செங்கை/காஞ்சி/திருவள்ளூர்: மின் கட்டண உயர்வு, ரேஷன் கடைகளில் பாமாயில், பருப்பு ஆகியவற்றின் விநியோகத்தை நிறுத்த முயற்சி செய்வது ஆகியவற்றைக் கண்டித்து செங்கல்பட்டு, காஞ்சிபுரம், திருவள்ளூர் மாவட்டங்களில் அதிமுக சார்பில் நேற்று ஆர்ப்பாட்டம் நடைபெற்றது.
திமுக ஆட்சியில் தமிழகத்தில் கடந்த 3 ஆண்டுகளில் 3 முறை மின்கட்டணம் உயர்த்தப்பட்டுள்ளது. ரேஷன் கடைகளில் பருப்பு, பாமாயில்சரியாக கிடைப்பதில்லை. இவற்றைக்கண்டித்து அதிமுக சார்பில் கட்சி அமைப்பு ரீதியான 82 மாவட்டங்களிலும் ஆர்ப்பாட்டம் நடைபெறும் என அறிவிக்கப்பட்டது.
அதன்படி, நேற்று தாம்பரத்தில் செங்கல்பட்டு மேற்கு மாவட்ட அதிமுக சார்பில் சிட்லப்பாக்கம் ச.ராஜேந்திரன் தலைமையில் கண்டன ஆர்ப்பாட்டம் நடைபெற்றது. அதேபோல் திருக்கழுக்குன்றத்தில் செங்கல்பட்டு கிழக்கு மாவட்டச் செயலாளர் எஸ்.ஆறுமுகம் தலைமையிலும், காஞ்சிபுரத்தில் மாவட்டச் செயலாளர் சோமசுந்தரம் தலைமையிலும் ஆர்ப்பாட்டம் நடைபெற்றது.
ஆர்ப்பாட்டத்தில் பங்கேற்றவர்கள் பேசும்போது, “திமுக ஆட்சியில் 3 முறை மின்கட்டணம் உயர்த்தப்பட்டுள்ளது. அதிமுக ஆட்சிக் காலத்தில் மின்சாரக் கட்டணம் உயர்த்தப்படவில்லை. அறிவிக்கப்படாத மின்வெட்டால் சாமானியர்கள், விவசாயிகள் பாதிக்கப்பட்டுள்ளனர்.
சிறு குறு நடுத்தர தொழிற்சாலைகள் மூடப்பட்டு இளைஞர்கள் வேலைவாய்ப்பை இழந்துள்ளனர். தமிழகத்தில் சட்டம் ஒழுங்கு சீர்கேட்டை அரசு தடுக்கத் தவறியுள்ளது. இதனால் மக்கள் கடுமையாகப் பாதிக்கப்பட்டுள்ளனர்” என்று கூறினர்.
தொடர்ந்து பல்வேறு முழக்கங்களை எழுப்பினர். ஆர்ப்பாட்ட மேடையில் மின் கட்டண உயர்வுக்கு எதிர்ப்பு தெரிவிக்கும் வகையில் அரிக்கேன் விளக்கு வைக்கப்பட்டிருந்தது. கட்சியின் மாநில,மாவட்ட, ஒன்றிய நகர நிர்வாகிகள் கலந்து கொண்டனர்.
அதேபோல், திருவள்ளூர் மாவட்டத்தில் திருவள்ளூர், திருமழிசை, ஆவடி, பொன்னேரி மற்றும் சென்னை -மாதவரம் ஆகிய இடங்களில் அதிமுகவினர் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர்.
இதில், அதிமுக அவைத் தலைவர் தமிழ்மகன் உசேன், திருவள்ளூர் மேற்கு மற்றும் மத்திய மாவட்ட செயலாளர்களும், முன்னாள் அமைச்சர்களுமான பி.வி.ரமணா, பா.பெஞ்சமின் மற்றும் திருவள்ளூர் தெற்கு மற்றும் வடக்கு மாவட்டச் செயலாளர்களான அலெக்சாண்டர், பி.பலராமன், திருவள்ளூர் கிழக்கு மாவட்டச் செயலாளரும், முன்னாள் அமைச்சருமான மாதவரம் மூர்த்தி, முன்னாள் எம்பி கோ.ஹரி, முன்னாள் எம்எல்ஏ மணிமாறன் உள்ளிட்ட2,500-க்கும் மேற்பட்டோர் பங்கேற்று, திமுக அரசுக்கு எதிராகக் கண்டன முழக்கமிட்டனர்.