சென்னை: அதிகார துஷ்பிரயோகத்தில் தொடர்ந்து ஈடுப்பட்ட புகாரில் சென்னை மாநகராட்சியின் 4 கவுன்சிலர்களுக்கு விளக்கம் கேட்டு நகராட்சி நிர்வாகத்துறை செயலர் நோட்டீஸ் அனுப்பியுள்ளார். சென்னை மாநகராட்சிக்கு 2022-ல் தேர்தல் நடத்தப்பட்டு 200 கவுன்சிலர்கள் தேர்ந்தெடுக்கப்பட்டனர்.
இதில் 3 பேர் இறந்துவிட்ட நிலையில், 197 கவுன்சிலர்கள் உள்ளனர். இவர்களில் சிலர் மீது பொதுமக்கள் புகார் தெரிவித்து வருகின்றனர். இவர்கள், மாநகராட்சி நகர்ப்புற ஆரம்ப சுகாதார நிலையங்கள், உடற்பயிற்சி கூடங்கள், மாநகராட்சி பள்ளிகள், அம்மா உணவகம் போன்ற இடங்களில் ஆய்வு செய்வதில்லை.
விரிவாக்கப்பட்ட மண்டலங்களான சோழிங்கநல்லூர், பெருங்குடி, மாதவரம் ஆகியவற்றில் பொதுமக்கள் குடிநீர் மற்றும் கழிவுநீர் இணைப்பு பெறுவதற்கும், வீடுகள் கட்டுவதற்கும் இடையூறாக உள்ளனர். ரூ.30 லட்சத்தில் வீடு கட்டினால், குடிநீர், கழிவுநீர் இணைப்பு பெற ரூ.5 லட்சத்துக்கு மேல் கேட்கின்றனர். குடிநீர் இணைப்பு பெற சுமார் ரூ.23 ஆயிரம் செலுத்தவேண்டும்.
அதையும் 10 தவணைகளில் செலுத்த அரசு வழிவகை செய்துள்ளது. ஆனால் கவுன்சிலர்கள் சிலர், ரூ.5 லட்சத்துக்கு மேல் ஒரே தவணையாக கேட்கின்றனர். பணம் தராவிட்டால் பணிகளை நிறுத்துகின்றனர். பணி மேற்கொள்ள வரும் ஒப்பந்த நிறுவன ஊழியர்கள் மீது தாக்குதல் நடத்துகின்றனர்.
தடுக்க வரும் அதிகாரிகளையும் தரக்குறைவாக பேசி, தாக்குகின்றனர் என பொதுமக்கள் புகார் தெரிவித்து வந்தனர். இதுதொடர்பாக அரசுக்கும் ஏராளமான புகார்கள் வந்துள்ளன. இதனால் அரசுக்கு அவப்பெயர் ஏற்படுவதாகவும் இதற்கு முற்றுப்புள்ளி வைக்க வேண்டும் எனவும் முதல்வர் ஸ்டாலின் உத்தரவிட்டதாக கூறப்படுகிறது.
அதனைத் தொடர்ந்து, மக்களவைத் தேர்தல் முடிந்த பின்னர், கடந்த ஜூன் மாதம் மாநகராட்சியில் உள்ள அனைத்து கவுன்சிலர்களின் செயல்பாடுகள் குறித்து முதல்வர் ஸ்டாலின், காவல்துறை நுண்ணறிவு பிரிவிடம் அறிக்கை கேட்டிருந்தார். அதன்படி அளிக்கப்பட்ட அறிக்கையில், பெரிய அளவில் அதிகார துஷ்பிரயோகத்தில் ஈடுபட்டதாக 4 கவுன்சிலர்கள் கண்டறியப்பட்டு, அவர்களின் பதவியை பறிக்க அறிவுறுத்தப்பட்டதாக கூறப்படுகிறது.
அதில் 3 திமுக கவுன்சிலர்கள், ஒரு அதிமுக கவுன்சிலர் இருப்பதாக கூறப்படுகிறது. அவர்கள், 29-வது வார்டு கவுன்சிலர் தி.கார்த்திகேயன் (திமுக), 189-வது வார்டு கவுன்சிலர் வ.பாபு (திமுக), 193-வது வார்டு கவுன்சிலர் டி.சி.கோவிந்தசாமி (அதிமுக), 195-வது வார்டு கவுன்சிலர் க.ஏகாம்பரம் (திமுக) என தெரியவந்துள்ளது.
பின்னர், நகராட்சி நிர்வாகம் மற்றும் குடிநீர் வழங்கல் துறை செயலரே நேரடியாக, தொடர்புடைய 4 கவுன் சிலர்களுக்கு விளக்கம் கேட்டு நோட்டீஸ் அனுப்பியுள்ளார். இந்நடவடிக்கைகள் அனைத்தும், மாநகராட்சி நிர்வாகத்துக்கே தெரியாமல் ரகசியமாக மேற்கொள்ளப்பட்டுள்ளது.
இதற்கு முன்பு, நகர்ப்புற உள்ளாட்சி கவுன்சிலர்களின் பதவியை பறிப்பதில் ஏராளமான சட்ட சிக்கல்கள் இருந்தன. தற்போது நகர்ப்புற உள்ளாட்சி சட்டத்தில் கொண்டு வரப்பட்டுள்ள திருத்தம் அடிப்படையில், விதிமீறல்களில் ஈடுபடும் கவுன்சிலர்களின் பதவியை பறிக்கலாம் என நகராட்சி நிர்வாகத்துறை அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.
அரசின் இந்த நடவடிக்கையால் அனைத்து மாநகராட்சி கவுன்சிலர்களும் கலக்கத்தில் உள்ளனர். தொடர்புடைய 4 கவுன்சிலர்கள் அளிக்கும் விளக்கத்தின் அடிப்படையில், அடுத்த கட்ட நடவடிக்கை இருக்கும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.