மதுரை: யாழ்ப்பாணத் தமிழர்களைப்போல தமிழகத்தைச் சேர்ந்தவர்கள் தமிழைக் கொண்டாடவில்லை என்று உயர் நீதிமன்ற நீதிபதி ஆர்.சுரேஷ்குமார் கூறினார். உயர் நீதிமன்ற மதுரை அமர்வில், மதுரை வழக்கறிஞர்கள் சங்கம் (எம்பிஏ) சார்பில் வழக்கறிஞர் கா.பிரபுராஜதுரை எழுதியுள்ள ‘நும்மினும் சிறந்தது நுவ்வை’ என்ற நூல் அறிமுக விழா நேற்று நடைபெற்றது. சங்கத் தலைவர் எம்.கே.சுரேஷ் தலைமை
வகித்தார்.
பொதுச் செயலாளர் ஆர்.வெங்கடேசன் வரவேற்றார். இதில் நீதிபதி ஆர்.சுரேஷ்குமார் பேசியதாவது: ஆங்கில மொழியைத் தவிர்த்துவிட்டு, பிழைப்பு நடத்த முடியாத அளவுக்கு ஆங்கிலம் நம் வாழ்வுடன் இரண்டறக் கலந்துவிட்டது. பிழைப்பு என்பதைத் தாண்டி, பிறப்பு, வளர்ப்பு, வாழ்க்கை, முகவரி என வரும்போது நமக்குத் துணை வருவது தமிழ்தான். அனைத்து சட்டங்களும் ஆங்கிலத்தில்தான் உள்ளன. அனைத்து நீதிமன்றங்களிலும் வழக்காடு மொழியாகவும் ஆங்கிலம்தான் உள்ளது.
எனவேதான், வழக்காடு மொழியாக தமிழ் வர வேண்டும் என்று வலியுறுத்துகிறோம்.முழுக்க தமிழில் பேசுவது, உரையாடுவது, தமிழைப் பரப்புவது இலங்கையைச் சேர்ந்த யாழ்ப்பாணத் தமிழர்கள்தான். யாழ்ப்பாணத் தமிழர்களைபோல, தமிழகத்தில் பிறந்தவர்கள் தமிழைக் கொண்டாடவில்லை. இந்த நிலைமாற வேண்டும்.
இந்தப் பொறுப்பு வழக்கறிஞர்களுக்கும் உள்ளது. தமிழ் மொழி மீதான நாட்டத்தை வழக்கறிஞர்கள் முன்னெடுத்துச் செல்ல வேண்டும். தமிழ் இலக்கி யங்களைப் படிக்க வேண்டும். இவ்வாறு உயர் நீதிமன்ற நீதிபதி சுரேஷ்குமார் பேசினார். நீதிபதிகள் நக்கீரன், பரதசக்கரவர்த்தி, அருள்முருகன் மற்றும் வழக்கறிஞர்கள் பங்கேற்றனர். சங்கப் பொருளாளர் சுரேஷ்குமார் ஐசக் பால் நன்றி கூறினார்.மதுரை உயர் நீதிமன்ற அமர்வு வளாகத்தில் நேற்று நடைபெற்ற புத்தக அறிமுக விழாவில் பேசிய உயர் நீதிமன்ற நீதிபதி சுரேஷ்குமார்.