[X] Close

நீதிமன்ற அவமதிப்பு வழக்கில் கைதான முன்னாள் சட்டக்கல்லூரி மாணவி நந்தினி, தந்தை ஜாமீனில் விடுவிப்பு


  • kamadenu
  • Posted: 09 Jul, 2019 17:14 pm
  • அ+ அ-

-இ.ஜெகன்நாதன்

சிவகங்கை மாவட்டம் திருப்பத்தூரில் நீதிமன்ற அவமதிப்பு வழக்கில் கைதான மதுரை முன்னாள் சட்டக் கல்லூரி மாணவி நந்தினி, அவரது தந்தை ஜாமினில் விடுவிக்கப்பட்டனர்.

தமிழகத்தில் மதுவிலக்கை வலியுறுத்தி மதுரை முன்னாள் சட்டக் கல்லூரி மாணவி நந்தினியும், அவரது தந்தை ஆனந்தனும் தொடர்ந்து போராடி வருகின்றனர். அவர்கள் 2016-ல் திருப்பத்தூர் பேருந்து நிலையத்தில் அனுமதியின்றி மதுவுக்கு எதிராக துண்டு பிரசுரம் வழங்கினர்.

அப்போது அவர்களை தடுக்க முயன்ற போலீஸாருடன் வாக்குவாதத்தில் ஈடுபட்டனர். இதையடுத்து போலீஸாரை பணி செய்ய விடாமல் தடுத்ததாக நந்தினி, ஆனந்தன் ஆகியோர் மீது திருப்பத்தூர் போலீஸார் வழக்கு பதிந்தனர். இந்த வழக்கு ஜூன் 27-ம் தேதி திருப்பத்தூர் குற்றவியல் நடுவர் மன்றத்தில் விசாரணைக்கு வந்தது.

அப்போது நீதிபதி சாமுண்டீஸ்வரிபிரபா முன்பாக நந்தினியும், ஆனந்தனும் மதுபானம் உணவுப் பொருளா? போதைப் பொருளா?, போதைப் பொருள் என்றால் அதை விற்கும் அரசு தான் குற்றவாளி. ஆனால் எங்கள் மீது வழக்கு போடப்பட்டுள்ளது என ஆவேசமாக பேசினர்.

வழக்கிற்கு சம்பந்தமில்லாத கேள்விகளை கேட்டதால் அவர்கள் மீது திருப்பத்தூர் போலீஸார் நீதிமன்ற அவமதிப்பு வழக்கு பதிந்து கைது செய்தனர். அவர்களை மதுரை மத்திய சிறையில் அடைத்தனர். இதனால் ஜூலை 5-ம் தேதி நந்தினிக்கு நடக்கவிருந்த திருமணம் பாதிக்கப்பட்டது.

இந்நிலையில் நேற்று நந்தினியின் சகோதரியும் மதுரை சட்டக்கல்லூரி இறுதியாண்டு மாணவியுமான நிரஞ்சனா மதுவுக்கு எதிராகவும், நந்தினி, தந்தை ஆனந்தனை விடுவிக்க வலியுறுத்தி மதுரை சட்டக் கல்லூரிக்கு முன்பாக உண்ணாவிரதம் இருக்க முயன்றார். அவரை போலீஸார் கைது செய்து பின்பு விடுவித்தனர்.

இந்நிலையில் இன்று திருப்பத்தூர் நடுவர்மன்றத்தில் நந்தினி, ஆனந்தன் மீதான வழக்கு விசாரணைக்கு வந்தது. அப்போது இருவரையும் ஜாமீனில் விடுவித்து நீதிபதி சாமுண்டீஸ்வரி பிரபா உத்தரவிட்டார். மேலும் போராடுவது சரிதான். போராட்ட முறைதான் தவறானது. சட்டத்திற்கு உட்பட்டு நடந்து கொள்ள வேண்டும் என, நந்தினிக்கு நீதிபதி அறிவுரை வழங்கினார்.

Advt:

போட்டோ கேலரி

Hindu Tamil Thisai - Kindle Edition


[X] Close