[X] Close

அகில இந்திய தலைமைக்கு ஆயிரம் கண்கள் உண்டு: கராத்தே தியாகராஜனுக்கு கே.எஸ்.அழகிரி பதில்


  • kamadenu
  • Posted: 29 Jun, 2019 15:21 pm
  • அ+ அ-

கருத்துச் சொல்லும்போது பழைய விஷயங்களை பேசக்கூடாது. இன்றுள்ள நிலையில் இந்தக்கூட்டணிக்கு பங்கம் வராத வகையில்தான் பேச வேண்டும். அகில இந்திய தலைமைக்கு ஆயிரம் கண்கள் காதுகள் உள்ளது என கராத்தே தியாகராஜனுக்கு கே.எஸ்.அழகிரி பதிலளித்துள்ளார்.

மற்றவர்களும் கட்சியின் உள்ளே கருத்து கூறும்போது எனது கருத்தை கூறினேன். இதில் என்மீது மட்டும் ஏன் நடவடிக்கை என கராத்தே தியாகராஜன் கூறியிருந்தார். இதற்கு காங்கிரஸ் தலைவர் கே.எஸ்.அழகிரி பதிலளித்துள்ளார்.

செய்தியாளர்களிடம் அவர் பேசியதாவது:

“நிரவ் மோடியின் ஐந்து வங்கிக்கணக்குகளை முடக்கியுள்ளதாக ஆட்சியாளர்கள் அறிவித்துள்ளனர். இது ஆச்சர்யமாக உள்ளது. ஐந்து வங்கிக்கணக்கிலும் பணமே இல்லை. ஐந்து வங்கிக்கணக்குகளிலும் பணமே இல்லாதபோது அதை முடக்குவதன்மூலம் யாருக்கு நன்மை. இதனால் மக்களுக்கு என்ன பயன்.

வெறும் வங்கிக்கணக்குத்தான் உள்ளது. அதில் பணமில்லை. அதை முடக்குவதன்மூலம் நிரவ் மோடிக்கு எந்த பிரச்சினையும் இல்லை. வங்கிக்கணக்குகளை முடக்குவதாக, நிரவ் மோடிக்கு எதிராக நடவடிக்கை எடுப்பதாக மோடி அரசு விளம்பரம் தேடிக்கொள்கிறது. அதை நாங்கள் கடுமையாக கண்டிக்கிறோம்.

காங்கிரஸ் தலைவராக மறுக்கும் ராகுலை தொடர்ந்து எதற்காக தலைவராக நீடிக்கவேண்டும் என கோரிக்கை வைக்கப்படுகிறது?

இது உணர்ச்சிபூர்வமான பிரச்சினைகளை அடிப்படையாக கொண்டுள்ளது. காங்கிரஸ் தொண்டர்களை பொருத்தவரை நேரு குடும்பத்தின்மீது, இந்திரா குடும்பத்தின்மீது உணர்ச்சி ரீதியான தொடர்பைத்தான் வைத்துள்ளார்கள். நானேகூட காஷ்மீர்முதல் கன்னியாகுமரிவரை பார்க்கும்போது அனைவரையும் ஒருங்கிணைத்து செயல்படும் தலைவர்களில் ராகுலைத்தாண்டி வேறு யாரையும் பார்க்கமுடியவில்லை.

உள்ளாட்சித்தேர்தலில் அதிக இடங்களில் போட்டியிட விருப்பம், மாநகராட்சி தேர்தலில் மேயராக போட்டியிட விருப்பம் தெரிவிக்கப்பட்டுள்ளதே?

ஒரு அரசியல் கட்சி என்றால் அந்தக்கட்சிக்கு அனைத்துவிதமான விருப்பங்களும் இருக்கும், எனக்குக்கூட என்னை முதல்வராக்கினால் சந்தோஷமாக ஏற்றுக்கொள்வேன், ஆனால் அதற்கான பலமும் செல்வாக்கும் உள்ளதா? எனப்பார்க்கவேண்டும்.

ஆகவே நாங்கள் ஏழெட்டு கட்சிகள் சேர்ந்து ஒரு கூட்டணியாக இருக்கிறோம். பல கட்சிகள் கூட்டணி உள்ளது. அனைவரும் உட்கார்ந்து பேசித்தான் முடிவு செய்யவேண்டும். மக்களவை தேர்தலில் அப்படித்தான் பேசி முடிவெடுக்கப்பட்டு நடைமுறைப்படுத்தப்பட்டது.

அவர்களது விருப்பத்தை நான் குறைச் சொல்லவில்லை.எனவே உள்ளாட்சித்தேர்தலை நாங்கள் எளிதாக அணுகுவோம். பேசி முடிவு செய்வோம். அதில் பிரச்சினை இல்லை.

உள்ளாட்சி தேர்தலில் தனித்து போட்டி என்ற கருத்து வந்துள்ளதே?

72 மாவட்ட தலைவர்களில் 3 பேர் மட்டுமே அப்படி ஒரு கருத்தை சொன்னார்கள். 72 என்கிற எண்ணிக்கையில் 3 பேர் கருத்து என்பது மிகமிக சிறிய அளவு. ஆகவே அந்தக்கருத்தை தவறு என்று சொல்ல மாட்டேன். அவர்கள் கருத்தை அவர்கள் சொன்னார்கள், அவ்வளவுதான்.

உட்கட்சி கூட்டத்தில் அனைவரும் கருத்துச் சொன்னார்கள், நானும் சொன்னேன் அதற்கு என்மீது மட்டும் நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளதாக கராத்தே தியாகராஜன் கூறியுள்ளாரே?

காங்கிரஸ் கட்சி ஒரு நூற்றாண்டை கடந்த கட்சி.அந்த கட்சிக்கு 2 கண்கள் 2 காதுகள் இல்லை. ஏராளமான கண்கள், ஏராளமான காதுகள் உள்ளன. சென்னை சத்தியமூர்த்திபவனில் என்ன நடக்கிறது என்பதை அவர்கள் அங்கே உட்கார்ந்து தெரிந்துக்கொள்ள முடியும். ஆகவே அதில் என்ன நடந்தது என்ன போனது என்பது பிரச்சினை அல்ல.

என்னுடைய கருத்து நான் யாருக்கும் எதிரானவன் அல்ல. காங்கிரஸ் கட்சிக்கு தமிழகத்தில் சில கட்டுப்பாடுகளை பின்பற்றவேண்டும் என்பது எனது கருத்து.

கட்டுப்பாடு இல்லாத கட்சியை பொதுமக்கள் விரும்ப மாட்டார்கள். முதலில் ஒரு அரசியல் கட்சிக்கு கட்டுப்பாடு, ஒழுக்கம் இருக்கவேண்டும். முதலில் ஒரு கருத்தை சொல்வதற்கு இது உகந்த நேரம்தானா என்பதை யோசித்து பேச வேண்டும்.

ஒரு கருத்தை எப்போது வேண்டுமானாலும் யார் வேண்டுமானாலும் சொல்வதற்கு ஒரு அரசியல் அரங்கம் சரியாக இருக்க முடியாது. இங்கு திராவிட இயக்கம், பொதுவுடமை இயக்கம், தேசிய இயக்கம், தலித் இயக்கம் என ஏராளமான இயக்கங்களுடன் சேர்ந்து ஒரு கூட்டணியை அமைத்துள்ளோம்.

ஒவ்வொருவருக்கும் ஒரு கருத்து உண்டு, ஆனால் இங்கு என்ன விஷயத்தில் ஒன்றாக இருக்கிறோம் என்றால் மதச்சார்பற்ற அணி என்கிற ஒரே கொள்கையால் ஒன்றுப்பட்டுள்ளோம். நாம் பேசும்போது ஐந்து ஆண்டுக்கு முன் என்ன நடந்தது என்று இப்போது பேச கூடாது. 1967-ல் திமுக ஆளுங்கட்சி காங்கிரஸ் பிரதான எதிர்க்கட்சி என்று பேச முடியாது இன்றுள்ள நிலைப்பற்றி மட்டுமே பேச முடியும்.

இவ்வாறு அவர் பதிலளித்தார்.

Advt:

போட்டோ கேலரி

Hindu Tamil Thisai - Kindle Edition


[X] Close