[X] Close

கல்லூரிப் படிப்பைத் தொடர மாணவிக்கு நேரில் நிதியுதவி: நெகிழவைத்த மாவட்ட ஆட்சியர்


  • kamadenu
  • Posted: 28 Jun, 2019 11:20 am
  • அ+ அ-

வசதி இல்லாததால் கல்லூரிப் படிப்பைத் தொடர முடியாத மாணவிக்கு நேரில் நிதியுதவி செய்த திருவண்ணாமலை மாவட்ட ஆட்சியரின் செயல் அனைவரையும் நெகிழ்ச்சியில் ஆழ்த்தியது.

திருவண்ணாமலை மாவட்டம் செங்கம் அருகே, மேலப்பாளையத்தைச் சேர்ந்தவர் உதயகுமார். இவர் புதிய பேருந்து நிலையம் அருகே பூக்கடை நடத்தி வருகிறார். வறுமையான சூழலிலும் தனது மகள் இலக்கியவாணியை அங்குள்ள தனியார் கல்லூரி ஒன்றில் சேர்த்து பி.எஸ்சி நர்சிங் படிக்க வைத்தார்.

பூக்கடையில் வரும் வருமானத்தை வைத்து, இலக்கியவாணியின் குடும்பத்தினர் முதல் இரண்டு ஆண்டுக்கான கட்டணத்தைக் கட்டிவிட்டனர். ஆனால் போதிய வருமானம் இல்லாமல் மூன்றாமாண்டு கட்டணத்தைக் கட்டமுடியவில்லை. ஆகவே கல்லூரிப் படிப்பைத் தொடர முடியாமல் மாணவி தவித்து வந்தார்.

இதனால் வேதனையடைந்த இலக்கியவாணி, தந்தையின் பூக்கடையில் அவருக்கு உதவியாக பூக்கட்டி வந்தார். அத்துடன் தனது நிலை குறித்து, மாவட்ட ஆட்சியர் கந்தசாமிக்கு குறுஞ்செய்தி மூலம் தகவல் அனுப்பினார். அதன் தொடர்ச்சியாக மாவட்ட ஆட்சியர் அலுவலகத்துக்குச் சென்று கோரிக்கை மனுவும் அளித்தார்.

இந்நிலையில் உதயகுமாரின் பூக்கடைக்கு நேரில் சென்ற ஆட்சியர் கந்தசாமி, இலக்கியவாணியிடம் பேசினார். தானும் இலக்கியவாணியோடு சேர்ந்து பூக்கட்டியவாறே குடும்ப சூழலைக் கேட்டறிந்தார். அதைத்தொடர்ந்து ரூ.40,000 கல்வி உதவித்தொகையை வழங்கினார்.

எந்த சூழலிலும் படிப்பை மட்டும் பாதியில் நிறுத்தக்கூடாது என்றும் இலக்கியவாணியிடம் ஆட்சியர் அறிவுறுத்தினார். ஆட்சியர் கந்தசாமியின் நடவடிக்கை அங்கிருந்த பொதுமக்களை நெகிழ்ச்சியில் ஆழ்த்தியது.

Advt:

போட்டோ கேலரி

Hindu Tamil Thisai - Kindle Edition


[X] Close