உதய் மின் திட்டத்தில் அதிமுக இணைந்ததே மின் கட்டண உயர்வுக்கு காரணம்: ஈபிஎஸ் மீது தங்கம் தென்னரசு காட்டம்


சென்னை: முன்னாள் முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி உதய் மின் திட்டத்தில் கையெழுத்திட்டதே மின் கட்டண உயர்வுக்கு முக்கிய காரணம் என தமிழ்நாடு மின்துறை அமைச்சர் தங்கம் தென்னரசு குற்றம் சாட்டியுள்ளார்.

தமிழ்நாட்டில் சமீபத்தில் மின்கட்டணங்கள் உயர்த்தப்படுவதாக தமிழ்நாடு அரசு அறிவித்திருந்தது. இதற்கு பல்வேறு எதிர்க்கட்சிகளும் கடும் கண்டனம் தெரிவித்திருந்தன. பிரதான எதிர்க்கட்சியான அதிமுக, மின் கட்டண உயர்வை கண்டித்து மாநிலம் முழுவதும் பல்வேறு இடங்களில் ஆர்ப்பாட்டங்களை நடத்தி வருகிறது. இதனிடையே சென்னையில் இன்று செய்தியாளர்களை சந்தித்த தமிழ்நாடு மின்துறை அமைச்சர் தங்கம் தென்னரசு, உதய் மின் திட்டத்தில் இணைந்ததே மின் கட்டண உயர்வுக்கு காரணம் என குற்றம் சாட்டியுள்ளார்.

செய்தியாளர்களிடம் பேசிய அவர், ”முன்னாள் முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி உதய் மின் திட்டத்தில் கையெழுத்திட்டதே மின் கட்டண உயர்வுக்கு முக்கிய காரணம். மறைந்த முன்னாள் முதலமைச்சர் ஜெயலலிதா ஏற்க மறுத்த உதய் மின் திட்ட ஒப்பந்தத்தில் கையெழுத்திட்டவர் எடப்பாடி பழனிசாமி. பிள்ளையையும் கிள்ளி விட்டு, தொட்டிலையும் ஆட்டுவது போல் அதிமுகவின் செயல் உள்ளது.” என்றார்.

மேலும், “கடந்த 2011ம் ஆண்டு வரை திமுக ஆட்சியில் இருந்தபோது மின்சார வாரியத்திற்கு ஒட்டுமொத்த நிதி இழப்பு 18,954 கோடி ஆக இருந்தது. பின் பத்தாண்டு காலம் அதிமுக ஆட்சியில் திறனற்ற நிர்வாகத்தின் காரணமாக இந்த செலவு ஏறத்தாழ 94,313 கோடி ரூபாயாக அதிகரித்தது. 2021ல் திமுக ஆட்சி பொறுப்பை ஏற்றுக் கொள்வதற்கு முன்பு வரை ஒரு லட்சத்து 13 ஆயிரத்து 76 கோடி ரூபாயாக தமிழ்நாடு மின்சார உற்பத்தி கழகத்தின் உற்பத்தி மற்றும் ஒட்டுமொத்த நிதி இழப்பு இருந்தது. ஆனால் திமுக அரசு அமைந்த பிறகு, நிதி இழப்பினை 100 சதவீதம் ஏற்றுக் கொண்டுள்ளது.” என்றார்.

தொடர்ந்து பேசிய அவர், “2022ல் கடன் மட்டும் ஒரு லட்சத்து 59 ஆயிரத்து 723 கோடி ரூபாயாக உள்ளது. தொடர்ச்சியான நிதி இழப்புகளை சரி கட்டுவதற்காக தான் இந்த மின் கட்டணம் உயர்த்தப்பட்டு வெளியிடப்பட்டுள்ளது. குறைந்த அளவில் தான் மின்சார கட்டணம் உயர்த்தப்பட்டுள்ளது. ஒரு கோடி வீட்டு மின் இணைப்பு உள்ளவர்களுக்கு எந்த மாற்றமும் செய்யப்படவில்லை.” என்றார்.

x