சென்னை மாநகராட்சியில் நீண்டகாலமாக சொத்துவரி செலுத்தாமல் ரூ.25 லட்சத்திற்கும் மேல் நிலுவைத் தொகை வைத்திருக்கும் 39 பேர் பட்டியலை முகவரியுடன் வெளியிட்டுள்ளது. இதனால் நிலுவைத் தொகை வைத்திருப்போர் பொதுவெளியில் தக்கவைத்திருக்கும் கெளரவத்திற்காக விரைந்து தொகையைக் கட்டுவார்கள் என எதிர்பார்க்கப்படுகிறது.
சென்னை மாநகராட்சியானது சொத்துவரி மற்றும் தொழில்வரியின் மூலமே பிரதான வருவாய் ஈட்டி வருகிறது. இந்தத் தொகையின் மூலமே தூய்மைப்பணி உள்ளிட்ட அடிப்படைக் கட்டமைப்பிற்கு நிதி ஒதுக்கப்படுகிறது. சென்னை மாநகராட்சியில் ஒவ்வொரு அரையாண்டின் துவக்கத்தின் முதல் 15 தினங்களுக்குள் சொத்துவரி செலுத்த வேண்டும். கால தாமதத்திற்கு 2 சதவீத வட்டியுடன் வசூலிக்கப்படுகிறது. இந்நிலையில் மாநகராட்சிக்கு செலுத்த வேண்டிய சொத்துவரியை நீண்டகாலமாக செலுத்தாமல் ரூ.25 லட்சத்திற்கும் மேல் பாக்கி வைத்திருக்கும் 39 பேரின் பட்டியலை பெயர், முகவரியுடன் அறிவித்துள்ளது சென்னை மாநகராட்சி.
இதில் தனிநபர்கள் தொடங்கி பெரிய நிறுவனங்கள் வரை உள்ளனர். சுய மதிப்பைக் காக்கும்வகையில் இவர்கள் விரைந்து சொத்துவரியைக் கட்டுவார்கள் என எதிர்பார்க்கப்படுகிறது. ஒருவேளை இனியும் கட்டாவிட்டால் சொத்தை சீல் வைக்கும் முனைப்பிலும் மாநகராட்சி ஈடுபட்டு வருகிறது. அடுத்த கட்டமாக பத்து லட்சத்திற்கும் மேல் சொத்துவரி பாக்கி வைத்திருப்போர் பட்டியலையும் மாநகராட்சி சேகரித்து வருகிறது.