[X] Close

கே.என்.நேரு நினைத்தாலும் உறுதியான திமுக- காங்கிரஸ் கூட்டணியைப் பிரித்துவிட முடியாது; கே.எஸ்.அழகிரி


  • kamadenu
  • Posted: 23 Jun, 2019 19:19 pm
  • அ+ அ-

அழகிரி நினைத்தாலும் அல்லது அண்ணன் நேரு நினைத்தாலும் பிரித்துவிட முடியாத உறுதியான கூட்டணி திமுக- காங்கிரஸ் கூட்டணி என்று தமிழக காங்கிரஸ் தலைவர் கே.எஸ்.அழகிரி தெரிவித்துள்ளார்.

இது தொடர்பாக இன்று அவர் வெளியிட்ட அறிக்கையில், ''தமிழகத்தில் அமைக்கப்பட்ட மதச்சார்பற்ற முற்போக்குக் கூட்டணி என்பது சில நாடாளுமன்ற, சட்டப்பேரவை தொகுதிகளுக்காக அமைக்கப்பட்டதல்ல. இந்தியாவின் இறையாண்மையைக் காக்க வேண்டும்; சாதி மத பேதமற்ற சமதர்ம சமுதாயத்தை அமைக்க வேண்டும்; சமூக நீதியைக் காப்பாற்ற வேண்டும் என்பதற்காக அமைக்கப்பட்டதாகும். இந்தக் கூட்டணியைக் அகில இந்திய காங்கிரஸ் கமிட்டியின் தலைவர் ராகுல் காந்தியும், திமுக தலைவர் ஸ்டாலினும் உயர்ந்த நோக்கத்தோடு அமைத்தார்கள்.

“உடுக்கை இழந்தவன் கைபோல ஆங்கே இடுக்கன் கலைவதாம் நட்பு” என்னும் வள்ளுவரின் வாக்கிற்கிணங்க, இந்தியாவின் பிரதம மந்திரி வேட்பாளராக தலைவர் ராகுல் காந்தியை,  மு.க. ஸ்டாலின் எவ்வித எதிர்பார்ப்பும் இன்றி முன்மொழிந்தார். இதன்மூலம் கோடிக்கணக்கான தேசிய தோழர்களின் இதயத்தில் மு.க. ஸ்டாலின் நீங்கா இடம்பெற்றிருக்கிறார். இந்த வரலாற்று புகழ்பெற்ற கூட்டணியைச் சிலர் சிறு ஆசைக்காகச் சிதைப்பது என்பதை எம்மால் ஏற்றுக்கொள்ள இயலாது.

தனி மனித லாப நஷ்டங்களையும் ஆசைகளையும் தவிர்த்து, சீறிய லட்சியத்திற்காகத் தியாகம் செய்திட வேண்டும் என்பதுதான் தேசிய இயக்கத்தின் உயிர் மூச்சாகும். இன்றைய நிலையில், சாதியையும் மதத்தையும் சொல்லி மக்களின் அறியாமையை மூலக்கருவாகக் கொண்டு, மகாத்மா காந்தியின் இந்தியாவைச் சிதைத்துவிடலாம் என்று சில சக்திகள் நினைக்கிறார்கள்.

அவர்களை எதிர்த்துப் போராடி தேவைப்பட்டால் உயிர்த் தியாகம் செய்வதற்கும் நமது மதச்சார்பற்ற முற்போக்குக் கூட்டணி தயாராக இருக்கவேண்டும் என்பதே நமது லட்சியமாகும். நமது நோக்கத்தை நிறைவேற்றுகிற இடத்தில் இமயமலையே குறுக்கிட்டாலும் அதனை தகர்த்தெறிந்து வெற்றி காண வேண்டிய நாம், இடையில் குறுக்கிடும் சிறுசிறு முற்புதர்களுக்காகத் தயங்கி நிற்க வேண்டிய அவசியமில்லை.

கூட்டணியைப் பற்றியோ, தேர்தல்களைப் பற்றியோ, கூட்டணிக் கட்சிகளோடு பேசுகிற அதிகாரம் காங்கிரஸ் தலைமைக்கு மட்டுமே உண்டு, மற்றவர்கள் அதுபற்றி பேசுதல் கூடாது. தங்களுக்குத் தோன்றும் எண்ணங்களை நேரிலோ, கடிதம் மூலமோ காங்கிரஸ் தலைமைக்குத் தெரிவிக்கலாமே தவிர, ஊடகங்கள் மூலமாக எந்தச் செய்தியையும் யாரும் தெரிவிக்கக் கூடாது. அப்படி கட்டுப்பாடின்றிச் செயல்படுபவர்கள் உடனடியாக கட்சியிலிருந்து அகற்றப்படுவார்கள் என்பதை இதன்மூலம் தெரிவித்துக் கொள்கிறேன்.

திமுகவின் முன்னோடி கே.என். நேரு சில கருத்துகளைச் சொல்லியிருக்கிறார். அது அவருடைய தனிப்பட்ட உரிமை. திமுகவின் தலைமையில் தமிழகத்தில் மதச்சார்பற்ற முற்போக்குக் கூட்டணி அமைக்கப்பட்டதென்பது, தலைவர் ராகுல் காந்தி, ஸ்டாலினின் உதிரத்தால் கையெழுத்திடப் பெற்றதாகும். அதனை அழகிரி நினைத்தாலும் அல்லது அண்ணன் நேரு நினைத்தாலும் பிரித்துவிட முடியாத உறுதியான கூட்டணியாகும்.

தமிழகத்தில் கடந்த தேர்தலில் மதச்சார்பற்ற முற்போக்குக் கூட்டணி பெற்ற வெற்றியைப்போல தொடர்ந்து பல வெற்றிகளைப் பெற அனைவரும் இணைந்து செயல்படுவோம்'' என்று அழகிரி தெரிவித்துள்ளார்.

Advt:

போட்டோ கேலரி

Hindu Tamil Thisai - Kindle Edition


[X] Close