காவிரி தீர்ப்பை மீற முயற்சித்தால் உறுதியுடன் எதிர்ப்போம்: அமைச்சர் துரைமுருகன் உறுதி


சென்னை: தமிழக நீர்வளத்துறை அமைச்சர் துரைமுருகன் நேற்று வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறி யிருப்பதாவது: கேரள அரசு சிலந்தி ஆற்றின் குறுக்கே தடுப்பணை கட்டுவதன் மூலம் அமராவதி அணைக்கு வரும் நீரைத் தடுக்கும் முயற்சி பற்றி எதிர்க்கட்சித் தலைவர் பழனிசாமி தெரிவித்துள்ளார்.

காவிரி இறுதித் தீர்ப்பில் தமிழகத்துக்கு கிடைத்தநீர் உரிமையில் 14.75 டி.எம்.சி நீரைக் கள்ள மவுனம் சாதித்துத் தாரை வார்த்தது இதே பழனிசாமிதான் என்பதை அவருக்கு நினைவூட்ட விரும்புகிறேன்.

கடந்த ஏப். 4 அன்று நடந்த 29-வது காவிரி நீர் மேலாண்மை ஆணைய கூட்டத்திலேயே ‘காவிரி வடிநிலத்தில் கேரள, கர்நாடக அரசுகள் மேற்கொள்ளும் சிறுபாசனம் பற்றிய விவரங்களைச் சேகரிக்க வேண்டும்.

கண்காணிக்க வேண்டும்’ என தமிழக உறுப்பினர் மற்றும் அரசு கூடுதல் தலைமைச் செயலர், அழுத்தம் திருத்தமாக வலியுறுத்தி இருக்கிறார். இதை இனிவரும் கூட்டங்களிலும் தொடர்ந்து வலியுறுத்துவார்.

ஆகவே, காவிரி தீர்ப்பினை மீறும் விதமாகக் கேரளாவோ, கர்நாடக அரசோ செயல்பட முயற்சித்தால் அதை உறுதியுடன் எதிர்த்து – தமிழ்நாட்டின் காவிரி உரிமையைச் சட்டரீதியாக மட்டுமல்ல - அனைத்து விதத்திலும் தமிழ்நாடு அரசு நிலைநாட்டும் என்பதைத் தெரிவித்துக் கொள்கிறேன்.