தூத்துக்குடி: ஆன்லைன் விளம்பரத்தை நம்பி தாய்லாந்து நாட்டுக்கு வேலைக்குச் சென்ற ஸ்ரீவைகுண்டம் இளைஞர் மாயமானதால், அவரைத் தொடர்பு கொள்ள முடியாமல் குடும்பத்தினர் தவித்து வருகின்றனர். தூத்துக்குடி மாவட்டம் ஸ்ரீவை குண்டம் அருகேயுள்ள வெள்ளூர் பிள்ளையார் கோயில் தெருவைச் சேர்ந்தவர் முத்துக்குமார்(32). இவருக்குத் திருமணமாகி மனைவி சுந்தரி மற்றும் 3 வயது பெண் குழந்தை உள்ளனர். முத்துக்குமார் அடிக்கடி ஒப்பந்த அடிப்படையில் வெளிநாடுகளுக்கு வேலைக்குச் சென்று வருவார்.
இந்நிலையில், தாய்லாந்து நாட்டில் உள்ள ஒரு நிறுவனத்தில் வேலைவாய்ப்பு இருப்பதாக ஆன்லைன் மூலம் அறிந்த முத்துக்குமார், அந்த வேலைக்கு விண்ணப்பித்து, கடந்த மாதம் 22-ம் தேதி தாய்லாந்து நாட்டுக்குப் புறப்பட்டுச் சென்றுள்ளார். தாய்லாந்து நாட்டில் உள்ள பாங்காக் விமான நிலையம் சென்ற முத்துக்குமார், அங்கிருந்து வாட்ஸ்-அப் மூலம் மனைவி சுந்தரியை தொடர்பு கொண்டுள்ளார்.
மேலும், விமான நிலையத்தில் தாய்லாந்து நாட்டு செல்போன் சிம்கார்டு ஒன்றையும் வாங்கியுள்ளார். பின்னர், ஓட்டல் அறைக்குச் சென்றுவிட்டதாகவும், மறுநாள் நிறுவனத்தில் இருந்து வந்து, தன்னை அழைத்துச் சென்றுவிடுவார்கள் என்றும் மனைவியிடம் தெரிவித்துள்ளார்.
10 நாட்களுக்கு மேலாக... ஆனால், அதற்குப் பிறகு அவர் குடும்பத்தினரை தொடர்பு கொள்ளவில்லை. குடும்பத்தினர் பலமுறை முயன்றும், 10 நாட்களுக்கு மேலாக முத்துக்குமாரை பற்றிய எந்த தகவலும் இல்லை. இதனால், மனைவி சுந்தரி மற்றும் குடும்பத்தினர் மிகவும் கலக்கம் அடைந்துள்ளனர்.
இது தொடர்பாக, மாவட்ட ஆட்சியர், மாவட்ட காவல் கண்காணிப்பாளர் அலுவலகங்களில் சுந்தரி மனு கொடுத்துள்ளார். அதில், எனது கணவர் முத்துக்குமார் ஆன்லைன் விளம்பரத்தைப் பார்த்து, தாய்லாந்து நாட்டைச் சேர்ந்த ஒரு நிறுவனத்துக்கு விண்ணப்பித்தார்.
அந்த நிறுவனத்திடம் இருந்து அழைப்பு வந்ததையடுத்து, தாய்லாந்து சென்றார். கடந்த 22-ம் தேதிக்குப் பிறகு அவரைத் தொடர்புகொள்ள இயலவில்லை. அவரது நிலை என்ன என்று தெரியாமல் தவிக்கிறோம். அவரைக் கண்டுபிடித்து தர வேண்டும் என்று குறிப்பிட்டுள்ளார்.
இந்நிலையில், முத்துக்குமார் குடும்பத்தினரை பாஜக மாவட்டத் தலைவர் ஆர்.சித்ராங்கதன், நிர்வாகிகள் சந்தித்து ஆறுதல் கூறினர். முத்துக்குமாரை விரைவாக கண்டுபிடிக்க மத்திய, மாநில அரசுகள் நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று ஸ்ரீவைகுண்டம் எம்எல்ஏ ஊர்வசி எஸ்.அமிர்தராஜும் வலியுறுத்தியுள்ளார்.