டெல்லி அமைச்சரவையில் ஆம் ஆத்மி கட்சியின் அதிஷி கல்வி அமைச்சராகவும், சௌரப் பரத்வாஜ் சுகாதாரத் துறை அமைச்சராகவும் இன்று பதவியேற்றனர். மணீஷ் சிசோடியா மற்றும் சத்யேந்தர் ஜெயின் ஆகியோரின் ராஜினாமாவுக்குப் பிறகு இவர்கள் புதிய அமைச்சர்களாக பதவியேற்றுள்ளனர்.
டெல்லியின் புதிய அமைச்சர்களாக பதவியேற்ற அதிஷி மற்றும் சௌரப் பரத்வாஜுக்கு டெல்லி லெப்டினன்ட் கவர்னர் வி.கே.சக்சேனா பதவிப் பிரமாணம் செய்து வைத்தார். முதலமைச்சரும், ஆம் ஆத்மி கட்சியின் தலைவருமான அர்விந்த் கேஜ்ரிவால், சட்டசபை எதிர்க்கட்சித் தலைவர் ராம்வீர் சிங் பிதூர் ஆகியோர் பதவியேற்பு விழாவில் பங்கேற்றனர்.
கல்காஜி சட்டமன்றத் தொகுதியைப் பிரதிநிதித்துவப்படுத்தும் அதிஷி, பொதுப்பணி, மின்சாரம் மற்றும் சுற்றுலாத் துறைகளை கையாளுவார். சௌரப் பரத்வாஜ் வசம் சுகாதாரம், நீர் வழங்கல் மற்றும் தொழில் துறைகள் ஒப்படைக்கப்பட்டுள்ளன.
பதவியேற்பு விழாவுக்குப் பிறகு செய்தியாளர்களிடம் பேசிய அதிஷி, “ஆம் ஆத்மி கட்சித் தலைவர்கள் பொய் வழக்குகளில் சிறையில் அடைக்கப்பட்டுள்ளனர். ராமர் வனவாசம் சென்றபோது, அவரது சகோதரர் பரதர் சிம்மாசனத்தில் செருப்புகளை வைத்து ராமரின் சார்பாக ஆட்சி செய்தார். மணீஷ் சிசோடியா மற்றும் சத்யேந்தர் ஜெயின் அவர்கள் திரும்பும் வரை நாங்கள் பொறுப்பேற்போம். டெல்லியில் பணியை நிறுத்த விட மாட்டோம்" என்று கூறினார்.