[X] Close

நடிகர் சங்கத் தேர்தல் வழக்கு: 2 வாரத்திற்கு ஒத்திவைத்தது உயர் நீதிமன்றம்


2

  • kamadenu
  • Posted: 19 Jun, 2019 13:57 pm
  • அ+ அ-

தென்னிந்திய நடிகர் சங்கத் தேர்தலை சங்கங்களின் பதிவாளர் நிறுத்தி வைத்துள்ளதால், தேர்தலுக்குப் பாதுகாப்பு கோரும் விஷால் மனுவை சென்னை உயர் நீதிமன்றம் இரண்டு வாரங்களுக்குத் தள்ளி வைத்துள்ளது.

தென்னிந்திய நடிகர் சங்கத்திற்கு சென்னை அடையாறு எம்ஜிஆர் ஜானகி கல்லூரியில் ஜூன் 23-ல் நடைபெறவிருந்தது. தேர்தலுக்குத் தேவையான பாதுகாப்பு வழங்க சென்னை காவல் ஆணையருக்கு உத்தரவிடக் கோரி சங்கத்தின் பொதுச்செயலாளர் விஷால் வழக்கு தொடர்ந்திருந்தார்.

அந்த வழக்கு நேற்று நீதிபதி ஆனந்த் வெங்கடேஷ் முன்னிலையில் விசாரணைக்கு வந்தபோது, சென்னை புறநகர் பகுதியில் தேர்தலை நடத்தினால் பாதுகாப்பு வழங்கப்படும் என அரசுத் தரப்பில் தெரிவிக்கப்பட்டது.

பின்னர் நந்தனம் ஒய்.எம்.சி.ஏ. மைதானம், கோடம்பாக்கம் மீனாட்சி கல்லூரி அல்லது வேறு மாற்று இடத்தைத் தேர்வு செய்து தெரிவிக்கும்படி நடிகர் சங்கத்திற்கு நீதிபதி அறிவுறுத்தினார்.

இந்நிலையில் வழக்கு இன்று மீண்டும் விசாரணைக்கு வந்தபோது, சங்கங்களின் பதிவாளர் சார்பில் ஆஜரான அரசு கூடுதல் தலைமை வழக்கறிஞர் பி.ஹெச்.அரவிந்த் பாண்டியன், நடிகர் சங்கத் தேர்தல் தொடர்பாக அதன் உறுப்பினர்கள் பலரிடமிருந்து புகார்கள் பெறப்பட்டதைத் தொடர்ந்து தேர்தலை நிறுத்தி வைத்து தென் சென்னை மாவட்ட சங்கங்களின் பதிவாளர் உத்தரவு பிறப்பித்துள்ளதாகக் கூறி, அந்த உத்தரவைத் தாக்கல் செய்தார். 

அப்போது, தேர்தலே நடத்தக்கூடாது என பதிவாளர் உத்தரவிட்டுள்ள நிலையில், பாதுகாப்பு கோரும் விஷால் வழக்கை தற்போது விசாரிக்க வேண்டிய அவசியமில்லை என காவல்துறை தரப்பில் ஆஜரான அரசு தலைமை குற்றவியல் வழக்கறிஞர் ஏ.நடராஜன் தெரிவித்தார்.

அவற்றைப் பதிவு செய்த நீதிபதி ஆனந்த வெங்கடேஷ், தேர்தல் நடத்தக்கூடாது என்ற உத்தரவு அமலில் உள்ளவரை பாதுகாப்பு கோரிய மனுவை விசாரிப்பதால் பலனில்லை என்றும், ஒருவேளை அந்த உத்தரவிற்கு தடை விதிக்கப்பட்டால் மட்டுமே பாதுகாப்பு கோரும் மனுவை விசாரிப்பதற்கான வாய்ப்புகள் இருக்கும் என கூறி வழக்கை 2 வாரத்திற்கு ஒத்திவைத்தார்.

Advt:

போட்டோ கேலரி

Hindu Tamil Thisai - Kindle Edition


[X] Close