ராமநாதபுரம் கனமழை: அதிகபட்சமாக கமுதியில் 12.44 செ.மீ பதிவு


ராமநாதபுரம்: ராமநாதபுரம் மாவட்டத்தில் அதிகபட்சமாக கமுதியில் 12.44 செ.மீ மழை பதிவாகியுள்ளது. இதுவரை பெய்த கோடை மழையில் மாவட்டத்தில் கமுதியில் பதிவானது தான் அதிக மழையாகும்.

தமிழகம் முழுவதும் மே 10-ம் தேதி முதல் கோடை மழை பெய்து வருகிறது. அதற்கு முன்பாக கோடை வெயிலின் தாக்கம் கடுமையாக இருந்தது. கடந்த ஒரு வாரத்திற்கும் மேலாக கோடை மழை பெய்து வருவதால் வெயிலின் தாக்கம் முற்றிலும் குறைந்து, கொடைக்கானல், ஊட்டி போன்ற கோடை வாசஸ்தலங்கள் போல் இதமான வானிலையும், மேகமூட்டமாக இருந்து வருகிறது.

ராமநாதபுரம் மாவட்டத்தில் மே 14-ம் தேதி முதல் கோடை மழை பரவலாக பெய்து வருகிறது. அதனால் கடந்த சில நாட்களாக, வறட்சியான ராமநாதபுரம் மாவட்டத்தில் சில இடங்களில் நல்ல மழையும், சில இடங்களில் லேசான மழையும் பெய்தது.

கடந்த 2 நாட்களாக வெயில் இல்லாமல் மாவட்டம் முழுவதும் மேக மூட்டமாக இருந்து வருகிறது. இதமான சூழ்நிலை இருந்து வருவதால் பொதுமக்களும், கோடை மழையால் இரண்டாம் போக நெல் பயிர், பருத்தி, மிளகாய் பயிருக்கு தண்ணீர் கிடைத்துள்ளதால் விவசாயிகளும் மகிழ்ச்சி அடைந்துள்ளனர்.

இந்நிலையில் இன்று (மே 20) காலை 7 மணி வரையிலான 24 மணி நேரத்தில் கமுதியில் அதிகபட்சமாக 12.44 செ.மீட்டர் மழை பதிவாகியுள்ளது. தற்போது பெய்த கோடை மழையில், ராமநாதபுரம் மாவட்டத்தில் கடந்த 18-ம் தேதி அதிகபட்சமாக மண்டபத்தில் 3.44 செ.மீ மழை பதிவானது.

இந்நிலையில் கமுதி மற்றும் சுற்றுவட்டார பகுதியில் நேற்று பகலில் தொடங்கி இரவு முழுவதும் தொடர் மழை பெய்தது. இன்று காலையிலிருந்தும் மழை பெய்து வருகிறது. இதனால் கமுதி நகரில் தாழ்வான பகுதிகளில் இரவில் சாலைகளில் தண்ணீர் தேங்கியது. மேலும், வயல் வெளிகளில் மழைநீர் தேங்கிக்கிடக்கிறது. கண்மாய், குளங்களில் நீர் நிரம்பி வருகிறது. எனினும் இந்த மழையால் சேதும் ஏதும் இல்லை.

மாவட்டத்தில் பெய்த மழையளவு (செ.மீட்டரில்): கமுதியில் 12.44, முதுகுளத்தூர் 4.8, மண்டபம் 1.4, பாம்பன் 1.39, கடலாடி 1.3, ராமேசுவரம் 0.9, தங்கச்சிமடம் 0.86, பரமக்குடி 0.6, வாலிநோக்கம் 0.26, ராமநாதபுரம் 0.2. மாவட்டத்தின் சராசரி மழையளவு 1.5 செ.மீட்டர் ஆகும்.