’அண்ணாமலை கூறுவதில் தவறில்லை’ -ஆதரவுக் கரம் நீட்டும் டிடிவி தினகரன்


டிடிவி தினகரன்

’’அம்மாவுடன் அண்ணாமலை தன்னை ஒப்பிடவில்லை அதேவேளையில் கருணாநிதி, அம்மா போன்று நானும் ஒரு தலைவன் என தமிழக பாஜக தலைவர் அண்ணாமலை கூறுவதில் தவறில்லையே’’ என அமமுக பொதுச் செயலாளர் டிடிவி தினகரன் தெரிவித்துள்ளார்.

சென்னை ராயப்பேட்டையில் உள்ள அமமுக தலைமை அலுவலகத்தில் மகளிர் தினம் கொண்டாடப்பட்டது. இதில் அக்கட்சியின் பொதுச் செயலாளர் டிடிவி தினகரன் கலந்து கொண்டார். பின்னர் செய்தியாளர்களிடம் பேசிய அவர், ‘’ திமுக மீது இந்த 20 மாதங்களில் கடுமையான அதிருப்தி நிலவும் நிலையிலும், 60 ஆயிரம் வாக்குகளுக்கு மேல் பெற்று வெற்றிப் பெற முடிகிறது என்றால்; இரட்டை இலை சின்னம் மட்டும் இல்லாது போயிருந்தால் ஈபிஎஸ் நிலைமை என்னவாகும்... நினைத்து பாருங்கள்.

பழனிசாமி கையில் இருக்கும் வரை இரட்டை இலை வெற்றி பெறாது. அது தனக்கான செல்வாக்கை தொடந்து இழக்கத்தான் செய்யும். மறைந்த அம்மா அவர்களுடன் யாரையும் ஒப்பிட முடியாது. இரட்டை இலை மற்றும் பணபலம் இருந்தும் இவர்களால் வெற்றிப் பெற முடியவில்லை.

மறைந்த அம்மா அவர்களுடன் தன்னை ஒப்பீடு செய்யவில்லை என்பதை அண்ணாமலையே தனது பேட்டியில் கூறுகிறார். அதே வேளையில் அம்மா, கருணாநிதி போல தானும் ஒரு தலைவன் என்கிறார். அதில் தவறு இருப்பதாக எனக்கு தெரியவில்லை.

அம்மாவின் உண்மையான தொண்டர்கள் ஒரே அணியாக, திமுகவை வீழ்த்த வேண்டும் என்ற மனநிலையில் உள்ள இயக்கங்களுடன் கூட்டணி வைக்க வேண்டும். அம்மாவின் தொண்டர்கள் ஒரணியில் இணையும் காலம் கனிந்து வருகிறது அப்போது அதிமுக என்ற இயக்கத்திற்கு தலைமை தாங்கும் துரோக சக்தி வீழ்த்தப்படும்.

நாடாளுமன்றத் தேர்தலில் தனித்து போட்டியிடும் வகையில் மாவட்டம்தோறும் நிர்வாகிகளை சந்தித்து வருகிறோம். திமுக ஆட்சியை கலைக்க யாரும் சூழ்ச்சி செய்ய வேண்டிதில்லை. திமுக அமைச்சர்களே அதற்கான வேலைகளை செய்து வருகிறார்கள். அமைச்சர் பொன்முடி காட்டுமிரண்டித்தனமாக பேசி வருகிறார்.

வட மாநிலத் தொழிலாளர்கள் தமிழகத்தில் பாதுகாப்பாக உள்ளனர். இந்த விவகாரத்தின் பின்னணியில் யார் இருந்தாலும் அவர்கள் மீது உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும்‘’ என்றார்.

x