ஹெலிகாப்டர் பயணத்தை திடீரென தவிர்த்த பிரதமர் மோடி: என்ன காரணம்?


திண்டுக்கல் காந்தி கிராம பல்கலைக்கழக பட்டமளிப்பு விழாவில் பங்கேற்று விட்டு ஹெலிகாப்டரில் பிரதமர் மோடி மதுரை செல்ல இருந்த நிலையில் திடீரென அந்த பயணத்தை கைவிட்டுவிட்டு சாலை மார்க்கமாக காரில் செல்கிறார்.

திண்டுக்கல் மாவட்டம், காந்தி கிராம பல்கலைக் கழகத்தின் 36-வது பட்டமளிப்பு விழாவில் பிரதமர் நரேந்திர மோடி, ஆளுநர் ஆர்.என்.ரவி, தமிழக முதல்வர் மு.க.ஸ்டாலின், மத்திய இணை அமைச்சர் எல்.முருகன் மற்றும் தமிழக அமைச்சர்கள் உள்ளிட்டோர் கலந்து கொண்டனர். இசைத் துறை சேவைக்காக இசையமைப்பாளர் இளையராஜாவுக்குக் கௌரவ டாக்டர் பட்டத்தை பிரதமர் மோடி வழங்கினார். அதுபோல் மிருதங்க வித்வான் உமையாள்புரம் காசிவிஸ்வநாத சிவராமனுக்கும் கௌவர டாக்டர் பட்டத்தை மோடி வழங்கினார்.

இதையடுத்து, திண்டுக்கல் காந்தி கிராம பல்கலைக்கழக பட்டமளிப்பு விழாவை முடித்துக்கொண்டு பிரதமர் மோடி ஹெலிகாப்டரில் பயணம் செய்து மதுரை செல்ல இருந்தார். இதனிடையே அந்தப் பகுதியில் கடும் மழை பெய்து வருவதோடு வானிலை மிகவும் மோசமாக இருப்பதாக கூறப்பட்டது. இதையடுத்து ஹெலிகாப்டர் பயணத்தை பிரதமர் மோடி தவிர்த்ததாக கூறப்படுகிறது. அதேநேரம் சாலை மார்க்கமாக அவர் மதுரைக்கு காரில் சென்று கொண்டிருக்கிறார். அவரது காருக்கு முன்னும் பின்னும் பாதுகாப்புக்கு மத்திய தொழில் பாதுகாப்பு படையினர் கூடுதலாக காரில் சென்று கொண்டிருக்கின்றனர். சாலைகளில் ஏதும் தடங்கல் இல்லாத வகையில் போக்குவரத்தை காவல்துறையினர் சீர்செய்துள்ளனர். மதுரை சென்றடையும் பிரதமர் மோடி அங்கிருந்து டெல்லி புறப்பட்டு செல்கிறார்.

x