[X] Close

தினமும் 2 வாளி நீரை மட்டுமே பயன்படுத்துகிறேன்: முதல்வர் பழனிசாமி


2

  • kamadenu
  • Posted: 22 Jun, 2019 08:57 am
  • அ+ அ-

தினந்தோறும் தான் 2 வாளி தண்ணீரை மட்டுமே பயன்படுத்துவதாக முதல்வர் பழனிசாமி விளக்கம் அளித்துள்ளார்.

 

தமிழகத்தில் கடந்த 2 ஆண்டுகளாக பருவமழை போதிய அளவில் பெய்யாத நிலையில், தொடர்ந்து வறட்சி ஏற்பட்டுள்ளது. குறிப்பாக, கடந்த ஆண்டில் தென்மேற்கு மற்றும் வடகிழக்கு பருவமழை குறைவாகவே பெய்தது. இதனால் மாநிலத்தின் பெரும்பாலான பகுதிகளில் நீர்நிலைகள் வற்றி, கடும் குடிநீர் தட்டுப்பாடு நிலவுகிறது. நிலத்தடி நீரும் வெகுவாகக் குறைந்துவிட்டது. குடிநீருக்காக மக்கள் காலி குடங்களுடன் இரவும் பகலும் அலையும் நிலை ஏற்பட்டுள்ளது. பல இடங்களில் போராட்டங்களும் நடந்து வருகின்றன.

 

இந்நிலையில், குடிநீர் பிரச்சினைக்குத் தீர்வு காண்பது தொடர்பாக முதல்வர் கே.பழனிசாமி தலைமையில் சென்னை தலைமைச் செயலகத்தில் நேற்று (வெள்ளிக்கிழமை) ஆய்வுக் கூட்டம் நடந்தது. இதில், அமைச்சர்கள் திண்டுக்கல் சீனிவாசன், கே.ஏ.செங்கோட்டையன், பி.தங்கமணி, எஸ்.பி.வேலுமணி, கே.பி.அன்பழகன், ஆர்.பி.உதய குமார், தலைமைச் செயலர் கிரிஜா வைத்தியநாதன், வருவாய் நிர்வாக ஆணையர் கே.சத்யகோபால் மற்றும் பல்வேறு துறைகளின் செயலர்கள் பங்கேற்றனர்.

 

ஆய்வுக் கூட்டத்தின் முடிவில் செய்தியாளர்களிடம் பேசிய முதல்வர் பழனிசாமி அமைச்சர் வீடுகளுக்கு லாரிகள் மூலம் கூடுதல் தண்ணீர் விநியோகம் செய்யப்படுவது குறித்த குற்றச்சாட்டுக்கு விளக்கமளித்தார். இதுகுறித்துப் பேசிய அவர், ''அமைச்சர்களின் வீடுகளில் 4 பேர் இருப்பார்கள், அவ்வளவுதான். என் வீட்டில், குடும்பத்தினர் அனைவரும் 2 மாதங்கள் ஊரில் இருந்தனர். இரு தினங்களுக்கு முன்புதான் அவர்கள் வீட்டுக்கு வந்தனர்.

 

ஒற்றை ஆளாக நான் ஒரு நாளைக்கு 2 வாளித் தண்ணீரை மட்டுமே பயன்படுத்துகிறேன். 4 லிட்டர் நீர் குடிப்பேன். நான் இரண்டு லாரித் தண்ணீரையும் எடுத்து மூழ்கிக் கொண்டா இருக்கிறேன்?

 

நாட்டு நிலையை அறிந்து எல்லோரும் பேச வேண்டும். முதலமைச்சரோ, அமைச்சரோ அவர்களைச் சந்திக்க ஏராளமானோர் வருவர். வரும் விருந்தினர்களை, அதிகாரிகளை, செய்தியாளர்களைக் கவனிக்க வேண்டும். அவர்களுக்கு தண்ணீர் கொடுக்க வேண்டுமல்லவா?'' என்றார் எடப்பாடி பழனிசாமி.

Advt:

போட்டோ கேலரி

Hindu Tamil Thisai - Kindle Edition


[X] Close