ஈரோடு கிழக்கு இடைத்தேர்தலில் திமுக கூட்டணியின் காங்கிரஸ் வேட்பாளர் ஈ.வி.கே.எஸ்.இளங்கோவன் தொடர்ந்து முன்னிலை வகித்து வருகிறார்.
ஈரோடு கிழக்கு தொகுதி இடைத்தேர்தல் கடந்த 27-ம் தேதி நடைபெற்றது. இந்த இடைத்தேர்தலில் திமுக கூட்டணியில் காங்கிரஸ் வேட்பாளர் ஈ.வி.கே.எஸ். இளங்கோவன், அதிமுக சார்பில் கே.எஸ்.தென்னரசு, நாம் தமிழர் கட்சி சார்பில் மேனகா நவநீதன், தேமுதிக சார்பில் ஆனந்த் மற்றும் சுயேச்சைகள் உள்பட 77 வேட்பாளர்கள் போட்டியிட்டனர். இந்நிலையில், ஈரோடு கிழக்கு தொகுதியில் பதிவான வாக்குகளை எண்ணும் பணி இன்று காலை 8 மணிக்கு தொடங்கியது.
முதலில் தபால் ஓட்டுகள் பிரித்து எண்ணப்பட்டது. அதனைத் தொடர்ந்து மின்னணு வாக்குப்பதிவு எந்திரங்களில் பதிவான வாக்குகள் எண்ணப்பட்டு வருகிறது. இந்நிலையில் ஈரோடு கிழக்கு தொகுதி இடைத்தேர்தல் முதல் சுற்று வாக்கு எண்ணிக்கையில் காங்கிரஸ் வேட்பாளர் ஈ.வி.கே.எஸ்.இளங்கோவன் முன்னிலை வகிக்கிறார். முதல் சுற்றில் அவர் 2 ஆயிரம் வாக்குகள் வித்தியாசத்தில் முன்னிலை பெற்றார்.
தற்போதைய நிலவரப்படி ஈ.வி.கே.எஸ்.இளங்கோவன் 17,417 வாக்குகளையும், அதிமுக வேட்பாளர் தென்னரசு 5,598 வாக்குகளையும், நாம் தமிழர் கட்சி வேட்பாளர் மேனகா நவநீதன் 1479 வாக்குகளையும், தேமுதிக வேட்பாளர் ஆனந்த் 123 வாக்குகளையும் பெற்றுள்ளனர்.