தமிழகத்தில் அதிமுகவுடன் கூட்டணி தொடரும்: அமித்ஷா சொன்ன காரணம் இது தான்!


அமித்ஷாவுடன் எடப்பாடி பழனிசாமி.

தமிழகத்தில் பாஜகவின் கட்டமைப்புகள் வலுவின்றி உள்ளது. அதனைச் சரிசெய்வதற்கான முயற்சிகளைச் செய்து வருகிறோம். எங்கெல்லாம் பாஜக வலுக்குறைவாக உள்ளதோ அங்கெல்லாம் எங்கள் கூட்டணி கைகொடுக்கும் என்பதால் அதிமுகவுடனான கூட்டணியில் தொடர்கிறோம் என மத்திய உள்துறை அமைச்சர் அமித்ஷா தெரிவித்துள்ளார்.

அதிமுக - பாஜக கூட்டணி குறித்து இரு கட்சியினர் இடையே கருத்து மோதல்கள் நடைபெற்று வந்தன. அதிமுகவுடான கூட்டணி தேவையற்றது. தமிழகத்தில் நாம் வளர வேண்டுமெனில் பாஜக தனித்து நிற்க வேண்டுமென அண்மையில் தமிழக பாஜக தலைவர் அண்ணாமலை பேசி வந்தார். மேலும் நாடாளுமன்றத் தேர்தலின் போது அதிமுகவுடன் கூட்டணி என்றால் நான் தலைவர் பதவியை ராஜினாமா செய்துவிட்டு சாதாரண தொண்டனாக பணியாற்றுவேன் என அவர் கூறியிருந்தார்.

இதனைத்தொடர்ந்து டெல்லி சென்று மூத்த தலைவர்களைச் சந்தித்த அண்ணாமலை தனது கருத்துக்களை எடுத்து வைத்தாகத் தெரிகிறது. ஆனால் அதனை பாஜகவின் அகில இந்தியத் தலைமை ஏற்றுக்கொள்ளாமல் அண்ணாமலையைச் சமாதானப்படுத்தி அனுப்பியதாகத் தகவல்கள் வெளியாகின.

இந்தநிலையில் டெல்லியில் தனியார் தொலைக்காட்சிக்குப் பேட்டியளித்த மத்திய உள்துறை அமைச்சர் அமித்ஷா, ‘’தமிழகத்தில் பாஜகவின் கட்டமைப்புகள் வலுவின்றி உள்ளது அதனைச் சரிசெய்வதற்கான முயற்சிகளைச் செய்து வருகிறோம். எங்கெல்லாம் பாஜக வலுக்குறைவாக உள்ளதோ அங்கெல்லாம் எங்கள் கூட்டணி கைகொடுக்கும் என்பதால் அதிமுகவுடனான கூட்டணியில் தொடர்கிறோம்’’ எனக் கூறியுள்ளார்.

அமித்ஷாவின் பேட்டி அதிமுக - பாஜக இடையே கூட்டணி தொடர்பாக நிலவி வந்த சலசலப்புகளுக்கு முற்றுப்புள்ளி வைக்கப்பட்டதாகத் தெரிகிறது.

x