[X] Close

பாஜக மீண்டும் ஆட்சியமைத்தது எப்படி?- மக்களவையில் ஆ.ராசா பேச்சு; முழு உரை


  • kamadenu
  • Posted: 10 Jul, 2019 13:08 pm
  • அ+ அ-

-இணைய தள செய்திப்பிரிவு

பாஜக மீண்டும் ஆட்சியமைத்தது எப்படி என்பது குறித்து மக்களவையில் பட்ஜெட் மீதான விவாதத்தில் திமுக எம்.பி. ஆ.ராசா பேசினார்.

மக்களவையில் பட்ஜெட் மீதான விவாதம் நேற்று (செவ்வாய்க்கிழமை) நடைபெற்றது. அதில் திமுக சார்பில் ஆ.ராசா பேசும்போது, ''பட்ஜெட்டில்  ஆரவாரத்துடன் ஏராளமான வாக்குறுதிகள் தரப்பட்டுள்ளன. ஆனால் அதில் ஒளியில்லை. வாக்குறுதிகள் எப்படி நிறைவேற்றப்படும் என்பதற்கான திட்டங்கள் எதுவும் கூறப்படவில்லை. எனக்குத் தனிப்பட்ட வகையில் பட்ஜெட்டைப் பார்க்கும்போது மிகப்பெரும் வேதனை ஏற்பட்டது.

இந்த மக்களவையில் 15-க்கும் மேற்பட்ட பட்ஜெட் உரைகளை நான் கேட்டிருக்கிறேன். ஆனால் இத்தகைய பட்ஜெட்டை நான் எதிர்கொண்டதில்லை. இந்தியா வேளாண்மை பொருளாதாரத்தை அடிப்படையாகக் கொண்ட நாடு. ஆனால் இந்த அரசு கார்ப்பரேட்டுகள்தான் பொருளாதாரத்தை வளர்ப்பதாக நம்புகிறது.

உள்நாட்டு தொழில்களைச் சார்ந்துதான் நாம் இயங்கவேண்டும். ஆனால் இந்த அரசு அந்நிய முதலீடுகளையே நம்பி இருக்கிறது.

மத்திய நிதியமைச்சர் நிர்மலா சீதாராமன் நாடாளுமன்றத்தில் பட்ஜெட் தாக்கல் செய்து உரையாற்றியபோது, புறநானூற்று பாடலை மேற்கோள்காட்டி பேசினார். அவர் கூறிய புறநானூற்றுப் பாடலை நான் மீண்டும் மீண்டும் படித்துப் பார்த்தேன். அதில் வரி வசூலிக்கும் முறை குறித்து கூறப்பட்டுள்ளது. ஆனால் நாங்கள் கவலைப்படுவது, வரியை எவ்வாறு வசூலிப்பது என்பது பற்றியே. எங்கிருந்து வரியைப் பெறுவது, வரிவிலக்கு அளிப்பது எப்படி என்பது குறித்துதான் கவலைப்படுகிறோம். எனவே இதற்கு சரியான வழிமுறையை திருக்குறளில் இருந்து கூறுகிறேன்.

திருவள்ளுவர் என்ன சொல்கிறார்?

ஈற்றலும் இயற்றலும் காத்தலும் காத்த

வகுத்தலும் வல்ல தரசு

இதன் அர்த்தம் உற்பத்தி செய்தல், சேமித்தல், முதலீடு செய்தல், திட்டமிடுதல்- இந்த நான்கையும் மன்னன் பின்பற்ற வேண்டும். ஆனால் என்னைப் பொருத்தவரை இந்த நான்கு அம்சங்களிலும் பட்ஜெட் தோல்வியடைந்துவிட்டது.

தமிழக அரசு ஏறக்குறைய உங்களின் அரசுதான். ஆனால் தற்போதைய பட்ஜெட்டில் தமிழகத்துக்கான நிதி இடைக்கால பட்ஜெட்டில் ஒதுக்கப்பட்டதில் இருந்து ரூ.1,424 கோடி குறைக்கப்பட்டுள்ளது. மேலும் ஜிஎஸ்டி வரியிலிருந்து மாநிலத்தின் பங்காக 7,214 கோடி ரூபாய் தமிழகத்துக்கு இதுவரை வழங்கப்படவில்லை.

இந்திய வரலாற்றில் முதல்முறையாக இந்த பட்ஜெட்டில் மொத்த செலவு, ஒட்டுமொத்த வருமானம், நிதிப் பற்றாக்குறை உள்ளிட்டவை குறித்து எதுவுமே சொல்லப்படவில்லை. வேலைவாய்ப்பு தொடர்பாக பல்வேறு வாக்குறுதிகளைக் கொடுத்த அரசு, பட்ஜெட்டில் வேலைவாய்ப்பு வழங்குவது குறித்தோ, குடிநீர்ப் பஞ்சத்தை தீர்ப்பது குறித்தோ ஒரு வார்த்தை கூட சொல்லவில்லை. 

கார்ப்பரேட்களின் கடன்களைத் தள்ளுபடி செய்ய ரூ.5.55 லட்சம் கோடியை ஒதுக்கிய அரசு, மாணவர்களின் கல்விக் கடன் குறித்துத் துளியும் கவலைப்படவில்லை. விவசாயத்துக்காக ஒதுக்கப்பட்ட 75 ஆயிரம் கோடி ரூபாய், கடன்களைத் தள்ளுபடி செய்யவோ, விவசாய ஆராய்ச்சிக்காகவோ, சந்தையை நிலைப்படுத்தவோ, விவசாயக் கிடங்குகளை மேம்படுத்தவோ, குறைந்தபட்ச ஆதார விலையை உயர்த்தவோ செலவிடப்படவில்லை. நிலம் உள்ள அல்லது இல்லாத விவசாயிகளுக்கு நேரடியாகக் கொடுக்க இந்த நிதி ஒதுக்கப்பட்டிருக்கிறது. அரசியல் ஆதாயங்களுக்காகவே இது நடந்துள்ளது.

இந்த அரசு, தன்னுடைய செயல்பாட்டால் மீண்டும் ஆட்சிக்கு வரவில்லை. கருப்புப் பணத்தை மீட்டுக் கொண்டுவருவோம்,  10 கோடி வேலைவாய்ப்பு வழங்குவோம், இரட்டை இலக்க ஜிடிபி என்று தான் சொன்ன எதையும் மத்திய அரசு நிறைவேற்றவில்லை. ஆனால் எப்படி மீண்டும் வந்தீர்கள்?

சிலர் இந்துத்துவா, மதம் சார்ந்த காரணங்களைக் கூறலாம். ஆனால் நான் அதைக் கூறவில்லை. நீங்கள் மீண்டும் ஆட்சி அமைக்கக் காரணம், நீங்கள்தான் இந்த நாட்டைப் பாதுகாக்க வந்த ஒரே பாதுகாவலர் என்று மக்களிடையே கட்டமைத்ததுதான்''  என்றார் ஆ.ராசா.

Advt:

போட்டோ கேலரி

Hindu Tamil Thisai - Kindle Edition


[X] Close