[X] Close

சென்னையில் கடும் வறட்சியால் அம்மா குடிநீருக்கு தட்டுப்பாடு


  • kamadenu
  • Posted: 20 Jun, 2019 07:53 am
  • அ+ அ-

சென்னையில் கடும் வறட்சி காரணமாக அரசின் ‘அம்மா’ குடிநீருக்கு கடும் தட்டுப்பாடு ஏற்பட்டுள்ளதால், தமிழகம் முழுவதும் அதன் விநியோகம் தடைபட்டுள்ளது.

தமிழக முன்னாள் முதல்வர் ஜெயலலிதா, குறைந்த விலையில் தரமான குடிநீர் அனைவருக்கும் கிடைக்கும் வகையில், அம்மா குடிநீர் விற்பனையைத் தொடங்கி வைத்தார்.

அரசு விரைவுப் போக்குவரத்துக் கழகம் சார்பில், அம்மா குடிநீர் விநியோகம் நடைபெறுகிறது. தமிழகம் முழுவதும் பஸ் நிலையங்களில் பயணிகளின் தாகத்தைப் போக்கும் வகையில் ரூ.10 விலைக்கு குடிநீர்பாட்டில் விற்பனை செய்யப்படுகிறது. இதற்கான உற்பத்தி நிலையம் திருவள்ளூர் மாவட்டம் கும்மிடிப்பூண்டி வட்டம் பெட்டிகுப்பம் கிராமத்தில் அமைந்துள்ளது.

தற்போது, சென்னை மற்றும் சுற்றியுள்ள மாவட்டங்களில் வறட்சியாலும், பருவமழை பொய்த்ததாலும் நிலத்தடி நீர்மட்டம் அதள பாதாளத்துக்குச் சென்றதால் கடும் குடிநீர் தட்டுப்பாடு ஏற்பட்டது. இதனால் கும்மிடிப்பூண்டியில் உள்ளஅம்மா குடிநீர் உற்பத்தி நிலையத்திலும் உற்பத்தி வெகுவாக குறைந்துள்ளது. இதனால் தமிழகம் முழுவதும் இதன் விநியோகம் பாதிக்கப்பட்டுள்ளது. இதனால் மதுரை உள்ளிட்ட தென் மாவட்டங்களில் அம்மா குடிநீர் கிடைக்கவில்லை.

மதுரை மாட்டுத்தாவணி பஸ் நிலையத்தில் மட்டும் சொற்ப அளவில் அம்மா குடிநீர் பாட்டில்கள் விற்கப்படுகின்றன. அவையும் பிற்பகலுக்குள் தீர்ந்து விடுவதால் குடிநீர் பாட்டில் கேட்டுவரும் பயணிகளை எதிர்கொள்ள முடியாமல் கடையை அடைத்து விட்டுவிற்பனையாளர்கள் சென்று விடுகின்றனர். சிவகங்கை, ராமநாதபுரம், விருதுநகர் மாவட்டத்தில் உள்ள விற்பனையகங்களுக்கும் விநியோகம் முற்றிலும் நிறுத்தப்பட்டுள்ளது.

இதுகுறித்து அம்மா குடிநீர் விற்பனையாளர் ஒருவர் கூறும்போது, “சென்னையில் குடிநீர் தட்டுப்பாடு உள்ளதால், அங்கிருந்து வரும் அம்மா குடிநீர் வெகுவாக குறைந்துவிட்டது. வழக்கமாக, தினமும் 500 பெட்டிகள் வரும்.

ஒரு பெட்டியில் 12 பாட்டில்கள் இருக்கும். தற்போது 100 பெட்டிகள் மட்டும் வருகின்றன. அதனை மாட்டுத்தாவணி பேருந்து நிலையத்தில் 2 இடங்களிலும், ஆரப்பாளையத்தில் ஒரு இடத்திலும் பகிர்ந்து விற்பனை செய்கிறோம்.

மதுரை மாநகராட்சியில் மட்டும்7 இடங்களில் முன்பு விற்பனை செய்தோம். தற்போது 3 இடங்களில் மட்டும் விற்பனை நடக்கிறது. சிவகங்கை, விருதுநகர், ராமநாதபுரம் உள்ளிட்ட தென் மாவட்டங்களில் அம்மா குடிநீர் விநியோகம் முற்றிலும் நிறுத்தப்பட்டதால் அங்குள்ள கடைகள் மூடப்பட்டுள்ளன” என்றார்.

உதகை, குன்னூரிலும்..

நீலகிரி மாவட்டம் உதகை, குன்னூர் பேருந்து நிலையங்களில் அம்மா குடிநீர் விற்பனை நிலையங்கள் அமைக்கப்பட்டு, குடிநீர் பாட்டில்கள் விற்கப்பட்டு வந்தன.குன்னூர் பேருந்து நிலையத்தில் இயங்கி வந்த அம்மா குடிநீர் விற்பனை நிலையம் திடீரென மூடப்பட்டது. போக்குவரத்து அதிகாரிகள் கூறும்போது, ‘சமவெளிப் பகுதிகளில் நிலவி வரும் தண்ணீர் தட்டுபாட்டால், பாட்டில் குடிநீர் உற்பத்தி நிறுத்தப்பட்டுள்ளது. இதனால் அம்மா விற்பனை நிலையங்களுக்கு தேவைப்படும் குடிநீர் பாட்டில்கள் வரவில்லை. இருப்பு இல்லாததால் விற்பனை நிலையம் மூடப்பட்டுள்ளது’ என்றனர்.

Advt:

போட்டோ கேலரி

Hindu Tamil Thisai - Kindle Edition


[X] Close