[X] Close

மருத்துவராக விரும்பினால் செல்போனை தொடாதீர்கள்! - நீட் தேர்வில் சாதித்த ஜீவிதா அறிவுறுத்தல்


  • kamadenu
  • Posted: 18 Jun, 2019 12:10 pm
  • அ+ அ-

மருத்துவராக விரும்பினால் செல்போனைத் தொடாதீர்கள் என்று கோவையில் நடைபெற்ற வைத்ய வித்யா தொடக்க விழாவில் மாணவ, மாணவிகளுக்கு அறிவுறுத்தப்பட்டது.  24 மணி நேரமும் செல்போனிலும், சமூக வலைதளங்களிலும் மூழ்கிக் கிடக்கும் இளைய சமுதாயத்துக்கு இந்த அறிவுரை உண்மையிலேயே தேவைப்படும் ஒன்றுதான்!

டாக்டராக வேண்டும் என்ற லட்சியம் இருந்தும்,  பொருளாதார வசதியில்லாத காரணத்தால் நீட் தேர்வுக்கு சிறப்புப் பயிற்சி மேற்கொள்ள முடியாமல் இருப்பவர்களுக்காக இலவச நீட்  தேர்வு பயிற்சியைத் தொடங்கியுள்ளது கோவை ஸ்ரீகிருஷ்ணா ஸ்வீட்ஸ் நிறுவனம். இதற்காக, தனி நுழைவுத் தேர்வு நடத்தி, 11, 12-ம் வகுப்பு பயிலும் 110 மாணவர்களைத் தேர்வு செய்து, அவர்களுக்கான பயிற்சி முகாமைத் தொடங்கியுள்ளது. கோவை ராம் நகரில் உள்ள சபர்பன் பள்ளியில் கடந்த ஞாயிற்றுக்கிழமை இந்தப் பயிற்சி முகாம் தொடங்கியது.

ஜூன் முதல் டிசம்பர் வரை வாரந்தோறும் ஞாயிற்றுக்கிழமை காலை 9 முதல் பகல் ஒரு  மணி வரை 11-ம் வகுப்பு மாணவர்களுக்கும், மதியம் 2 முதல் மாலை 6 மணி வரை 12-ம் வகுப்பு மாணவர்களுக்கும் நீட் தேர்வுக்கான பயிற்சி வழங்கப்படும்.  இந்தப் பயிற்சியை ஐஐடி ஸ்டடி சர்க்கிள் என்ற அமைப்புடன் சேர்ந்து நடத்துகிறது ஸ்ரீகிருஷ்ணா ஸ்வீட்ஸ் நிறுவனம்.

தொடக்க விழாவில், சபர்பன் பள்ளித்  தலைவர் என்.வி.நாதசுப்ரமணியம், தாளாளர் கிருஷ்ணகுமார்,  ஐஐடி ஸ்டடி சர்க்கிள்  நிறுவனர் ஜெயந்தி உள்ளிட்டோர் கலந்துகொண்டனர்.

சென்னை தாம்பரம் அருகேயுள்ள அனகாபுதூர் கிராமத்தில் அரசுப் பள்ளியில் பயின்று, தனது சொந்த முயற்சியால் நீட் தேர்வுக்கு பயிற்சி மேற்கொண்டு  607 மதிப்பெண்களுடன் வெற்றி பெற்ற மாணவி ஜீவிதா, இந்த நிகழ்ச்சியில்   சிறப்பு அழைப்பாளராகப் பங்கேற்றார். மாணவர்களுடன் தனது அனுபவத்தைப் பகிர்ந்துகொண்டார் ஜீவிதா.

“நீட் தேர்வை முதல்முறையாக எழுதியபோது,  365 மதிப்பெண் எடுத்தேன். தனியார் மருத்துவக் கல்லூரியில் படிக்கத்தான் வாய்ப்புக் கிடைத்தது. தனியார் கல்லூரியில் கட்டணம் செலுத்திப் படிக்க வசதியில்லை. எனக்கு எம்எம்சி அல்லது ஸ்டான்லி கல்லூரியில் படிக்க வேண்டும் என்பதே விருப்பம். அதனால் மீண்டும் முயற்சிக்க முடிவு எடுத்தேன்.

மார்க் குறைவானதற்கு, என்ன தவறு செய்தேன் என்று என்னை நானே பரிசீலனை செய்தேன். அதிக நேரத்தை செல்போன், இணையதளங்களில் செலவழித்ததை அறிந்து,  முதலில் செல்போன் தொடுவதையே நிறுத்தினேன். எப்போதும் புத்தகங்களைத் துணையாக்கிக் கொண்டேன். ‘உன்னால் முடியாது, கிடைத்த மதிப்பெண்ணைக் கொண்டு ஏதேனும் டிகிரி படி’  என்றெல்லாம்  என்னைச் சுற்றிய  சொற்களைப் புறந்தள்ளினேன்.

எதிர்மறையாகப்  பேசுபவர்களைப் புறக்கணித்தேன். எப்போதும்,  ‘என்னால் முடியும்’ என்ற நம்பிக்கையை  விதைக்கும் நேர்மறையான சொற்கள் இருக்குமாறு அமைத்துக் கொண்டேன்.  பெற்றோருடன் அதிக நேரம் செலவழித்தேன்.

neet 2.jpg

இணையதளங்களில் ‘மாதிரி நீட் தேர்வு’களில் பங்கெடுத்து,  என்னை சுயபரிசோதனை செய்துகொண்டேன்.  சி.பி.எஸ்.இ.ல் படித்தால்தான் நீட் தேர்வில் வெற்றி பெற முடியும் என்பதெல்லாம் நம்பாதீர்கள். மாநிலப் பாடத் திட்டத்தில், பெரும்பாலான நாட்கள் உட்கார பென்ஞ் வசதிகூட இல்லாத ஒரு அரசுப் பள்ளியில்தான் நான் படித்தேன்.

மாணவர்களான நாம் எத்தனையோ  தேர்வுகளை  எழுதுகிறோம். அதேபோலத்தான் நீட் தேர்வும். மருத்துவராக வேண்டும் என்ற லட்சியம் இருந்தால், இந்த ஒரு வருடத்தை அதற்காக அர்ப்பணித்து கடுமையாக உழைக்க வேண்டும். மருத்துவராக விரும்பினால் செல்போனைத் தொடாதீர்கள். நண்பர்களுடன் அரட்டை, குடும்ப விழாக்கள், பொழுதுபோக்குகளை ஒதுக்கிவிட்டு,  முழு கவனத்துடன் படித்தால் வெற்றி நிச்சயம்.

என்னைப் போன்றோருக்கு இதுபோன்ற நீட் இலவசப் பயிற்சிகள் கிடைக்காததால் மிகவும் சிரமப்பட்டேன். ஆனால், கோவையில் ஶ்ரீகிருஷ்ணா ஸ்வீட்ஸ் நிறுவனம்,  மாணவர்களுக்கு வழங்கும் இந்த வாய்ப்பு எங்களைப் போன்றோர் மனதில் நம்பிக்கையளிக்கிறது. இந்தப் பயிற்சியில் பங்குபெறும் மாணவர்கள் அனைத்து வகுப்புகளிலும் பங்கெடுத்துக் கொண்டு, வெற்றி பெற வேண்டும்” என்றார் ஜீவிதா.

சபர்பன் பள்ளித் தலைவர் என்.வி.நாதசுப்ரமணியம் பேசும்போது, “அரசுப் பள்ளியில் பயிலும், கிராமப்புற மாணவர்களால் நீட் தேர்வில் வெற்றி பெற முடியாது என்ற கூற்றை உடைத்தெறிந்துள்ளார் ஜீவிதா. நீட் தேர்வு என்பது தமிழகத்துக்கு மட்டுமல்ல,   மிகவும் பின்தங்கிய நிலையில் உள்ள  பல மாநிலங்களில் செயல்படும் பள்ளி மாணவர்களுக்கும் பொதுவானதுதான்.

எனவே, ‘நமக்கு மட்டும் ஏன்?’ என்ற மனநிலையில் இருந்து மாணவர்கள் வெளியேவர வேண்டும். நகர்ப்புறங்களைக் காட்டிலும் கிராமப்புற மாணவர்கள் மிகவும் திறமைசாலிகள். பாடங்களை மனப்பாடம் செய்யாமல், புரிந்து படித்தாலே நீட் போன்ற எந்தத் தேர்விலும் வெற்றி பெறலாம்” என்றார்.

Advt:

போட்டோ கேலரி

Hindu Tamil Thisai - Kindle Edition


[X] Close