[X] Close

கோவை, திருப்பூர் உள்ளிட்ட மாநகராட்சி நீர்நிலைகளில் கழிவுநீர் கலப்பதை தடுக்க நடவடிக்கை; சென்னையில் ரூ.2,371 கோடியில் நீர்நிலை பாதுகாப்பு பணிகள்: சட்டப்பேரவையில் முதல்வர் பழனிசாமி அறிவிப்பு


2-371

  • kamadenu
  • Posted: 12 Jul, 2019 07:54 am
  • அ+ அ-

சென்னையில் கூவம், அடையாறு, பக்கிங்ஹாம் உள்ளிட்ட நீர்நிலைகளில் கழிவுநீர் கலப்பதை தடுப்பது, கழிவுநீர் சுத்திகரிப்பு நிலையங்கள் அமைப்பது உள்ளிட்ட பணிகளை ரூ.2,371 கோடியில் மேற்கொள்ள விரிவான திட்ட அறிக்கை தயாரிக்கப்பட்டுள்ளதாக சட்டப்பேரவையில் முதல்வர் பழனிசாமி அறிவித்தார்.

சட்டப்பேரவையில் நேற்று விதி 110-ன் கீழ் முதல்வர் பழனிசாமி வெளியிட்ட அறிவிப்புகள்:சென்னையில் கூவம், அடையாறு, பக்கிங்ஹாம் கால்வாய் மற்றும் இதைச் சேர்ந்த பிரதான நீரோடைகளில் கழிவுநீர் கலப்பதை தடுப்பது, மாற்று வழிகள் அமைப்பது, இடத்துக்கேற்ப ஆங்காங்கே கழிவுநீர் சுத்திகரிப்பு நிலையங்கள், கழிவுநீர் உந்து நிலையங்கள் அமைப்பது, சென்னையில் தற்போது உள்ள கழிவுநீர் உள்கட்டமைப்புகளை புதுப்பிப்பது, வலுப்படுத்துவது போன்ற பணிகளை செயல்படுத்த சென்னை நதிகள் சீரமைப்பு அறக்கட்டளை மற்றும் சென்னை பெருநகர குடிநீர் வழங்கல் மற்றும் கழிவுநீர் அகற்று வாரியத்தால் விரிவான திட்ட அறிக்கை தயாரிக்கப்பட்டுள்ளது. இதன்படி 2019-23 காலகட்டத்தில் செயல்படுத்தப்படும் இந்த திட்டத்துக்கு ரூ.2,371 கோடி செலவாகும்.

நீர்நிலைகள் மாசுபடுவதை தவிர்ப்பது, தொழிற்சாலை மற்றும்இதர பயன்பாடுகளுக்கு சுத்திகரிக்கப்பட்ட நீரை உபயோகிப்பது, கழிவுநீர் மறுஉபயோகக் குழாய் கட்டமைப்பை தேர்வு செய்வது உள்ளிட்ட வழிமுறைகளைக் கொண்ட ஒருங்கிணைந்த கொள்கை உருவாக்கப்படும்.

கழிவுநீரை சுத்திகரித்து மறுசுழற்சி செய்து பயன்படுத்தும் விதத்தில், சென்னை பெருநகர குடிநீர் வழங்கல், கழிவுநீர் அகற்றுவாரியம் 260 மில்லியன் லிட்டர்கழிவுநீரை 3-ம் நிலை சுத்திகரிப்பு மூலம் சுத்திகரித்து, மறு பயன்பாட்டுக்காக, சென்னை மற்றும் அதை சுற்றியுள்ள நீர்நிலைகளில் விடுவதற்கு விரிவான திட்ட அறிக்கை தயாரிக்கப்படும்.

கோவை, ஈரோடு, திருப்பூர், சேலம், திருச்சி மாநகராட்சிகளில் உள்ள நீர்நிலைகளில் கழிவுநீர் கலப்பதை தடுக்க, கழிவுநீரை சுத்திகரித்து மறுசுழற்சி மூலம் தொழிற்சாலை மற்றும் நிலத்தடிநீர் செறிவூட்டலுக்கான சாத்தியக்கூறுகளை கண்டறிய ஆய்வு செய்யப்பட்டு, விரிவான திட்ட அறிக்கை தயாரிக்கப்படும்.

கோவையில் பேருந்து நிலையம்

தமிழகத்தின் 2-வது பெரிய மாநகராட்சியான கோவையில் போக்குவரத்து நெரிசலை தவிர்க்க,வெள்ளலூரில் 61.62 ஏக்கரில் ரூ.178.26 கோடியில் ஒருங்கிணைந்த நவீன பேருந்து நிலையம் நடப்பு நிதியாண்டில் செயலாக்கத்துக்கு கொண்டு வரப்படும்.

அங்கன்வாடி மையங்களில் முன்பருவக் கல்வி பயில 2 ஜோடி இலவச சீருடை வழங்கும் திட்டம் தருமபுரி, நாமக்கல், ராமநாதபுரம், சேலம், திருவண்ணாமலை, திருவாரூர், விருதுநகர் ஆகிய 7 மாவட்டங்களில் உள்ள அங்கன்வாடி மையங்களுக்கு ரூ.6.51 கோடியில் விரிவுபடுத்தப்படும்.

ஒருங்கிணைந்த குழந்தைகள் வளர்ச்சித் திட்டத்தின் கீழ் நடப்பு ஆண்டில் 1,133 அங்கன்வாடி மைய கட்டிடங்களில் ரூ.22.66கோடியில் சீரமைப்பு பணிகள்மேற்கொள்ளப்படும். அங்கன்வாடிகளுக்கு தேவையான பொருட்களை உடனே வாங்க ஒரு மையத்துக்கு ரூ.3 ஆயிரம் வீதம் 38,489மையங்களுக்கு ஆண்டு பராமரிப்புநிதியாக ரூ.11.55 கோடி வழங்கப்படும். 10,888 அங்கன்வாடி மையங்களுக்கு நாற்காலி, இரும்பு அலமாரி, நீர் வடிகலன் போன்றவை ரூ.10.59 கோடியில் வழங்கப்படும்.

சத்துணவு மையங்களில் தோட்டம்

அங்கன்வாடி மையங்களுக்கு வரும் குழந்தைகள், தாய்மார்களுக்கு ஏற்படும் காய்ச்சல், பேதி, காயம், தோல்தொற்று ஆகியவற்றை சமாளிக்க, எளிதாக பயன்படுத்தும் மருந்துப் பொருட்கள் அடங்கிய மருத்துவப் பெட்டி, கைத்துண்டு, சீப்பு, நகவெட்டி, சோப் அடங்கிய சுகாதாரப் பெட்டியும் 31 மாவட்டங்களில் உள்ள அங்கன்வாடி மையங்களுக்கு நடப்பு ஆண்டில் ரூ.7.35 கோடியில் வழங்கப்படும்.

எம்ஜிஆர் சத்துணவு திட்டத்தின் கீழ் நடப்பு ஆண்டில் 5,970 சத்துணவு மையங்களுக்கு ரூ.8.63கோடியில் சமையல் உபகரணங்கள் வழங்கப்படும். 9,915 சத்துணவு மையங்களில் தலா ரூ.5ஆயிரம் வீதம் ரூ.4.96 கோடியில் தோட்டக்கலைத் துறை உதவியுடன் காய்கறித் தோட்டம் அமைக்கப்படும்.

ராமநாதபுரத்தில் 70 பெண் குழந்தைகளுடன் இயங்கும் அன்னை சத்தியா அரசினர் குழந்தைகள் இல்லத்துக்கு அனைத்து உள்கட்டமைப்பு வசதிகளுடன் கூடிய புதிய கட்டிடம் ரூ.5.28 கோடியில் கட்டப்படும். சென்னைகெல்லீஸில் உள்ள அரசு கூர்நோக்கு இல்லத்துக்கு அனைத்து உள்கட்டமைப்பு வசதிகளுடன் கூடிய புதிய கட்டிடங்கள் ரூ.4.53 கோடியில் கட்டப்படும்.

தஞ்சை, திருச்சி, சேலம், கடலூர், கோவை, மதுரை மாவட்டங்களில் உள்ள 6 அரசு கூர்நோக்கு இல்லங்களை, அவற்றுடன் தொடர்புடைய 16 மாவட்டங்களில் உள்ள இளைஞர் நீதிக் குழுமங்களுடன் காணொலிக் காட்சி மூலம் இணைக்கும் பணிகள் எல்காட் மூலம் ரூ.2.69 கோடியில் மேற்கொள்ளப்படும்.

மாற்றுத்திறனாளிகள் நலன்

அதிக உதவி தேவைப்படும் 800 மாற்றுத்திறனாளிகள், தங்களுடன் ஒரு உதவியாளரை வைத்துக்கொள்ள ஏதுவாக, அவர்களுக்கு மாதாந்திர பராமரிப்புத் தொகையுடன் கூடுதலாக ரூ.1,000 உதவித் தொகை நடப்புநிதியாண்டில் ரூ.96 லட்சம் செலவில் வழங்கப்படும். தசைச்சிதைவு நோயால் பாதிக்கப்பட்டவர்களுக்கான உபகரணங்களுடன் கூடிய பகல் நேர பாதுகாப்பு மையங்கள் கூடுதலாக 10 மாவட்டங்களில் ரூ.2.65 கோடியில் தொடங்கப்படும்.

மாற்றுத்திறனாளிகளின் பொருளாதார மேம்பாட்டுக்காக, கடந்த நிதியாண்டில் ஆவின் பால் பொருள் விற்பனை மையம் அமைக்க 100 மாற்றுத்திறனாளிகளுக்கு முன்பணமான ரூ.25 ஆயிரத்தை அரசே செலுத்தும் திட்டம் செயல்படுத்தப்பட்டது. அந்த முன்பணம் ரூ.25 ஆயிரம், ஆவின் பொருட்களை கொள்முதல் செய்ய ரூ.25 ஆயிரம்என ஒரு பயனாளிக்கு ரூ.50 ஆயிரம்வீதம் 200 பயனாளிகள் பயனடையும் திட்டத்துக்கு நடப்பு ஆண்டில் ரூ.1 கோடி நிதி ஒதுக்கப்படும். இவ்வாறு முதல்வர் அறிவித்தார்.

Advt:

போட்டோ கேலரி

Hindu Tamil Thisai - Kindle Edition


[X] Close