தொழிலாளர்களின் உரிமைகளைப் பறித்து பன்னாட்டு நிறுவனங்களுக்கு ஆதரவாகத் தொழிலாளர்களைச் சுரண்டும் தன்மையுடைய தொழிலாளர் திருத்த சட்ட முன்வடிவை, ஆளுநரின் ஒப்புதலுக்கு அனுப்பாமல் திரும்பப் பெறப்பட வேண்டுமென மனிதநேய மக்கள் கட்சியின் தலைவர் எம்.எச்.ஜவாஹிருல்லா கேட்டுக் கொண்டுள்ளார்.
இது தொடர்பாக அவர் வெளியிட்டுள்ள அறிக்கையில், ‘’தமிழ்நாடு சட்டமன்றப் பேரவையில் 1948ஆம் ஆண்டு தொழிற்சாலைகள் சட்டத்தைத் தமிழ்நாட்டு மாநிலத்திற்கு திருத்துவதற்கான சட்டமுன்வடிவு கடந்த ஏப்ரல் 21 அன்று தோழமை கட்சிகளின் கடும் எதிர்ப்பிற்கு இடையில் நிறைவேற்றப்பட்டது.
தொழிலாளர்களின் உரிமைகளைப் பறித்து பன்னாட்டு நிறுவனங்களுக்கு ஆதரவாகத் தொழிலாளர்களைச் சுரண்டும் தன்மையுடைய இச்சட்ட முன்வடிவை ஆளுநரின் ஒப்புதலுக்கு அனுப்பாமல் திரும்பப் பெறப்பட வேண்டுமெனக் கேட்டுக் கொள்கிறேன்.
இச்சட்டமுன்வடிவு சட்டமன்றப் பேரவையில் ஆய்விற்கு எடுத்துக் கொள்ளப்பட்ட போது இதனை நிறைவேற்றாமல் தேர்வுக் குழுவிற்கு அனுப்ப வேண்டுமென நான் வலியுறுத்தினேன். காங்கிரஸ், விசிக, சிபிஎம், சிபிஐ, தவாக உள்ளிட்ட தோழமை கட்சிகளின் சட்டமன்ற உறுப்பினர்களும் இதே கருத்தை வலியுறுத்தினர். இந்த எதிர்ப்புகளுக்கிடையில் இச்சட்ட முன்வடிவு நிறைவேற்றப்பட்டது.
ஒன்றிய அரசு நிறைவேற்றி பிறகு திரும்ப பெற்றுக் கொண்ட வேளாண் சட்டங்களைப் போல் கொடுமையானது, ஒன்றிய பாஜக அரசு கொண்டு வந்துள்ள தொழிலாளர் சட்டத் தொகுப்பு (Labour Code). இந்நிலையில் இதே தொழிலாளர் சட்டத் தொகுப்பை மேற்கோள் காட்டி தமிழ்நாடு அரசு தொழிற்சாலை சட்டங்களில் புதிதாக 65 ஏ என்ற விதியைச் சேர்க்கும் சட்ட முன்வடிவை நிறைவேற்றியிருப்பது அதிர்ச்சியளிக்கின்றது.
இதில் வேதனைக்குரியது என்னவெனில் இச்சட்ட முன் வடிவின் நோக்கக் காரண விளக்கவுரையில் ஒன்றிய அரசு அறிவிக்கையின் மூலம் தொகுப்பு (மையச் சட்டம் 37/2020) நடைமுறைக்குக் கொண்டு கொண்டுவரவில்லை என்று குறிப்பிட்டிருந்த போதினும் இச்சட்ட முன்வடிவு தமிழ்நாடு சட்டமன்றத்தில் நிறைவேற்றப்பட்டுள்ளது.
ஒன்றிய அரசின் தொழிலாளர் சட்டத் தொகுப்பின் 127-ஆவது பிரிவைப் பயன்படுத்தி, ஏற்கெனவே இருக்கக்கூடிய தொழிற்சாலைகள் சட்டம் விதி 51இல் குறிப்பிடப்பட்டுள்ள வாரத்திற்கு 48 மணி நேரம் வேலை, விதி 52இல் குறிப்பிடப்பட்டுள்ள வார விடுமுறை நாட்கள், விதி 54இல் குறிப்பிடப்பட்டுள்ள நாளொன்றுக்கு எத்தனை மணி நேரம், விதி 55இல் குறிப்பிடப்பட்டுள்ள இடைவேளை குறித்த வரைமுறை, விதி 56இல் குறிப்பிடப்பட்டுள்ள ஒரு தொழிலாளி தொழிற்சாலையில் இடைவேளை உட்பட இருக்கும் மொத்த நேரம் மற்றும் விதி 59ஆம் பிரிவில் குறிப்பிடப்பட்டுள்ள மிகை நேர ஊதியம் உள்ளிட்ட தொழிலாளர்கள் போராடிப் பெற்ற உரிமைகளையெல்லாம் பறிக்கும் வகையில் இந்தச் சட்டம் கொடூரமாக உள்ளது.
ஒன்றிய அரசின் தொழிலாளர் தொகுப்புச் சட்டங்களுக்கு எதிராகத் தொழிற்சங்கங்கள் போராடி வரும் நிலையில் தமிழ்நாடு அரசு அதன் அடிப்படையில் தொழிலாளர்களின் உரிமைகளை பறிக்கும் வகையில் இச்சட்டம் அமைந்துள்ளது.
தமிழ்நாட்டில் உள்ள பெரும்பாலான அரசியல் கட்சிகளும் தொழிற்சங்கங்களும் கடுமையாக இச்சட்டத்தை எதிர்த்து வருகின்றன. இந்நிலையில் இச்சட்ட முன்வடிவை ஆளுநரின் ஒப்புதலுக்கு அனுப்பாமல் அதனை காலாவதியாக்கத் தமிழ்நாடு அரசு முன்வர வேண்டுமெனக் கேட்டுக் கொள்கிறேன்’’ எனக் குறிப்பிட்டுள்ளார்.