[X] Close

'குடம் இங்கே; தண்ணீர் எங்கே?'- காலிக்குடத்தை கையில் ஏந்தி ஸ்டாலின் போராட்டம்


  • kamadenu
  • Posted: 24 Jun, 2019 10:49 am
  • அ+ அ-

குடிநீர் தட்டுப்பாட்டைக் கண்டித்தும் தமிழக அரசு உரிய நடவடிக்கை எடுக்கவில்லை என்று விமர்சித்தும் திமுகவின் சார்பில் சென்னை, சேப்பாக்கத்தில் தற்போது ஸ்டாலின் தலைமையில் ஆர்ப்பாட்டம் நடைபெற்று வருகிறது.

பருவமழை பொய்த்த நிலையில், தமிழகம் முழுவதும் தண்ணீர் தட்டுப்பாடு கடுமையாக நிலவுகிறது. குடிநீரை வழங்கிய நீராதாரங்களான ஏரிகள், குளங்கள், கிணறுகளில் பெரும்பாலானவை வற்றிவிட்டன.

இதனால் தலைநகர் சென்னை உட்பட தமிழகத்தின் பல்வேறு பகுதிகளில் குடிநீர் பற்றாக்குறை பெரும் பிரச்சினையாக உருவெடுத்துள்ளது. பல இடங்களில் மக்கள் தினமும் போராட்டங்களை நடத்தி வருகின்றனர். எதிர்க்கட்சியான திமுகவும் தமிழகம் முழுவதும் ஆர்ப்பாட்டம் நடத்தி வருகிறது. அதேநேரத்தில் மழை வேண்டி அதிமுக சார்பில் முக்கியக் கோயில்களில் வருண யாகம் நடத்தப்பட்டது.

குடிநீர்த் தேவையைச் சமாளிக்க வெளிமாவட்டங்கள், வெளி மாநிலங்களில் இருந்து தண்ணீர் கொண்டு வருவது குறித்து தமிழக அரசு பரிசீலித்து வருகிறது. இதற்கிடையே குடிநீர் தட்டுப்பாட்டைக் கண்டித்தும் தமிழக அரசு உரிய நடவடிக்கை எடுக்கவில்லை என்று விமர்சித்தும் திமுகவின் சார்பில் சென்னை, சேப்பாக்கத்தில் தற்போது ஸ்டாலின் தலைமையில் ஆர்ப்பாட்டம் நடைபெற்று வருகிறது.

இந்த ஆர்ப்பாட்டத்தில் திமுக தலைவர் ஸ்டாலினுடன் மத்திய சென்னை தொகுதி எம்.பி. தயாநிதி மாறன், சேப்பாக்கம் தொகுதி எம்எல்ஏ ஜெ.அன்பழகன் உள்ளிட்ட திமுக நிர்வாகிகளும் ஏராளமான தொண்டர்களும் கலந்துகொண்டனர். பொதுமக்களும் கணிசமான அளவில் பங்கேற்றனர். சேப்பாக்கம் விருந்தினர் மாளிகை அருகே இந்த ஆர்ப்பாட்டம் நடைபெற்று வருகிறது.

இந்நிலையில் காலிக் குடங்களை கையில் ஏந்தி ஸ்டாலின் போராட்டத்தில் ஈடுபட்டார். ''குடம் இங்கே; தன்ணீர் எங்கே?'', ''தமிழக அரசே தண்ணீர் கொடு''! என்று கோஷங்களும் எழுப்பப்பட்டன. அந்த வாசகங்கள் அடங்கிய காலிக் குடங்களுடன் திமுக நிர்வாகிகள் ஆர்ப்பாட்டம் நடத்தினர்.

இதுகுறித்துப் பேசிய ஸ்டாலின், ''தண்ணீர் எங்கே, தண்ணீர் எங்கே என்பதுதான் மக்களின் குரலாக தமிழகம் முழுவதும் ஒலிக்கிறது. மக்களின் குரல் முதல்வருக்குக் கேட்கவில்லை. இந்த அரசில் திட்டங்களுக்கும் தொழிற்சாலைகளும், வேலைவாய்ப்புகளுக்கும் பஞ்சம் நிலவுகிறது. நீதிக்கும் பஞ்சம், நேர்மைக்கும் பஞ்சம். அவையனைத்தையும் போல குடிக்கும் தண்ணீருக்குமே பஞ்சம் ஏற்பட்டிருக்கிறது. இதுகுறித்து முதல்வரோ, துணை முதல்வரோ, உள்ளாட்சித் துறை அமைச்சரோ துளியும் கவலை கொள்ளவில்லை. இதனால் மக்களே போராட்டம் நடத்த வேண்டிய நிலை ஏற்பட்டுள்ளது'' என்றார் ஸ்டாலின்.

Advt:

போட்டோ கேலரி

Hindu Tamil Thisai - Kindle Edition


[X] Close