தமிழகத்தின் திருவாவடுதுறை ஆதீனத்தின் செங்கோல் வைக்கப்பட்டது. தமிழகத்தைச் சேர்ந்த 40க்கும் மேற்பட்ட ஆதீனங்கள் இந்த விழாவில் பங்கேற்றனர். அவர்களை பிரதமர் மோடி கெளரவித்தார். முன்னதாக ஆதீனங்கள் முன்னிலையில் செங்கோலை பிரதமர் மோடி கிழே விழுந்து வணங்கினார்.
அந்த புகைப்படத்தை தமிழக பால்வளத்துறை அமைச்சர் மனோ தங்கராஜ் தனது ட்விட்டர் பக்கத்தில் பதிவிட்டு, மூச்சு இருக்கா? மானம்?? ரோஷம்?? என விமர்சனம் செய்துள்ளார். இந்த விமர்சனம் பாஜகவினரிடையே பெரும் கொந்தளிப்பை ஏற்படுத்தியுள்ளது. இதற்கு பலரும் தங்களது கண்டனத்தை தெரிவித்துள்ளனர்.
இதுகுறித்து பாஜக துணைத் தலைவர் நாராயணன் திருப்பதி தனது ட்விட்டர் பக்கத்தில், ‘’தமிழக அமைச்சர் மனோ தங்கராஜ் பிரதமர் குறித்து தனது ட்விட்டர் பக்கத்தில் தவறான, தரக்குறைவான பதிவு ஒன்றை செய்திருப்பது கடும் கண்டனத்திற்குரியது.
உடனடியாக அந்த நபரை அமைச்சர் பொறுப்பிலிருந்து அகற்றுவதோடு, கைது செய்து தகுந்த தண்டனை பெற்று தர வேண்டியது தமிழக முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் அவர்களின் கடமை மற்றும் பொறுப்பு’’ என பதிவிட்டுள்ளார்.