[X] Close

பொதுப் பள்ளியைவிட கோச்சிங் சென்டர்களையே அதிகம் சிந்திக்கிறார்கள்: தேசிய கல்வி கொள்கை குறித்து சூர்யா காட்டம்


  • kamadenu
  • Posted: 13 Jul, 2019 17:58 pm
  • அ+ அ-

பொதுப் பள்ளியைவிட கோச்சிங் சென்டர்களைப் பற்றியே அதிகம் சிந்திக்கிறார்கள் என்று தேசிய கல்வி கொள்கையின் வரைவு அறிக்கை குறித்து சூர்யா காட்டமாக விமர்சித்துள்ளார்.

இதுதொடர்பாக இன்று (சனிக்கிழமை) அவர் வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறியிருப்பதாவது:

''மத்திய அரசின் மனிதவள மேம்பாட்டுத் துறை வெளியிட்டுள்ள தேசிய கல்விக் கொள்கை வரைவு அறிக்கை பற்றிய விவாதம், கல்வியாளர்கள் மத்தியில் நடைபெற்று வருகிறது. அரசுப் பள்ளிகளில் படிக்கும் அடித்தட்டு குடும்பங்களைச் சேர்ந்த மாணவர்களின் உயர்கல்வி கனவுகளை நிஜமாக்கும் பணியைக் கடந்த 10 ஆண்டுகளுக்கும் மேலாக செய்துவருகிறது அகரம் பவுண்டேஷன். அகரம் அமைப்பில் முன்முயற்சியில்  உயர்கல்வி வாய்ப்பு பெற்றவர்கள் 88 சதவீத மாணவர்கள் முதல்தலைமுறையாக பள்ளி செல்லும் வாய்ப்பைப் பெற்றவர்கள்.

’தனக்குக் கிடைக்காத கல்வி வாய்ப்பு தங்களுடைய பிள்ளைகளுக்கு கிடைத்து விட வேண்டும்’ என்று தவிக்கிற பாமர பெற்றோர்களின் பிரதிநிதியாக இருந்து, புதிய கல்வி கொள்கை வரைவு அறிக்கை மீது கவனம் செலுத்துகிறது அகரம். அரசுப்பள்ளி நிர்வாகம், ஆசிரியர்கள், மாணவர்கள் என மூன்று தரப்பினரோடும் இணைந்து கல்விப் பணி ஆற்றிய அனுபவத்தில், தேசிய கல்வி கொள்கை வரைவு அறிக்கையின் மீது போதிய வெளிச்சம் படாமல் இருப்பதை உணர முடிகிறது.

மாணவர்களிடம் தகுதியைத் தீர்மானிக்க ’நுழைவுத் தேர்வுகள்’ வைப்பதில் செலுத்துகிற கவனத்தில் பத்து சதவீகிதம்கூட, அனைத்து மாணவர்களுக்கும் தரமான கல்வி கிடைக்க கவனம் செலுத்தப்படுவதில்லை என்பதே நம் நாட்டின் மோசமான கல்விச் சூழலாக இருக்கிறது. அனைவருக்கும் தரமான, சமமான கல்வி வழங்குவதை உறுதிப்படுத்தாமல் தகுதியான மாணவர்களை மட்டும் எதிர்பார்ப்பது சமூக நீதியை சீர்குலைக்கும் செயல். வளர்ந்த நாடுகளில்  இருப்பதைப் போல ஏழை, பணக்காரர் வித்தியாசமின்றி அனைவருக்குமான ‘பொதுப் பள்ளி’ பற்றி சிந்திக்க வேண்டியவர்கள், ‘கோச்சிங் சென்டர்களை’ அதிகரிக்கும் வழிகளைப் பற்றி அதிகம் சிந்திப்பதையே இந்தக் கல்வி கொள்கையின் வரைவு அறிக்கை காட்டுகிறது. நாட்டின் வளர்ச்சியையும், மாணவர்களின் எதிர்காலத்தையும் தீர்மானிக்கிற கல்வியில், அனைத்துத் தரப்பினரின் பங்கேற்பும் அவசியமாகிறது.   

*ஒவ்வொரு குழந்தைக்கும் 6 -14 வயது வரை கல்வி உரிமை சட்டம் வழங்கிய கல்விப் பாதுகாப்பை,  3 வயது முதல் 18 வயது வரை மாற்றியது உட்பட வரவேற்க வேண்டிய அம்சங்கள் புதிய கல்விக் கொள்கை வரைவு அறிக்கையில் இடம்பெற்று இருக்கின்றன. நல்ல மாற்றங்களை வரவேற்பது போலவே,  குறைபாடுகளைச் சுட்டிக் காட்டுவதும் அவசியமாகிறது. பல கோடி மாணவர்களின் எதிர்காலத்தைத் தீர்மானிக்கிற இக்கல்வி கொள்கை குறித்து, தமிழகக் கல்வியாளர்களுடன் கலந்துரையாடினோம்.

பள்ளிக் கல்வி

ஊட்டச்சத்து மையம், ஆரம்பப் பள்ளி, நடுநிலைப் பள்ளி போன்றவற்றுக்கு பதிலாக ‘ஒருங்கிணைந்த பள்ளி வளாகம்’ என்ற அமைப்பை இந்த வரைவு அறிக்கை பரிந்துரை செய்கிறது. அடிப்படையான வசதிகளோ, தேவையான ஆசிரியர்களோ இல்லாத அந்தப் பள்ளிகளால்  பயன் இல்லை என்பதே அதற்குக் காரணம். தேவையான அடிப்படை வசதிகளை பள்ளிகளில் உருவாக்கித் தருவதுதான் அதற்கு தீர்வாகுமே தவிர, கட்டமைப்பு வசதிகள் குறைவாக இருக்கும் பள்ளிகளை மூடிவிட வழி செய்வது ஏழை மாணவர்களை கடுமையாக பாதிக்கும். ’கிராமப்புற ஏழை மாணவர்களும் படிக்க வேண்டும்’ என்ற அக்கறையில் தமிழகத்தில் அனைத்து கிராமங்களிலும் தொடக்கப் பள்ளிகள் ஆரம்பிக்கப்பட்டன. இந்தப் பள்ளிகளில் மாணவர் சேர்க்கை குறைவதற்கு பல காரணங்கள் உண்டு. அந்தக் காரணங்களைச் சரி செய்வதற்கான தீர்வுகளைத் தருவதே இந்த புதிய கல்விக் கொள்கையாக இருக்க வேண்டும்.

மொழிக் கொள்கையில் தெளிவின்மை

குழந்தைகளுக்கு இருக்கும் கல்விச் சுமையைக் குறைக்க வேண்டும் என்று கல்வியாளர்கள் வலியுறுத்தி வருகின்றனர். இந்தச் சூழலில், 'குழந்தைகள் மூன்று மொழிகளைப் பயில வேண்டும்' என பரிந்துரை செய்கிறது வரைவு அறிக்கை. கல்வி என்பது, பல மொழிகளைக் கற்பிப்பது அல்ல. பயிற்று மொழிக்கான வரைவில், ஐந்தாம் வகுப்புவரை தாய்மொழியில் கற்பிக்கலாம், தேவைப்பட்டால் எட்டாம் வகுப்பு வரை தாய்மொழியில் கற்பிக்கலாம் என்று பொதுவாக குறிப்பிடப்படுகிறது. கணிதமும் அறிவியலும் இரண்டு மொழிகளில் பயிற்றுவிக்கப்படும் என்று குறிப்பிடப்படுவது மேலும் குழப்பத்தை ஏற்படுத்துகிறது.

பாரம்பரியமான பல்வேறு மொழிகளைக் கொண்ட இந்தியாவில், குழந்தைகளின் பயிற்று மொழி பற்றி தெளிவை முன்வைக்காமல், கூடுதல் மொழிகளைக் கற்பிக்க முனைவது குழந்தைகளின் கல்விச் சுமையை மேலும் அதிகரிக்கும். பன்மொழிகள் பேசும் இந்தியா போன்ற நாட்டிற்கு மும்மொழிக் கொள்கையை விட இருமொழிக் கொள்கையை சிறந்ததாக இருக்கும் என்பதை கல்வியாளர்கள் நிறுவி இருக்கின்றனர் என்பது நினைவில் கொள்ளத்தக்கது.

தரத்தை உயரத்தாமல் தகுதியை எதிர்பார்க்கலாமா?

* ஏராளமான தேர்வுகளை இந்த வரைவு அறிக்கை பரிந்துரை செய்கிறது. 3, 5 மற்றும் எட்டாம் வகுப்புகளில் பொதுத் தேர்வு. அதன்பின் 9-ம் வகுப்பு முதல் 12-ம் வகுப்பு வரை நான்கு ஆண்டுகளில் எட்டு செமஸ்டர் தேர்வுகளை மாணவர்கள் எழுத வேண்டும். இத்தனை தேர்வுகளை எழுதுவது மாணவர்களுக்குக் கூடுதல் அழுத்தம் தராதா?

*2017-ம் ஆண்டு கணக்கீட்டின்படி இந்தியாவில் ஆரம்பப் பள்ளியில் மாணவர் சேர்க்கை விகிதம் 95.1 சதவிகிதம். மேல்நிலைக் கல்வி படிக்க வரும்போது அது 51 சதவிகிதமாக குறைந்துவிடுகிறது. தேர்வுகளும், ஆசிரியர் பற்றாக்குறையும்தான் மாணவர்களின் இடைநிற்றலுக்கு மிக முக்கியக் காரணங்களாக இருக்கின்றன.

* அகரம் தன்னார்வலர்கள் தமிழகத்தின் பல பள்ளிகளில் மேற்கொண்ட ஆய்வுகளின்படி, கிராமப்புற அரசுப் பள்ளிகளில் சுமார் 30 சதவிகிதம் அளவுக்கு ஆசிரியர்கள் பற்றாக்குறை இருப்பதை உணரமுடிகிறது.  பாடம் நடத்த ஆசிரியர்களே இல்லாத சூழலில், ஆறு மாதங்களுக்கு ஒருமுறை செமஸ்டர் தேர்வை மாணவர்கள் எப்படி எதிர்கொள்ள முடியும்? இத்தனை தேர்வுகளைப் பரிந்துரை செய்வது, மத்திய அரசு ஏற்கனவே கொண்டுவந்திருக்கும் கல்வி உரிமைச் சட்டத்திற்கு எதிரானது.

* போதிய கட்டமைப்பு வசதிகள் இல்லாத அரசுப் பள்ளிகளின் நிலையை கவனத்தில் கொள்ளாமல், லட்சக்கணக்கில் பணம் கட்டிப் படிக்கிற தனியார் பள்ளிகளை மதிப்பீடாக வைத்து தேர்வுகள் நடத்துவது, கல்வி தனியார் மயமாவதை அரசே ஊக்கப்படுத்துவதாக அமைகிறது. ஏழை மாணவர்களை மட்டுமின்றி  நடுத்தர குடும்பத்தைச் சேர்ந்த மாணவர்களையும், அவர்களின் பெற்றோர்களையும் இது கடுமையாகப் பாதிக்கும்.

கோச்சிங் சென்டர்களை அதிகரிக்கும் கல்விமுறை

* அனைத்து வகை கல்லூரிகள் மற்றும் பல்கலைக்கழகங்களில் சேர்வதற்கு நுழைவுத் தேர்வு கட்டாயம் என்று அறிவிக்கப்பட்டுள்ளது. '15 ஆண்டுகள் பள்ளியில் படித்ததும், அப்போது ஏராளமான தேர்வுகளில் பெற்ற மதிப்பெண்களும் உயர்கல்வி சேர்க்கையின் கணக்கில் எடுத்துக்கொள்ளப்படாது. ஒரே ஒரு நுழைவுத் தேர்வுதான் உயர்கல்வி சேர்க்கையை முடிவு செய்யும்' என்றால், அது பள்ளிக்கல்வியைப் புறக்கணித்து அந்த நுழைவுத் தேர்வு மீது கவனம் செலுத்தும் சூழலை மட்டுமே உருவாக்கும்.

* பிரபலமான தனியார் பள்ளிகளில் கற்பித்தல் புறக்கணிக்கப்பட்டு, நுழைவுத் தேர்வுக்கான  கோச்சிங் சென்டர்களாக ஏற்கனவே உருமாறி வருகின்றன.  இதுபோக பல ஆயிரம் கோடி ரூபாய் புழங்கும் சந்தை தொழிலாக கோச்சிங் சென்டர் நாடு முழுவதும் பெருகி வருகிறது. இந்தச் சூழலில் கல்வி கொள்கை குழுவின் பரிந்துரை, நுழைவுத்தேர்வு பயிற்சி பெறும் வசதி இல்லாத ஏழை மாணவர்களை உயர்கல்வி கனவை தகர்க்கிறது. அடித்தட்டு மக்களின் உயர்கல்வியை மறுக்கும் இன்னொரு இரும்புக் கதவாகவே இந்த நுழைவுத் தேர்வுகள் மாறிவிடும் அபாயம் உள்ளது.

சமூக நீதியின் சமநிலை குலையக்கூடாது

* இந்த ஆண்டு நீட் தேர்வில் அதிக மதிப்பெண்கள் பெற்று தமிழகத்தில் எம்.பி.பி.எஸ் சேர்க்கை பெறுவோரில் சுமார் 60 சதவிகிதம் பேர் கடந்த ஆண்டோ, அதற்கு முந்தைய ஆண்டோ பிளஸ் 2 முடித்தவர்கள். ஏதோ ஒரு தனியார் பயிற்சி நிலையத்தில் சேர்ந்து பயிற்சி எடுத்தே இவர்களில் பலர் மருத்துவம் படிக்கிறார்கள்.  இதுபோன்ற சூழல் எல்லா சேர்க்கைகளுக்கும் வரும் அபாயம் ஏற்படுவது இந்திய உயர்கல்விச் சூழலை மிகவும் மோசமாக்கும். 

வரைமுறையற்ற நுழைவுத் தேர்வுகள் சமூக நீதியின் சமநிலையை குலைத்துவிடும். புதிய கல்வி கொள்கை வரைவு அறிக்கை, இட ஒதுக்கீடு, கிராமப்புற மாணவர்கள், பெண் சமத்துவம் போன்ற சமூக நீதி தேவையை கவனத்தில் கொள்ளவே இல்லை.

13 வயதில் மாணவர்களால் எதிர்காலத்தைத் தீர்மானிக்க முடியுமா?

தொழிற்கல்வி குறித்தும் இந்தக் கல்விக் கொள்கை பேசுகிறது. ஒன்பதாம் வகுப்பிலேயே 'தங்களது எதிர்காலத்தைத் தீர்மானிக்கும் விருப்பப் பாடத் துறையை மாணவர்கள் தேர்வு செய்துகொள்ள வேண்டும்' என்கிறது புதிய கல்வி கொள்கை. தன் விருப்பம் என்ன என்பதைத் தீர்மானிக்கும் பக்குவத்தை 13 வயதில் ஒரு மாணவன் அல்லது மாணவி பெற முடியுமா? கல்லூரி சேரும் பருவத்தில்கூட, எந்தப் பிரிவை எடுப்பது என்ற தெளிவு கிராமப்புற மாணவர்களுக்கு இல்லாந்த சூழலே நிலவுகிறது. 13 வயதிலேயே எதிர்காலத்தைத் தீர்மானிக்க வேண்டும் என்பது, கிராமப்புற மாணவர்களை வகுப்பறைகளிலிருந்து வெளியேற வைத்துவிடும் என்று கவலை தெரிவிக்கின்றனர் கல்வியாளர்கள்.

முரண்பாடான சிந்தனை

* இந்தியாவில் உயர்கல்வி சேர்வோரின் எண்ணிக்கை (Gross Enrollment Ratio) 25.8 சதவிகிதம்தான். ‘இதை 2035-ம் ஆண்டுக்குள் 52 சதவிகிதமாக உயர்த்த வேண்டும்’ என்கிறது தேசிய கல்விக் கொள்கை. சீனாவில் இப்போதே இது 51 சதவிகிதமாகவும், அமெரிக்கா மற்றும் பல ஐரோப்பிய நாடுகளில் 80 சதவிகிதமாகவும் இருக்கிறது. இந்தியாவில் இளைஞர்கள் கல்லூரியில் சேர்வதும் குறைவாக உள்ளது. அதைவிட அவர்கள் படிப்பை முடித்து பட்டம் பெறுவதும் சவாலாக உள்ளது. அப்படி பட்டதாரிகளாக மாறுபவர்களும், வேலைவாய்ப்புகளுக்கு ஏற்ற தகுதியுடன் இருப்பதில்லை என்பது இன்னொரு கூடுதல் பிரச்னை. 

* உயர்கல்வி நிலையங்களில் மாணவர்கள் எண்ணிக்கையை அதிகரிக்க வேண்டும் என்கிற இந்த வரைவு அறிக்கையில், அதற்கான அடிப்படை வசதிகளை எப்படி ஏற்படுத்துவது என்பதை பற்றி எந்த விளக்கமும் இல்லை. பலவிதமான  நுழைவுத் தேர்வுகளைக் கட்டாயம் ஆக்கியும், அருகாமையிலுள்ள கல்வி நிலையங்களை மூடியும், கிராமப்புற அடித்தட்டு மாணவர்களின் உயர்கல்வி வாய்ப்பைப் பறிக்கும் நிலையில், மாணவர்களின் எண்ணிக்கையை எப்படி இரண்டு மடங்கு உயர்த்த முடியும்?

கல்வி மாநிலங்களின் உரிமை

கல்வி என்பது மாநிலங்களின் உரிமை. அதை முழுவதுமாக மத்திய அரசின் கட்டுப்பாட்டிற்கு கொண்டு செல்லும் முயற்சியால் ஏழை மாணவர்களின் எதிர்காலமே கேள்விக்குறியாக மாறும். மாநிலங்களின் செயல்திறனின் குறை இருந்தால் அது களையப்பட வேண்டுமே தவிர, அதிகாரத்தை கைமாற்ற அதை காரணமாக மாற்ற முடியாது. பல்வேறு இன, மொழி, பண்பாட்டு வித்தியாசங்கள் உடைய ஒரு நாட்டில், ஒற்றைத்தன்மை பார்வையுடன் செயல்படக்கூடாது. நாட்டின் அஸ்திவாரமாக விளங்கும் கல்வியில், அதிகாரமோ அரசியலோ நுழையக்கூடாது.

அனைவரும் ஒன்றிணைந்து பங்கேற்போம்

தேசிய கல்விக் கொள்கை வரைவு அறிக்கை மீது பொது மக்கள் ஜூலை 31 வரை கருத்து தெரிவிக்கலாம். கருத்து தெரிவிப்பதற்காக, இந்த வரைவு அறிக்கை  https://innovate.mygov.in/new-education-policy-2019/ என்ற இணையதளத்தில் வெளியிடப்பட்டுள்ளது. நம் குழந்தைகளின் எதிர்காலத்தைத் தீர்மானிக்கப் போகும் இந்தக் கல்விக் கொள்கை பற்றி ஆக்கபூர்வமான விவாதங்கள் அனைத்து தரப்பினராலும் முன்னெடுக்கப்பட வேண்டும்.

கல்வியாளர்கள், ஆசிரியர்கள், அரசியல் மற்றும் சமூக இயக்கங்கள், ஊடகங்கள், பொது மக்கள் என அனைவரும்,  ஒன்றிணைந்து ஏழை மற்றும் கிராமப்புற மாணவர்களின் கல்வி நலனை பாதுகாக்க வேண்டும் என்று அனைவரையும் அகரம் பவுண்டேஷன் பணிவுடன் வேண்டுகிறது.

மாணவர்களின் நலனே முக்கியம்

முக்கியத்துவம் வாய்ந்த இந்தக் கல்வி கொள்கை வரைவு அறிக்கை இந்தியிலும், ஆங்கிலத்தில் மட்டுமே அதிகாரபூர்வமாக வெளியிடப்பட்டது. தமிழ் உள்ளிட்ட மற்ற தேசிய மொழிகளில்கூட அரசு மொழியாக்கம் செய்யவில்லை. இந்த அறிக்கை மீது கருத்துகள் தெரிவிக்க ஒரே மாதம் மட்டுமே கால அவகாசம் வழங்கப்பட்டது.

பல்வேறு தரப்பினரிடமிருந்து கோரிக்கை வரவே, மேலும் ஒரு மாதம் கால அவகாசம் வழங்கப்பட்டிருக்கிறது. நாடு முழுவதும் கல்வியாளர்கள், ஆசிரியர்கள், அறிஞர்களுடன் கலந்துரையாடல் நடத்தி, விரிவான விவாதங்களுக்குப் பிறகே இக்கல்வி கொள்கை நடைமுறைக்கு வரவேண்டும். எந்த நெருக்கடிக்கும் அடிபணியாமல் மாணவர்களின் எதிர்கால நலனை மனதில் கொண்டு செயல்படுவோம்''.

இவ்வாறு சூர்யா தெரிவித்துள்ளார்.

Advt:

போட்டோ கேலரி

Hindu Tamil Thisai - Kindle Edition


[X] Close