டெண்டர் எடுக்கும் முன் அண்ணனை உடனடியாக நேரில் சந்தியுங்கள் என திமுக மாவட்ட செயலாளரைப் பார்க்கச் சொல்லி ஒப்பந்ததாரரிடம் திமுக பிரமுகர் பேசும் ஆடியோ சமூக வலைதளங்களில் தற்போது வைரலாகி வருகிறது.
பாளையங்கோட்டை சட்டப்பேரவை உறுப்பினரும், நெல்லை மத்திய மாவட்ட செயலாளராகவும் இருப்பவர் அப்துல்வகாப். இவரது வலது கரமாக செயல்படுபவர் சதீஷ். இவர் ஒப்பந்ததாரரிடம் பேசுவதாக ஒரு ஆடியோ தற்போது வைரலாகி வருகிறது.
அதில், கடந்த ஆட்சியில் எடுத்த டெண்டருக்கும் தற்போதைய பாளையங்கோட்டை சட்டப்பேரவை உறுப்பினரும், மாவட்ட செயலாளருமான அப்துல் வகாப்பை நேரில் வந்து சந்திக்க வேண்டும் என்று சதீஷ் கூறுகிறார். அத்துடன் ஆறு மாத காலமாக உங்களைத் தொடர்பு கொண்டு நேரில் அண்ணனை சந்திக்கச் சொல்லியும், இதுவரை அண்ணனைச் சந்திக்க வரவில்லை என்றும் கூறுகிறார். அத்தடுத்து வேலைகள் வேண்டுமென்றால் அண்ணனை உடனடியாக நேரில் சந்திக்க வேண்டும் என்று அவர் பேசிய ஆடியோ தற்போது சமூக வலைதளங்களில் வைரலாகி வருகிறது. இந்த ஆடியோ திமுக வட்டாரத்தில் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.